சம்பளமே ஒழுங்கா குடுக்காத ஓனர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனுஷனா! இதை ஊழியர்கள் ஆயுசுக்கும் மறக்க மாட்டாங்க!
மேற்கத்திய நாடுகள் உடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களால், அதன் ஊழியர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் மோசமாக இருப்பதாக, நீண்ட காலமாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதாவது இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் மீது, ஊழியர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்காதது போன்ற பல்வேறு புகார்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் இதற்கு முற்றிலும் விதிவிலக்காக உள்ளன. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரின் அதிகபட்ச மகிழ்ச்சி என்னவாக இருக்கும்? அவரது உழைப்பு அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் பரிசுகள் வழங்கப்படுவதுதான், கண்டிப்பாக ஒரு ஊழியரின் அதிகபட்ச மகிழ்ச்சியாக இருக்கும்.

இதை ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மிகவும் சரியாக செய்து வருகின்றன. அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் எம்ஐடிஎஸ் குழுமம் (MITS Group). ஹரியானாவை (Haryana) சேர்ந்த எம்ஐடிஎஸ் குழுமம், மருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனம் ஆகும். அத்துடன் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் என்டர்டெயின்மெண்ட் போன்ற தொழில்களையும் எம்ஐடிஎஸ் குழுமம் மேற்கொண்டு வருகிறது.
எம்ஐடிஎஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக இருப்பவர் எம்கே பாட்டியா (MK Bhatia) ஆவார். கடந்த 2002ம் ஆண்டு, அவரது மருந்து தொழிலில் மிக கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் திவால் ஆனார். எனினும் மனம் தளராமல், தொடர்ந்து விடாமுயற்சியுடன் அவர் போராடினார்.

இதன் விளைவாக கடந்த 2015ம் ஆண்டு, எம்ஐடிஎஸ் குழுமத்தை அவர் தோற்றுவித்தார். தற்போது இந்த குழுமம், மிகப்பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. எம்கே பாட்டியாவின் இந்த வளர்ச்சிக்கு, அவரிடம் பணியாற்றும் ஊழியர்களும் ஒரு காரணம். எனவே அவர் ஊழியர்களை மகிழ்விக்க ஒரு போதும் தவறுவது இல்லை.
கடந்த 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டபோது, சிறப்பாக பணியாற்றிய 51 ஊழியர்களுக்கு, மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) போன்ற கார்களை எல்லாம், எம்கே பாட்டியா பரிசாக வழங்கினார். ஆனால் அவர் அத்துடன் நிற்கவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது 6 ஊழியர்களுக்கு, நிஸான் மேக்னைட் (Nissan Magnite) கார்களை பரிசாக வழங்கி, அவர்களை எம்கே பாட்டியா மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இதற்காக எம்கே பாட்டியாவிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ, கியா சொனெட், டாடா பன்ச் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய அனைத்துமே இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்கள் ஆகும். இந்த கார்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால், இவை அனைத்துமே எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவைதான்.
இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் ஆரம்ப விலை 12.98 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை 7.30 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை 5.50 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை 5.62 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை அனைத்துமே மஹிந்திரா, கியா, டாடா மோட்டார்ஸ் மற்றும் நிஸான் இந்தியா ஆகிய நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். எம்கே பாட்டியா, அவரது ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட கார்களின் எந்த வேரியண்ட்களை பரிசாக வழங்கினார்? என்பது உறுதியாக தெரியவில்லை.
ஒருவேளை டாப் வேரியண்ட்கள் என்றால், அவற்றின் விலை இன்னும் அதிகமாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது போன்ற விலை உயர்ந்த பரிசுகளை எல்லாம், ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு வழங்குவது என்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








