மோடி–புதின் பயணித்த கார் இதுதான்... Rolls-Royce காருக்கே 'டஃப்' கொடுக்கும் ரஷ்ய அதிபரின் கார்!!
பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஒரே காரில் பயணித்த காட்சிகள் தற்போது இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றுள்ளன. கிர்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச நாடோடி விளையாட்டுப் போட்டிகளுக்கு பிஷ்கேக் அரேனா அரங்கிற்கு இரு தலைவர்களும் சென்றபோது பயன்படுத்தப்பட்ட இந்த கார் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. ஆரஸ் செனட் (Aurus Senat) என்ற இந்த பிரம்மாண்ட காரில் எக்கச்சக்கமான பாதுகாப்பு மற்றும் சொகுசு அம்சங்களை கலந்து கட்டி உருவாக்கி இருக்கின்றனர்.
லிமோசின் ரக கார்
வெளியில் பார்க்கும்போது இது ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் பென்ட்லீ போன்ற அல்ட்ரா லக்சுரி சொகுசுக் கார்களைப் போல பிரம்மாண்டமாகத் தெரிந்தாலும், இது ரஷ்யாவிலேயே டிசைன் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஆரஸ் நிறுவனத்தின் லிமோசின் எனப்படும் அதிக நீளம் கொண்ட மாடல் உருவாக்கப்பட்டு ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்படுகிறது. ரஷ்ய அதிபரின் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் இந்த நிறுவன்ததின் கார்கள் பயன்படுத்தப்படுவதாக ஆரஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

பாதுகாப்பு தர ரேட்டிங்
மோடி-புடின் பயணத்தில் பயன்படுத்தப்பட்ட கார் மாடலான ஆரஸ் செனட், அதன் குடும்பத்தில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் கொண்ட மாடலாக குறிப்பிடப்படுகிறது. ஆரஸ் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இந்த காரில் VR8/VR10 அளவிலான குண்டுத்துளைக்காத பாதுகாப்பு அம்சங்கள் கொண்டிருப்பதாக ஆரஸ் நிறுவனம் குறிப்பிடுகிறது.
விசேஷ கட்டமைப்பு
அதாவது, இது வெறும் தடிமனான கதவுகள் மற்றும் கண்ணாடி கொண்டதாக மட்டுமில்லாமல், பயணிகள் அமரும் பகுதியைச் சுற்றி பாதுகாப்பான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இநத் காரில் வெடிகுண்டு அல்லது கண்ணி வெடித்தாக்குதல்களில் டயர்கள் சேதமடைந்தாலும், தொடர்ந்து காரை இயக்குவதற்கு வாய்ப்பு தரம் ரன் ஃப்ளாட் என்ற வகையிலான விசேஷ டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொதுவாக பாதுகாப்பு கவச அம்சங்கள் கொண்ட கார்களைப் பற்றி பேசும்போது குண்டுத்துளைக்காத கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் விண்ட்ஷீல்டு பற்றி பேசப்படும். ஆனால், இந்த காரில் கூரை, தரைப்பகுதி, எரிபொருள் டேங்க் உள்ளிட்டவற்றிற்கும் குண்டு தாக்குதல்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. காருக்குள் தீப்பிடித்தால் அதனை தானியங்கி முறையில் அணைத்து கட்டுப்படுத்தும் விசேஷ அமைப்பும் உள்ளது.
பிரத்யேக மின் வினியோக அமைப்பு
மேலும், காரில் உள்ள சில முக்கிய தொழில்நுட்ப அம்சங்களை இயக்குவதற்காக தடையில்லாத தானியங்கி மின்சார வினியோக அமைப்பும் உள்ளது. விபத்து அல்லது தாக்குதல் காரணமாக கதவுகள் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், பயணிகள் காரிலிருந்து அவசர காலத்தில் வெளியேறுவதற்கான சிறப்பு தொழில்நுட்ப வசதியும் உள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கதவைத் திறக்காமல் வெளியே இருக்கும் நபர்களுடன் பேசுவதற்கு இன்டர்காம் போன்ற வசதியும் உள்ளது.

சக்திவாய்ந்த எஞ்சின்
ஆரஸ் செனட் காரில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ V8 ஹைப்ரிட் எஞ்சின் அமைப்பு உள்ளது. மொத்தமாக 598 எச்பி பவரையும், 880 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். 9 ஸ்பீடு கியர்பாக்ஸ், எஞ்சின் சக்தியை அனைத்து சக்கரங்களுக்கும் கொண்டு செலுத்தும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன. மற்றும் all-wheel-drive system இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் இது பாதுகாப்பு கவசங்களுடன் கூடிய நடமாடும் கோட்டையாகவே கூற முடியும்.


Click it and Unblock the Notifications


