புல்லட் இரயிலை எதிர்பார்த்தால், இந்தியன் இரயில்வே கொடுக்கும் இரயில்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
ஹைட்ரஜன் மூலமாக இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் இரயில் சேவைக்கு இந்தியன் இரயில்வேஸ் அனுமதி அளித்து இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. மாசு அற்ற இரயில் போக்குவரத்துக்கான ஒருபடியாக பார்க்கப்படும் இந்த ஹைட்ரஜன் இரயில் சேவையை பற்றியும், இந்த சேவையில் பயன்படுத்தப்பட போகும் ஹைட்ரஜன் இரயிலை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஒரு பக்கம் மெட்ரோ இரயில் சேவைகள் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு கொண்டிருக்க, மறுப்பக்கம் அதிவேகமான புல்லட் இரயில் சேவைக்கான பணிகளும் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில் சேவைக்கான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு, தற்போது இந்தியன் இரயில்வேஸிடம் இருந்து அதற்கான அனுமதியும் கிடைக்க பெற்றுள்ளது.

இந்தியன் இரயில்வேயின் வடக்கு இரயில்வே மண்டலத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே நாட்டின் முதல் ஹைட்ரஜன் இரயில் சேவை முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சேவையில், ஹைட்ரஜன் மூலமாக இயங்கக்கூடிய என்ஜின் பெட்டியை கொண்ட 10-பெட்டி இரயில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இரயிலை இயங்க வைக்க ஹைட்ரஜன் எரிபொருள் உந்துவிசை அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
இந்த உந்துவிசை அமைப்பானது மின்வேதியியல் செயல்முறை மூலமாக செயல்படுகிறது. அதாவது, கொடுக்கப்படும் ஹைட்ரஜன் வாயு முதலில் மின்சாரமாக மாற்றப்படும். அந்த மின்சாரத்தின் மூலம் எலெக்ட்ரிக் மோட்டார்களை இயங்க வைத்து இரயில் இயக்கப்படும். எந்த இடத்திலும் மாசுவை வெளியிடாத இந்த ஹைட்ரஜன் எரிபொருள் உந்துவிசை அமைப்பானது இரயில்களில் மட்டுமின்றி, கப்பல்கள் மற்றும் கனரக வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய பவர்டிரெயின் அமைப்பை கொண்ட முதல் ஹைட்ரஜன் இரயில் மேற்கூறப்பட்ட ஹரியானா மாநில வழித்தடத்தில் அதிகப்பட்சமாக மணிக்கு 75கிமீ வேகத்தில் இயங்கப்பட உள்ளது. இதன்படி பார்த்தால், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில் ஆனது மிதவேக இரயிலாகவே செயல்பட உள்ளது. அதாவது, லோக்கல் மின்சார இரயில்களை விட சற்று வேகமாகவும், விரைவு இரயில்களை விட குறைவான வேகத்தில் இயங்கும்.
ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையேயான தூரம் ஏறக்குறைய 89கிமீ ஆகும். இந்த தொலைவை இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில் 1இல் இருந்து 1.5 மணிநேரத்தில் கடந்துவிடும். இந்த ஹைட்ரஜன் இரயில் சேவையின் மூலமாக ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளின் வரிசையில் இந்தியா இணைகிறது.
இந்த ஹைட்ரஜன் இரயில் சேவைக்கான ஹைட்ரஜனை சேமித்து வைக்கும் கிடங்கு மற்றும் இரயிலில் ஹைட்ரஜனை மீண்டும் நிரப்புவதற்கான வசதிகள் ஜிந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. அழுத்தத்திற்கு உள்ளக்கப்பட்ட ஹைட்ரஜன் வாயுவை சேமித்து வைப்பது ஆபத்து நிறைந்தது என்றாலும், முறையான பாதுகாப்பு வழிமுறைகள் செய்யப்பட்டு சேமித்து வைப்பதற்கான தகுந்த உரிமம் பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு சங்கத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
இதற்காக இந்தியன் இரயில்வேஸின் சில உபகரணங்களும், கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, ஹைட்ரஜன் வாயு கசிவை அடையாளம் காணும் கருவி, தீப்பொறியை அடையாளம் காணும் கருவி உள்ளிட்டவற்றை சொல்லலாம். இருப்பினும், சில காலத்திற்கு நிபுணத்துவம் வாய்ந்த தொழிற்நுட்ப பணியாளர்கள் ஹைட்ரஜன் இரயில் உடன் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஹைட்ரஜன் இரயில் சேவை திட்டம் ஆனது நாட்டின் ஆராய்ச்சி கண்டுப்பிடிப்புகள், ஆற்றல் திறன் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து என பல்வேறான முயற்சிகளை உள்ளடக்கியதாக விளங்குகிறது. முதற்கட்டமாக வடக்கு இரயில்வே மண்டலத்தில் கொண்டுவரப்படும் ஹைட்ரஜன் இரயில் சேவை படிப்படியாக நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications