நாடு முழுக்க புதிய எரிபொருளுக்கு பச்சைக் கொடி காட்டிய மத்திய அரசு! பெட்ரோலுக்கு பதிலாக அமல்!
ஒரு துளி பெட்ரோல் கூட கலக்கப்படாத இ100 எரிபொருளுக்கான வழிமுறைகளுக்கு மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் போக்குவரத்து பெட்ரோல், டீசலில் இருந்து மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் மற்றும் எத்தனாலை நோக்கி நகர்ந்து வருகிறது. குறிப்பாக, எத்தனால் தற்சமயம் டிரெண்டிங்கில் உள்ளது. பெட்ரோலில் எத்தனாலை கலந்து விநியோகிப்பதை மத்திய பெட்ரோலியம் துறை கடந்த பல வருடங்களாகவே மேற்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் 10% எத்தனால் மட்டுமே பெட்ரோல் உடன் கலக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வருடங்களாகவே 20% எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது.

இதனை வரும் காலங்களில் 25%, 30% என அதிகரிக்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளது. இதற்கிடையில், அதிக எத்தனாலில் இயங்கக்கூடிய வாகனங்களும் புதியது, புதியதாக உருவாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் பிரபலமான ஸ்பிளெண்டர் மற்றும் எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளை 85% எத்தனால் மற்றும் வெறும் 15% மட்டுமே பெட்ரோல் கலக்கப்பட்ட இ85 எரிபொருளில் இயங்க வகையில் உருவாக்கி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இ85 என்பதும் கூட ஆரம்ப கட்ட முயற்சியே ஆகும். இ100 என்கிற 1% கூட பெட்ரோல் மூலக்கூறுகள் கலக்கப்படாத 100% எத்தனாலில் இயங்கக்கூடிய வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுதான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. அதன் முதற்படியாகவே இ100 எரிபொருளுக்கான வழிமுறைகளுக்கு மத்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்து பேசுகையில், இ100 எரிபொருளை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளில் கடந்த ஜூன் 12ஆம் தேதி அன்று கையெழுத்திட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இது எத்தனாலை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில், மத்திய அரசின் இந்த ஒப்புதலை அடுத்து, முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் பணிகளில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும், அவற்றிற்கான எத்தனாலை விநியோகிப்பதில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களும் தைரியமாகவும், உத்வேகத்துடனும் களமிறங்கும். இ20 எரிபொருளுக்கான திட்டத்தில் விரைவாகவே வெற்றியை பெற்ற உற்சாகத்தில் இ100 எரிபொருளுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் விநியோகம் செய்யப்படும் பெட்ரோல் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இ20 பெட்ரோலாக மாறியது. இதனால், மிகவும் சில மலைப்பிரதேச பகுதிகளை தவிர்த்து, நாட்டில் எங்கு பெட்ரோல் வாங்கினாலும் அங்கு வழங்கப்படுவது இ20 பெட்ரோல் ஆகும். 80% பெட்ரோல் மூலக்கூறுகள் உடன் 20% எத்தனால் மூலக்கூறுகள் கலப்பதன் மூலமாக மட்டுமே வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு மத்திய அரசாங்கத்திற்கு ஏறக்குறைய ரூ.80,000 கோடி செலவு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படியென்றால், முழுவதுமாக 100% எத்தனால் எரிபொருளுக்கு மாறுவதன் மூலம் எவ்வளவு செலவீனங்களை மிச்சப்படுத்தலாம் என்று யோசித்து பாருங்கள். அத்தகைய நிலையை இந்தியா விரைவாக எட்டுவதற்கு உதவியாக நாட்டின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி அதன் வேகன்ஆர் காரை இ100 எரிபொருளில் இயங்கக் கூடியதாக உருவாக்கி சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் ஒன் ஆட்டோமொபைல் நிறுவனங்களான மாருதி சுஸுகி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் அதிக எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கக்கூடிய வாகனங்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளன. மத்திய அரசும் தற்போது இ100 எரிபொருளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பெட்ரோலுக்கு பதிலாக முற்றிலுமாக எத்தனாலுக்கு நாம் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
முகப்பு படம் மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications