இஸ்ரேலில் சிங்கிள் ஆளா ஜொலிக்கிறாரு! ராயல் என்ஃபீல்டு கம்பெனிக்கு இலவச விளம்பரம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாடிய பின் பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஜெருசலேமில் நடைபெற்ற தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) மோட்டார்சைக்கிள் ஒன்றுடன் சேர்ந்து போஸ் கொடுத்தது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராயல் என்ஃபீல்டின் தலைமையகம் இந்தியாவின் சென்னை என்பதால் இந்திய மக்களுக்கு கூடுதல் ஸ்பெஷல் ஆனதாக அமைந்துள்ள இந்த நிகழ்வு, மோடியின் இஸ்ரேல் பயணத்தின் ஓர் அங்கம் ஆகும். இரு தலைவர்களும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளையும், தொடர்ந்து மேம்பட்டு வரும் எதிர்கால தொழில்நுட்பங்களையும் ஆராய்ந்தனர். அப்போது, கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த படங்களில் காணப்படும் அந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள், 'கோன் கிளாசிக் 350' (Goan Classic 350) ஆகும். ராயல் என்ஃபீல்டின் பிரபலமான கிளாசிக் 350 (Classic 350) பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'பாப்பர்-ஸ்டைல்' (Bobber-style) மோட்டார்சைக்கிளான கோன் கிளாசிக் 350, 2024 நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரேயொரு இருக்கையை கொண்ட இந்த பாப்பர்-ஸ்டைல் பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 'ட்ரிப் டீல்' (Trip Teal) என்கிற நீலம் கலந்த பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை என்கிற மூன்று நிறங்களை கொண்ட கலர் ஆப்ஷனில்தான் அதிகம் விளம்பரப்படுத்தியது. தற்போது, பிரதமர் மோடி மற்றும் நெதன்யாகு உடன் காட்சித்தரும் கோன் கிளாசிக் 350 பைக்கும் அதே ட்ரிப் டீல் நிறத்தில்தான் உள்ளது.

கோன் கிளாசிக் 350, ராயல் என்ஃபீல்டின் பிற 350சிசி பைக் மாடல்களில் பயன்படுத்தப்படும் அதே 349சிசி 'ஜெ-சீரிஸ்' சிங்கிள்-சிலிண்டர், ஏர்-ஆயில் கூலிங் என்ஜின் உடன் உருவாக்கப்படுகிறது. இந்த என்ஜின் 6,100 ஆர்பிஎம்-இல் 20.2 பிஹெச்பி ஆற்றலையும், 4,000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
வழக்கமான கிளாசிக் 350 பைக்குடன் ஒப்பிடும்போது, கோன் கிளாசிக் 350 ஒரு தனித்துவமான 'பாப்பர்-ஸ்டைல்' வடிவமைப்பைப் பெறுகிறது. இதில் குட்டையான பின்பக்க ஃபெண்டர், மிதப்பது போன்ற எஃபெக்ட் உடன் ஒரேயொரு இருக்கை மற்றும் சிறிய அளவிலான 'ஏப்-ஹேங்கர்' ஹேண்டில்பார் ஆகியவை அடங்கும். இந்த அம்சங்கள் கோன் கிளாசிக் 350 பைக்கிற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கின்றன.
இந்த மோட்டார்சைக்கிள் ஷேக் பிளாக், பர்ப்பிள் ஹேஸ், ட்ரிப் டீல் மற்றும் ரேவ் ரெட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைகிறது. இதன் எடை 197 கிலோகிராம் ஆகும். இது வழக்கமான கிளாசிக் 350 பைக்கை விட சற்று அதிகம். தொழிற்நுட்ப வசதிகளைப் பொருத்தவரை, இதில் ஃபுல்-எல்இடி விளக்குகள், பயணத்திற்கான வழிக்காட்டுதலுடன் கூடிய செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை, சரிசெய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள், அத்துடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் ஆகியவை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் ஒன்று பட்டிருப்பது, உலகில் எங்கு சென்றாலும் இந்திய தயாரிப்புகளை அவர் முக்கியமாக கவனிப்பதை வெளிக்காட்டுகிறது. மேலும், பாரம்பரியமிக்க வடிவமைப்பு மற்றும் ரெட்ரோ பாணியை விரும்பும் இஸ்ரேலிய ஓட்டுநர்கள் மத்தியில் ராயல் என்ஃபீல்டு குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர் தளத்தை உருவாக்கியுள்ளதையும் இது காட்டுகிறது. ராயல் என்ஃபீல்டு, இறக்குமதி வாயிலாக இஸ்ரேலில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








