வீடியோவில் காரின் நம்பர் பிளேட்டை வைத்து பிடித்த போலீசார்! சம்பவம் நடந்து 3 மாதத்திற்கு பின் சிக்கிய தந்தை!
சிறுவர்களை கார் ஓட்ட அனுமதிப்பது சட்டத்திற்கு புறமானது ஆகும். அதுவும், எம்ஜி சைபர்ஸ்டர் போன்ற விலையுயர்ந்த மற்றும் அதிவேகமான ஸ்போர்ட்ஸ் காரை ஓட்ட அனுமதிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். அத்தகைய குற்றத்தை செய்தற்காக 11 வயது சிறுவனின் தந்தை ஒருவர் ஹைதராபாத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் உரிய வயதை எட்டுவதற்கு முன்பே வாகனங்களை ஓட்டுபவர்கள் ஏராளம். அத்தகையவர்களின் எண்ணிக்கையை குறைக்க போலீசார் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், ஒருபக்கம் அவ்வாறு சிறு வயதில் வாகனங்களை ஓட்டுபவர்கள் புதியது, புதியதாக முளைத்துக் கொண்டே இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், சில பெற்றோர்களே வாகனங்களை சிறுவர்களிடம் கொடுத்து வேடிக்கை பார்ப்பது ஆகும்.

அப்படித்தான், ஹைதராபாத்தில் ஒருவர் தனது 11 வயது மகனை எம்ஜி சைபர்ஸ்டர் என்கிற அதிவேகமாக இயங்கக்கூடிய காரை ஓட்ட அனுமதித்துள்ளார். அப்போது அவரும் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். கன்வெர்டபிள் வகையை சேர்ந்த காரான சைபர்ஸ்டரின் மேற்கூரையை திறந்து வைத்துக் கொண்டு காரை ஓட்ட சிறுவனை அனுமதித்துள்ளார்.
ஹைதராபாத்தின் அவுட்டர் ரிங் சாலையில் இரவு நேரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோ 'AVM நியூஸ்7' என்கிற எக்ஸ் பக்கத்தின் மூலம் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த செயலில் பயன்படுத்தப்பட்ட ஆண்டெஸ் கிரே நிறத்திலான எம்ஜி சைபர்ஸ்டர் காரும் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரிவு 181-இன் கீழ் தகுந்த உரிமம் இல்லாமல் காரை ஓட்டியது, பிரிவு 177-இன் கீழ் பொது விதிமீறல்கள் மற்றும் BNS பிரிவு 281-இன் கீழ் ஆக்ரோஷமாக மற்றும் மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட நபரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியதுபோல், சிறுவர்களை கார் ஓட்ட அனுமதிப்பதே முதலில் தவறு; அதுவும் எம்ஜி சைபர்ஸ்டர் போன்ற அதிவேகமாக இயங்கக்கூடிய காரை பொது சாலையில் ஓட்ட அனுமதிப்பது பெருங்குற்றம் ஆகும். ரூ.85 லட்சம் என்கிற அளவில் விலையை கொண்டுள்ள இது ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த காரின் முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன.
இவை இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக சுமார் 510 பிஎச்பி மற்றும் 725 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. இதன் மூலமாக 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை இந்த காரில் வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 200கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைதராபாத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் இப்போது நடந்தது கிடையாது; கடந்த மார்ச் 8ஆம் தேதி நடந்து ஆகும். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானதை தொடர்ந்து, காவல்துறையினரால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்ஜி சைபர்ஸ்டர் போன்ற அதிவேகமான காரில் 11 வயது சிறுவன் தவறுதலாக அதிகமாக ஆக்ஸலரேஷனை கொடுத்தால் பெரும் விபத்து நடக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications