இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்... இந்த ரயில் எப்படி இயங்குகிறது?
இந்திய ரயில்வேயின் வரலாற்றில் புதிய அத்யாயம் எழுதப்பட்டுள்ளது. நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கலன் (Hydrogen Fuel Cell) தொழில்நுட்பத்தில் இயங்கும் பயணிகள் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் ஜிந்த் ரயில் நிலையத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை நோக்கி இந்தியா எடுத்து வைத்துள்ள முக்கியமான முன்னேற்றமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
இந்த ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. ஜிந்தி நகரிலிருந்து தினமும் காலை 7:40 மணிக்கு (ரயில் எண் 74010) புறப்படும் இந்த ரயில், காலை 9:40 மணிக்கு சோனிபட்டை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், ரயில் எண் 74009 காலை 10:40 மணிக்கு சோனிபட்டிலிருந்து புறப்பட்டு மதியம் 1:00 மணிக்கு ஜிந்த் வந்தடைகிறது.

இதன் வழித்தடத்தில் ஜிந்த் சிட்டி, பாண்டு பிந்தாரா, லலித் கேரா, பம்பேவா, ஈஷாபூர் கேரி, புடானா, காண்ட்ராய், கோஹானா, ரப்ரா, லாத், மோஹானா மற்றும் பர்வாஸ்னி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது.
இந்த திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம், இது உலகிலேயே அதிக பயணிகள் பெட்டிகளைக் கொண்ட ஹைட்ரஜன் ரயிலாக இருப்பதுதான். தற்போது உலகின் பல நாடுகளில் இயக்கப்படும் ஹைட்ரஜன் ரயில்கள் பொதுவாக 2 அல்லது 3 பெட்டிகளுடன் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தியாவின் இந்த ரயிலில் 10 பயணிகள் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் சுமார் 2,600 பயணிகள் பயணம் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் வடிவமைப்பு வேகம் மணிக்கு 110 கி.மீ. என்றாலும், ஜிந்த்-சோனிபட் பாதையில் பாதுகாப்பு காரணங்களால் அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
ஹைட்ரஜன் ரயில் எப்படி இயங்குகிறது?
சாதாரண மின்சார ரயில்களைப் போல மேல்நிலை மின் கம்பிகளில் இருந்து மின்சாரத்தைப் பெறாமல், இந்த ரயில் தனது மின்சாரத்தை தானே உற்பத்தி செய்து கொள்கிறது. ரயிலில் பொருத்தப்பட்டுள்ள உயர் அழுத்த ஹைட்ரஜன் சிலிண்டர்களில் இருந்து எரிபொருள் கலனுக்கு ஹைட்ரஜன் அனுப்பப்படுகிறது. அதே நேரத்தில் காற்றில் உள்ள ஆக்சிஜனும் உள்ளே செலுத்தப்படுகிறது.
புரோட்டான் பரிமாற்ற சவ்வு (PEM) எரிபொருள் கலனில் நடைபெறும் மின்வேதியியல் வினையின் மூலம் மின்சாரம் உருவாகிறது. அந்த மின்சாரம் இன்வெர்ட்டர் மூலம் மாற்றப்பட்டு ரயிலின் இழுவை மோட்டார்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த முழு செயல்முறையிலும் கார்பன் டைஆக்சைடு அல்லது புகை வெளியேறாது. நீராவி மற்றும் வெப்பம் மட்டுமே வெளியேறும் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.
இந்த ரயிலில் ஹைட்ரஜன் எரிபொருள் கலன்களுடன் லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (LFP) பேட்டரிகளும் இணைக்கப்பட்டுள்ளன. ரயில் வேகமாக இயக்கத் தொடங்கும்போதோ அல்லது ஏற்றப் பாதைகளில் செல்லும்போதோ கூடுதல் மின்சாரத்தை இந்த பேட்டரிகள் வழங்குகின்றன. மேலும், பிரேக் போடும் போது உருவாகும் ஆற்றலை மீண்டும் சேமிக்கும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளது.
ஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு என்பதால் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜிந்த் ரயில் நிலையத்தில் நவீன ஹைட்ரஜன் நிரப்பும் மையம், கசிவு கண்டறியும் கருவிகள், தீ கண்டறியும் சென்சார்கள் மற்றும் உயர் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
உள்நாட்டு தயாரிப்பு
இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம், இதன் தொழில்நுட்பம் முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டு திறனில் உருவாக்கப்பட்டிருப்பதாகும். இதன் மூலம் பசுமை போக்குவரத்து, தொழில்நுட்ப தன்னிறைவு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சிகளில் இந்தியா மேலும் ஒரு முக்கிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
இந்த திட்டம் வெற்றி அடையும்பட்சத்தில், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இந்த ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் சேவையானது விரிவுப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. எரிபொருளால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையில் இந்தியா புதிய அத்யாயத்தில் தடம் பதித்துள்ளது.


Click it and Unblock the Notifications