இந்திய கார்களில் சன்ரூஃப், ADAS, Flush Door Handles தேவையா? இதபடிச்சுட்டு முடிவு எடுங்க!
இந்திய வாகன சந்தையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய உயர் வகை தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சன்ரூஃப், ஏடிஏஎஸ் (ADAS) எனப்படும் ஓட்டுனர் உதவி பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் பிளஷ் டோர் ஹேண்டில்கள் ஆகியவை நவீன கார்களின் முக்கிய விற்பனை புள்ளிகளாக மாறி இருக்கின்றன. ஆனால், இந்த ஆடம்பர வசதிகள் நமது நாட்டின் சாலை நிலைமைகளுக்கும் காலநிலைக்கும் எந்த அளவுக்கு நடைமுறைக்கு ஏற்றவை என்பதை விரிவாக ஆராய வேண்டியது அவசியமாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் கார் வாங்குபவர்களின் மனநிலை வெகுவாக மாறியுள்ளது. வெறும் மைலேஜ் மற்றும் எஞ்சின் செயல்திறனை மட்டும் பார்க்காமல், கார்களில் உள்ள வசதிகளுக்கும் தொழில்நுட்பங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொள்வதற்காக கார் நிறுவனங்கள், உயர் ரக கார்களில் மட்டுமே இருந்த அம்சங்களை தற்போது பட்ஜெட் கார்களிலும் வழங்கத் தொடங்கியுள்ளன. இதனால் காரின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால், இவற்றில் சில அம்சங்கள் இந்திய காலநிலைக்கும், நடைமுறை பயன்பாட்டிற்கும் ஒவ்வாத விஷயமாகவே பார்க்க முடிகிறது.

1. சன்ரூஃப்
தற்போது வெளியாகும் கார்களில் சன்ரூஃப் என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. கேபினுக்குள் அதிக வெளிச்சத்தையும், இயற்கை காற்றையும் வழங்குவதற்கான ஒரு வசதியாக இது இருக்கிறது. எனினும், இந்திய காலநிலையை பொறுத்தவரை ஆண்டின் பெரும்பகுதி வெப்பமும், சாலைகளில் அதிக தூசி, தும்பட்டிகள் நிறைந்ததாகவும் உள்ளது. இதனால் ஜன்னல்களை மூடி ஏசி போட்டு பயணிப்பதே இங்கு வழக்கமாக உள்ளது.
பல வாகன உரிமையாளர்கள் சன்ரூஃப் வழியே தங்கள் குழந்தைகளை வெளியே தலைநீட்ட வைத்து காரை இயக்குவதை பார்க்க முடிகிறது. இது மிகவும் ஆபத்தான செயலாக உள்ளது. திடீர் பிரேக் போடும்போதோ அல்லது விபத்து நிகழும்போதோ இது தீவிர காயங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும், சூரிய ஒளி நேரடியாக கேபினுக்குள் வருவதால் ஏசியின் சுமை அதிகரித்து, காரின் எரிபொருள் சிக்கனமும் குறைகிறது.
ஆரம்பத்தில் கவர்ச்சியாக தெரியும் சன்ரூஃப், சில ஆண்டுகள் கழித்து பராமரிப்பு சவால்களை ஏற்படுத்துகிறது. சன்ரூஃப் பேனலை சுற்றியுள்ள ரப்பர் சீலிங்குகள் அதிக வெயிலால் சேதமடைந்து, மழைக்காலத்தில் காரின் உட்புறத்தில் தண்ணீர் கசியத் தொடங்கும். இது மழை நீரை வெளியேற்றும் வடிகால் குழாய்களில் தூசி அடைத்துக் கொண்டால், கூரையை முழுமையாக பிரித்து சரிசெய்ய வேண்டியிருக்கும். இதற்கு கணிசமான தொகையை செலவிட வேண்டிய சூழல் ஏற்படும்.

2. அடாஸ் (ADAS)
அடுத்து அடாஸ் எனப்படும் மேம்பட்ட ஓட்டுனர் உதவி தொழில்நுட்ப வசதியும் இந்த பட்டியலில் சேர்கிறது. விபத்துகளை தவிர்க்க உதவும் ஒரு நவீன தொழில்நுட்பமாக இது பயன்படுகிறது. நெடுஞ்சாலைகளில் தடம் மாறுதல் குறித்த எச்சரிக்கை தரும் லேன் கீப் அசிஸ்ட், விபத்துக்களை தவிர்க்க உதவும் தானியங்கி அவசர பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களை கணித்து பாதுகாப்பான தூரத்தில் காரை இயக்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் இதில் அடங்கும்.
நான்கு வழி மற்றும் ஆறு வழி அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, ஓட்டுனரின் கவனச்சிதறலால் ஏற்படும் விபத்துகளை தடுக்க இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ற இந்த அடாஸ் தொழில்நுட்பம், நம் நாட்டின் நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் பல நடைமுறை சிக்கல்களை உருவாக்குகிறது. தெளிவற்ற சாலை கோடுகள், ஒழுங்கற்ற போக்குவரத்து, திடீரென சாலையின் குறுக்கே பாயும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் காரணமாக, இந்த அமைப்பு தேவையின்றி திடீர் பிரேக் பிடிக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதனால் பின்னால் வரும் வாகனங்கள் மோதும் அபாயம் அதிகரிப்பதால், பலரும் இதை அணைத்து வைத்தே ஓட்டுகின்றனர். அண்மையில் கூட குறுக்கே ஒரு பாதசாரி கடக்க முயல்வதை கண்டு, எம்ஜி மின்சார கார் தானியங்கி முறையில் அவசர பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த ஹோண்டா கார் மோதி விபத்து ஏற்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. எனவே, நகர்ப்புறங்களில் இதனை அணைத்து வைக்க மறந்துவிட்டால், இதுபோன்ற தேவையற்ற பெரிய விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது.

3. ஃப்ளஷ் டோர் கைப்பிடிகள்
மின்சார வாகனங்கள் மற்றும் நவீன பெட்ரோல், டீசல் கார்களில் கதவுடன் ஒரே அமைப்பாக சமமாக ஒட்டி இருக்கும் பிளஷ் டோர் ஹேண்டில்கள் பிரபலமாகி வருகின்றன. இவை காரின் தோற்றத்தை மிகவும் நேர்த்தியாகவும் நவீனமாகவும் மாற்றுகின்றன. மேலும், காரின் பக்கவாட்டில் காற்றோட்ட தடங்கலை குறைத்து காற்றியக்கவியலை மேம்படுத்த உதவுகின்றன. இது காரின் மைலேஜ் அல்லது எலக்ட்ரிக் காரின் வரம்பை சிறிதளவு அதிகரிக்க துணைபுரிகிறது.
தோற்றத்திற்கு அழகாக இருந்தாலும், பிளஷ் டோர் ஹேண்டில்களில் பல பாதுகாப்பு கேள்விகள் உள்ளன. குறிப்பாக, எலக்ட்ரிக் முறையில் இயங்கும் பாப்-அப் ஹேண்டில்கள் விபத்து காலங்களில் அல்லது பேட்டரி செயலிழக்கும் போது கதவை திறப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பல நாடுகளில்
இத்தகைய கதவு கைப்பிடிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இதன் நம்பகத்தன்மை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
சாதாரண மெக்கானிக்கல் கதவு கைப்பிடிகளை விட, மோட்டார் மற்றும் சென்சார்களுடன் இயங்கும் பிளஷ் டோர் ஹேண்டில்கள் மிகவும் சிக்கலான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. மழை நீர், தூசி அல்லது சேறு இவற்றின் இயக்க அமைப்பிற்குள் சென்றால் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை இந்த கைப்பிடி பழுதடைந்தால், அதை மாற்றும் செலவு சாதாரண கைப்பிடிகளை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

உண்மையில் தேவையா?
இந்த மூன்று ஆடம்பர அம்சங்களும் ஒரு காரின் விலையை கணிசமாக உயர்த்துகின்றன. இதுமட்டுமன்றி, காரில் உள்ள அதிநவீன கேமராக்கள், ராடார்கள் மற்றும் மோட்டார்களின் காரணமாக காப்பீட்டு பிரீமியம் தொகையும் உயர்கிறது. அரிதாக பயன்படுத்தப்படும் அம்சங்களுக்காக இவ்வளவு தொகையை கூடுதல் முதலீடாக செய்வதும், அதன் பின் பராமரிப்பு செலவை ஏற்பதும் சராசரி வாடிக்கையாளருக்கு சுமையாக மாறக்கூடும்.
புதிய கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்கள், வெறும் விளம்பர கவர்ச்சியை மட்டும் பார்த்து முடிவெடுக்கக்கூடாது. உங்கள் அன்றாட பயணத்திற்கு எந்த வசதி உண்மையில் தேவை என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும். எஞ்சின் நம்பகத்தன்மை, பயணத்தில் சவுகரியத்தை அம்சங்கள், சிறந்த கிரவுண்ட் கிளீரன்ஸ்,வலுவான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சி வரவேற்பிற்குரியது என்றாலும், அது நமது நாட்டின் காலநிலை, சாலை கட்டமைப்பு மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பயனுள்ள பாதுகாப்பு அம்சங்களுக்கும், வெறும் காட்சிப் பொருட்களாக இருக்கும் அம்சங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொண்டு, சரியான காரை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனமான கார் உரிமையாளர் அனுபவத்தை உறுதி செய்யும்.


Click it and Unblock the Notifications




