முதல் மாருதி எலெக்ட்ரிக் கார் யாருக்கும் கிடைக்கலனு யாருங்க சொன்னது? ஷோரூமில் நிறுத்தி வைக்க இடமில்ல!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆக இ-விட்டாரா (e-Vitara) அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல் மாருதி எலெக்ட்ரிக் கார் என்பதினாலேயே பலரும் இந்த காரை ஆர்வத்துடன் புக் செய்து டெலிவிரி (Delivery) பெற்று வருகின்றனர். இதனால், மாருதி டீலர்களும் தினந்தோறும் அதிக எண்ணிக்கையிலான இ-விட்டாரா கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தெலுங்கானாவில் மாருதி சுஸுகியின் நெக்ஸா (Nexa) டீலர்ஷிப் ஷோரூம் ஒன்று புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாளில் 108 இ-விட்டாரா எலெக்ட்ரிக் கார்களை டெலிவிரி செய்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இது தொடர்பான படங்கள் 'வாஹன் வர்தா' (Vahan Warta) என்கிற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

இந்த படத்தில், வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய வளாகம் ஒன்றினுள் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்-நியூ இ-விட்டாரா கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம். பின்னர் சிறிய நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக, சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு இ-விட்டாரா கார்களாக டெலிவிரி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒரே நாளில், ஒரே இடத்தில் இருந்து 108 இ-விட்டாரா கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதால், இந்த கார்கள் அனைத்தும் ஒரே டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாக டெலிவிரி செய்யப்பட்டதா என்கிற சந்தேகம் எழுகிறது.
சில நேரங்களில், பல டீலர்ஷிப் ஷோரூம்கள் ஒன்றாக இணைந்து கார்களை நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக டெலிவிரி செய்வது உண்டு. ஏனெனில், இதன் மூலமாக அந்த ஷோரூம்களுக்கு பெரிய விளம்பரம் கிடைக்கும் அல்லவா. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கார்கள் டெலிவிரி செய்யப்படுவதால், இந்த மாதத்தில் மாருதி சுஸுகி இ-விட்டாரா கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகமாக பதிவாகும்.

தற்போது வரையில், எத்தனை இ-விட்டாரா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது என்கிற விபரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற பெட்ரோல், சிஎன்ஜி (CNG) கார்களின் அசெம்பிள் (Assemble) பணிகளால் இ-விட்டாரா கார்களை உற்பத்தி செய்வதில் சில இடையூறுகளை சந்தித்து வருவதாக மட்டும் மாருதி சுஸுகி முன்னதாக தெரிவித்து இருந்தது.
இ-விட்டாராவை பற்றி சொல்ல வேண்டுமென்றால், மாருதியின் இந்த எலெக்ட்ரிக் கார் ஆனது ஜப்பானிய சுஸுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட்-இ (HEARTECT-e) பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கேட்போர்டு வடிவமைப்பிலான பிளாட்ஃபாரம் ஆன இது பிரத்யேகமாக எலெக்ட்ரிக் கார்களுக்கு என்றே வடிவமைக்கப்பட்டது ஆகும். இந்த காரின் முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் பளபளப்பான கருப்பு நிறத்திலான முன்பக்க க்ரில் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
காரின் பின்பக்கத்தில், தெளிவான லென்ஸ் கொண்ட டெயில்லேம்ப்களை லைட் ஸ்ட்ரிப் ஒன்று இணைக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இ-விட்டாரா ஆனது சற்று பிரீமியம் தரத்திலான கார் என்பதினாலேயே இந்த காரை தனது பிரீமியம் கார் விற்பனை மையங்களான நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக மாருதி சுஸுகி விற்பனை செய்கிறது.
இருப்பினும், மற்ற நெக்ஸா கார்கள் உடன் ஒப்பிடுகையில் இ-விட்டாராவில் வித்தியாசமான டிசைனில் கேபின் வழங்கப்படுகிறது. 49kWh மற்றும் 61kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இ-விட்டாரா விற்பனை செய்யப்படுகிறது. BaaS ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்படும் இ-விட்டாராவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் BaaS ஆப்ஷனில் ரூ.10.99 லட்சத்தில் இருந்து ரூ.14.51 லட்சம் வரையிலும், BaaS ஆப்ஷன் இல்லாமல் ரூ.15.99 லட்சம்- ரூ.20.01 லட்சம் வரையிலும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா கடந்த பிப்ரவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும், டெலிவிரிகள் நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய் கொண்டே வந்தது. இதனால், ஒரு பக்கம் புக்கிங் குவிந்த நிலையில், அதனை சரிச்செய்ய தற்போது கஸ்டமர்களுக்கு இவ்வாறு குறுகிய நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான இ-விட்டாரா கார்கள் டெலிவிரி செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








