புதிய முதலமைச்சருக்கு சொந்தமாக ஒரேயொரு டொயோட்டா கார்! 1,413 கோடி ரூபாய் சொத்துக்கு ஒரே அதிபதி!
கர்நாடக அரசியலில் புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த கர்நாடகாவை சேர்ந்த சித்தராமையா தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது கர்நாடாவில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய அரசியல் சூழலில் கவனத்தை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து வருகிற மே 30ஆம் தேதி சனிக்கிழமை டிகே சிவக்குமார் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்சமயம் கர்நாடக துணை முதலமைச்சராக பதவி வகிக்கும் டிகே சிவக்குமார் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2023ஆம் ஆண்டின் மத்தியில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த போது முதலமைச்சர் பதவி காலத்தை சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் பகிர்ந்துக் கொள்வர் என கூறப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இடையில் சில சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில், முதலமைச்சராக சரியாக 3 ஆண்டுகள் பதவி வகித்த சித்தராமையா பதவி விலகி உள்ளதால், கட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள டிகே சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது. 2023இல் தேர்தலின் போது, தன்னிடம் 1,413 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளதாக கூறி டிகே சிவக்குமார் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார்.
இத்தனை கோடி ரூபாய் சொத்து வைத்திருந்தாலும், தன்னிடம் ஒரேயொரு டொயோட்டா குவாலிஸ் கார் மட்டுமே உள்ளதாக அவர் கூறியது அந்த சமயத்தில் பலரை அதிர்ச்சியுற செய்தது. டிகே சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்கும் சூழல் உருவாகியுள்ளதால், தற்போது மீண்டும் அந்த 'ஒரேயொரு கார்' விஷயம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

தன்னிடம் உள்ள பழைய டொயோட்டா குவாலிஸ் காரை 21 வருடங்களுக்கு முன்னர் 2002ஆம் ஆண்டில் வாங்கியதாக தனது அப்போதைய வேட்புமனுவில் டிகே சிவக்குமார் குறிப்பிட்டு இருந்தார். தற்போதைய நிலவரப்படி பார்த்தால், டிகே சிவக்குமாரின் டொயோட்டா குவாலிஸ் கார் சுமார் 24 வருட பழையதாகும். இதனால், இன்னும் அந்த குவாலிஸ் கார் பயன்பாட்டில் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவே.
2023இல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட போது இந்த டொயோட்டா குவாலிஸ் காருக்கான மதிப்பாக ரூ.8.35 லட்சம் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு சமயத்தில் இந்தியாவில் பிரபலமான டொயோட்டா கார்களுள் ஒன்றாக குவாலிஸ் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், இந்திய சந்தையில் டொயோட்டா பிராண்டை பிரபலமாக்கிய கார் மாடல்களுள் குவாலிஸும் ஒன்றாகும்.
டொயோட்டா மற்றும் கிர்லோஸ்கர் க்ரூப் இணைந்து உருவாக்கிய இந்த கார், டாடா மோட்டார்ஸின் சுமோ மற்றும் மஹிந்திராவின் பொலேரோ போன்ற மற்ற பிரபலமான கார்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கியது. பவர்ஃபுல்லான என்ஜினை கொண்டிருப்பினும் சிறந்த மைலேஜை குவாலிஸ் கார்கள் வழங்கின. விற்பனை நிறுத்தப்பட்டு பல வருடங்களாகி விட்டதால் இப்போது குவாலிஸ் கார்களை சாலையில் பார்க்க முடிவதில்லை.
குறைவான பராமரிப்பு செலவு மற்றும் நம்பகமான செயல்படுதிறன் உள்ளிட்டவை தான் டொயோட்டா குவாலிஸின் பிரதானமான அடையாளங்கள் ஆகும். இதனால், பெரிய குடும்பமாக வசிப்பவர்கள் மற்றும் தொலைத்தூர பயணங்களை அவ்வப்போது மேற்கொள்பவர்களின் பிரதானமான தேர்வாக குவாலிஸ் விளங்கியது. FS, GS மற்றும் GST என்கிற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்ட குவாலிஸ் ரூ.5 லட்சத்திற்குள் ஆரம்ப விலையை கொண்டிருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய பழமையான டொயோட்டா காரை புதிய கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க போகும் டிகே சிவக்குமார் அவர்கள் வைத்திருப்பது, இந்த காருடனான அவரது பிணைப்பை காட்டுகிறது. இருப்பினும், 15 வருடங்களுக்கு மேல் பழைய கார்களை பயன்படுத்த வேண்டாம் என மக்களிடம் மத்திய அரசு வலியுறுத்தி வரும் வேளையில், டிகே சிவக்குமாரிடம் இவ்வாறு ஒரு 24 வருட பழைய கார் இருப்பது நேர்மாறாக உள்ளது. தனது குவாலிஸ் காரை டிகே சிவக்குமார் ஞாபக அர்த்தமாக, பயன்படுத்தாமல் பத்திரப்படுத்தி வைத்துள்ளார் என நம்புகிறோம்.
கூடுதலாக ஒரு படம் சேர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications