11 லட்ச ரூபாயில் கூட வாங்கிடலாம், காரின் எந்த வேரியண்ட்டை வாங்குகிறோம் என்பதுதான் முக்கியம்!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதிய வெர்னா (Verna) கார் அறிமுகப்படுத்தப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் புதிய வசதிகள் உடன் வெர்னா மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஹூண்டாய் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்க்கலாம், வாங்க.
புதிய அப்டேட்களுடன், புதிய வெர்னா காரின் வேரியண்ட்களின் பெயர்களும் 'எச்.எக்ஸ்' (HX) என மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மேம்படுத்தப்பட்ட புதிய வென்யூ காரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எச்.எக்ஸ் பெயர் இப்போது வெர்னாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்.எக்ஸ்2, எச்.எக்ஸ்4, எச்.எக்ஸ்6, எச்.எக்ஸ்6+, எச்.எக்ஸ்8 மற்றும் எச்.எக்ஸ்10 என ஆறு விதமான வேரியண்ட்களில் புதிய வெர்னா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான அம்சங்கள் கிடைக்கும் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எச்.எக்ஸ்2: புதிய வெர்னாவின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.10.98 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான் புதிய வெர்னா காரின் ஆரம்ப விலை ஆகும். 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே இந்த ஆரம்ப நிலை வேரியண்ட் கிடைக்கும். ஆனால், விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும் இதில் ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவையாவன, 6 ஏர்பேக்குகள், ஏறுமுகமான சாலையில் காரை ஸ்டார்ட் செய்வதற்கான உதவி, எலெக்ட்ரானிக் மூலமாக பிரேக் விசை வழங்கப்படுவதுடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள், இரவு நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய உட்புற மிரர், தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஹலோஜன் புரோஜெக்டர் ஹெட்லைட்கள், சாவியில்லாமல் காரை ஸ்டார்ட் செய்யும் வசதி, பின்பக்க விண்ட்ஷீல்டில் பனி படர்வதை தடுக்கும் வசதி உள்ளிட்டவை ஆகும்.

இவ்வளவு நேரம் நாம் பார்த்தவை எல்லாம் இந்த வேரியண்ட்டில் கிடைக்கும் கார் மற்றும் பயணிகளின் பாதுக்காப்புக்கானவை மட்டுமே. இவை இல்லாமல், கவர் உடன் 15-இன்ச் இரும்பு சக்கரங்கள், இரட்டை நிறத்தில் பெயிண்ட், துணியிலான இருக்கை, மேனுவலாக இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ் செய்யும் வசதி, கப் ஹோல்டர் உடன் பின் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட், அட்ஜெஸ் செய்யக்கூடிய முன் இருக்கை தலையணைகள், அனைத்தும் பவர் ஜன்னல் கண்ணாடிகள், சாய்க்க/ மடிக்கக்கூடிய ஸ்டேரிங் சக்கரம், டைப்-சி சார்ஜிங் போர்ட், எலெக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ORVM-கள் உள்ளிட்டவையும் அடங்கும்.
எஸ்.எக்ஸ்4: ரூ.12.25 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் டயர்களில் காற்றழுத்ததை கண்காணிக்கும் அமைப்பு, எல்இடி தரத்தில் ஹெட்லைட்கள், டிஆர்எல்-கள் மற்றும் டெயில்லேம்ப்கள், பின்பக்க ஸ்பாய்லர், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, அதே 15-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் மற்றும் ஸ்டோரேஜ் உடன் மடிக்கக்கூடிய முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்டவை கூடுதலாக கிடைக்கும்.
இவற்றுடன், 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஎஃப்டி டிஸ்பிளே உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி, குரலை கார் அடையாளம் காணும் வசதி, முன் & பின்பக்க ஸ்பீக்கர்கள், ஐடியல் ஸ்டாப்/ஸ்டார்ட், சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டெலெஸ்கோபிக் ஸ்டீயரிங் அட்ஜெஸ்மெண்ட், பின்பக்க ஏசி காற்றுத்துளைகள், கூல்டு க்ளோவ்பாக்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், எல்இடி கேபின் விளக்குகள் உள்ளிட்டற்றையும் எச்.எக்ஸ்2 வேரியண்ட்டை காட்டிலும் கூடுதலாக பெறலாம்.
எச்.எக்ஸ்6: ரூ.13.19 லட்சம் - ரூ.14.40 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் காரின் பின்பக்கத்தை காட்டும் கேமரா, முன்பக்கமாக பார்க்கிங் செய்வதற்கும் உதவியாக சென்சார்கள், தன்னிச்சையாக டிம்-ஆகக்கூடிய உட்புற மிரர், பொத்தானை அழுத்தவதன் மூலம் கார் ஸ்டார்ட் ஆகும் வசதி உள்பட ஏகப்பட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன.

எச்.எக்ஸ்6+: ரூ.13.81 லட்சம் - ரூ.15.02 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் எச்.எக்ஸ்6 வேரியண்ட்டை காட்டிலும் கூடுதலாக லெதரேட் இருக்கைகள், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வெண்டிலேஷன் வசதி உடன் முன் இருக்கைகள் உள்ளிட்டவற்றை பெறலாம்.
எச்.எக்ஸ்8: ரூ.14.88 லட்சம் - ரூ.17.62 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் பிரத்யேகமாக எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (டிசிடி வேரியண்ட்டில் மட்டும்), பின்பக்க டிஸ்க் பிரேக்குகள், மெமரி வசதி உடன் 8-வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுத்திரை, கனெக்டட் கார் தொழிற்நுட்பம், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் உள்ளிட்டவை கிடைக்கும்.
மேலும், இந்த வேரியண்ட்டை டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கினால் கூடுதலாக டாஷ்போர்டு கேமரா, லெவல்-2 அடாஸ் (ADAS), 16-இன்ச் டார்க் கிரே நிற அலாய் சக்கரங்கள், சிவப்பு நிற ஹைலைட்கள் உடன் முழுவதும் கருப்பு நிறத்தில் கேபின், சிவப்பு நிற முன்பக்க பிரேக் காலிபர்கள் மற்றும் உலோகத்திலான பெடல்களை பெறலாம்.
எச்.எக்ஸ்10: புதிய வெர்னாவின் டாப் வேரியண்ட்டான இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.15 லட்சம் - ரூ.18.25 லட்சம் வரை உள்ளன. எச்.எக்ஸ்8 வேரியண்ட்டை போன்று, 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் 7 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, டிரைவரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி உள்ளிட்டவை பிரத்யேகமாக கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் சில பட்ஜெட் விலையிலான செடான் ரக கார்களுள் ஹூண்டாய் வெர்னா ஒன்றாகும். ஸ்டைலான தோற்றம் மற்றும் செயல்திறன்மிக்க என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை குறைந்த விலையில் வழங்கக்கூடியதாக புதிய வெர்னா உள்ளது. இந்த காரின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டை கூட பல அட்வான்ஸான அம்சங்கள் உடன் வாங்கலாம் என்பது சிறப்பான விஷயமாகும்.


Click it and Unblock the Notifications









