8 மணி நேர பயணம் வெறும் 4 மணி நேரமாக குறைகிறது! ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு அதிசயம் நடக்க போறது உறுதி!
ஒரு நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் பிரம்மாண்டமான சாலைகளை அமைப்பதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
கடந்த காலங்களில் இந்தியா முழுக்க முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான சாலைகள் மற்றும் பாலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையும் (Delhi-Mumbai Expressway) கூடிய விரைவில் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவுள்ளது. டெல்லியில் இருந்து மும்பை வரை சுமார் 1,400 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை செல்கிறது. தற்போதைய நிலையில் டெல்லியில் இருந்து மும்பைக்கு சாலை மார்க்கமாக பயணம் செய்ய 24 மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலை முழுமையாக பயன்பாட்டிற்கு வந்த பிறகு, இந்த பயண நேரம் வெறும் 12 மணி நேரமாக குறைந்து விடும்.
வெறும் 12 மணி நேரத்தில் டெல்லியில் இருந்து மும்பை என்பது ஆச்சரியமான விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சூழலில், டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையின் ஒரு பகுதியான மும்பை-வதோதரா (Mumbai-Vadodara) சாலை, வரும் ஆகஸ்ட் 31ம் தேதி திறக்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவிற்கு சாலை மார்க்கமாக பயணம் செய்ய சுமார் 8 மணி நேரம் ஆகிறது. இந்த 2 நகரங்களுக்கு இடையேயான தொலைவு சுமார் 420 கிலோ மீட்டர் ஆகும். ஆனால் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையின் மும்பை-வதோதரா பகுதி செயல்பாட்டிற்கு வந்த பிறகு, மும்பை மற்றும் வதோதரா நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெறும் 4 மணி நேரமாக குறைந்து விடும்.
இது குறித்து டீம்-பிஹெச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இது 8 லேன்களை கொண்ட மிகவும் பிரம்மாண்டமான ஒரு சாலை ஆகும். இதில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிற்கு அருகே சுமார் 4.9 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்க பாதை (Tunnel) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் சவாலான இந்த சுரங்க பாதை கட்டுமான பணிகள் வெகு சமீபத்தில்தான் முடிவடைந்தன. இந்த சுரங்க பாதை ஒரு பொறியியல் அற்புதமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் வேறு எந்தவொரு சுரங்க பாதையிலும் 8 லேன்கள் இல்லை. 8 லேன்களை கொண்ட இந்தியாவின் முதல் சுரங்க பாதை என்ற பெருமையை கோட்டாவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதை பெறுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலை நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் சுமார் 1,400 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இதில், சுமார் 770 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பகுதி ஏற்கனவே பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. அடுத்தகட்டமாக மும்பை-வதோதரா இடையேயான சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பகுதி வரும் ஆகஸ்ட் 31ம் தேதி திறக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து வரும் 2027 அல்லது 2028ம் ஆண்டில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலை பயண நேரத்தை மட்டும் குறைக்க போவதில்லை. கூடவே சரக்கு போக்குவரத்திற்கான செலவுகளை குறைக்கும். அத்துடன் இந்த சாலை செல்லும் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது காரணமாக அமையும்.


Click it and Unblock the Notifications