பைக் டாக்ஸிகளுக்கு தடை? ஆட்டோ டிரைவர்கள் காட்ல பண மழை பெய்ய போகுது! அரசின் திடீர் முடிவால் பரபரப்பு!
இந்தியாவின் பெரு நகரங்களில், பைக் டாக்ஸி (Bike Taxi) சேவைகளுக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆட்டோ (Auto), கேப் (Cab) ஆகியவற்றை விட கட்டணம் மிகவும் குறைவு என்பதுதான் இதற்கு காரணம். ஆனால் பைக் டாக்ஸியால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ மற்றும் கேப் டிரைவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஆட்டோ மற்றும் கேப் போன்ற வாகனங்களால் மஞ்சள் நிற நம்பர் பிளேட் உடன் இயங்கும்போது, பைக் டாக்ஸிகள் மட்டும் ஏன் வெள்ளை நிற நம்பர் பிளேட்டில் இயங்க வேண்டும்? என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே அவ்வப்போது பைக் டாக்ஸி இயக்குபவர்களுக்கும், ஆட்டோ மற்றும் கேப்களை இயக்குபவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

ஆட்டோ மற்றும் கேப்களின் டிரைவர்கள், பைக் டாக்ஸிகளின் டிரைவர்களை தாக்கிய சம்பவங்களை கடந்த காலங்களில் நாம் நிறைய முறை பார்த்துள்ளோம். குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் (Bangalore) இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் ஆட்டோ, கேப் டிரைவர்களால் மட்டுமல்லாது, அரசாங்கத்தாலும் பைக் டாக்ஸிகளை இயக்குபவர்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்கப்படுவதும், பின்னர் அந்த தடை விலக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த வரிசையில் தடை விதிக்கப்பட்டிருந்த பைக் டாக்ஸி சேவையை மீண்டும் தொடரலாம் என கடந்த ஜனவரி மாதம் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் இந்த தீர்ப்பு, கர்நாடக மாநில அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக மாநில அரசு தற்போது முடிவு செய்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, அம்மாநில போக்குவரத்து துறைக்கு கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா அனுமதி வழங்கியுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், பைக் டாக்ஸிகளை நிர்வகிப்பதற்கு முறையான விதிமுறைகள் எதுவும் இல்லை. இதைதான் கர்நாடாக அரசு உச்ச நீதிமன்றத்தில் தங்களது முக்கியமான வாதமாக எடுத்து வைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் முறையான விதிமுறைகள் எதுவும் இல்லாமல், பைக் டாக்ஸிகளை நிர்வகிப்பது மிகவும் கடினம். அதேபோல் பைக் டாக்ஸி நிறுவனங்களும், உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை வலுவாக எடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வர போகிறது? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பைக் டாக்ஸி சேவையால் மக்களுக்கு செலவு குறைந்துள்ளது. அத்துடன் பைக் டாக்ஸி சேவையால் பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையும் கூட ஓரளவிற்கு குறைந்துள்ளது. அதாவது ஒருவர் ஆட்டோ அல்லது கேப் போன்ற பெரிய வாகனங்களில் செல்வதை விட, பைக் போன்ற சிறிய வாகனங்களில் சென்றால், போக்குவரத்து நெரிசல் குறையும்.
எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூர் போன்ற நகரங்களுக்கு, பைக் டாக்ஸி சேவைகள் மிகவும் அவசியம். ஒருவேளை பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்கப்பட்டால், பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை அதிகமாகலாம். எனவே தெளிவான விதிமுறைகளை வகுத்து விட்டு, பைக் டாக்ஸி சேவை தடையின்றி தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications