எந்த பெட்ரோல் பங்க்கும் தப்பிக்க முடியாது! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த புதிய அரசு உத்தரவு!
இ20 பெட்ரோல் (e20 petrol)-க்கு கடந்த சில மாதங்களாவே பல பெட்ரோல் பங்குகள் மாறிவரும் நிலையில், மத்திய அரசின் ஆணையின்படி ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் இ20 பெட்ரோல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? என்கிற கேள்விகளுக்கான பதில்களை, இ20 பெட்ரோல் என்றால் என்ன என்பதில் இருந்து பார்ப்போம்.
இ20 பெட்ரோல் என்பது 100% பெட்ரோல் எரிபொருளில் 20% எத்தனால் (Ethanol) மற்றும் 80% பெட்ரோல் மூலக்கூறுகளை பயன்படுத்துவதாகும். அதாவது, 1 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் அதில் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலக்கப்பட்டு இருக்கும். முன்பு இது 10% ஆக, அதாவது லிட்டருக்கு 100 மில்லி லிட்டராக கலக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே இது 20% ஆக அதிகரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இதனை தற்போது நாடு முழுவதும் உள்ள பொது பெட்ரோல் பங்குகளில் மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு என்ன பயன் என நீங்கள் கேட்கலாம், மக்களுக்கு விநியோகிக்கப்படும் பெட்ரோலில் குறைவான பெட்ரோல் மூலக்கூறுகளை பயன்படுத்துவதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய்யின் இறக்குமதியை குறைக்க முடியும்.
இதன் மூலமாக, அந்த நாட்டை இந்தியா சார்ந்திருக்க வேண்டிய தேவை குறையும். எத்தனாலை நாமாகவே உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும். கரும்பு, சோளம் உள்ளிட்டவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலமாக உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி, அதன் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தையும் பெருக்க முடியும் என மத்திய அரசு கணக்கு போட்டு வைத்துள்ளது.

இ20 பெட்ரோல் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு பெட்ரோல் பங்குகள் கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்தே தயாராகி வருகின்றன. மிகவும் சில பெட்ரோல் பங்குகளில் மட்டுமே இ20 பெட்ரோல் விநியோகிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதன் மூலம் அத்தகைய பெட்ரோல் பங்குகளும் இ20 பெட்ரோலுக்கு மாற கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.
இ20 பெட்ரோலை பயன்படுத்துவதில் அரசியல் ரீதியாக நன்மைகள் இருக்கும் போதிலும், பயன்பாட்டு ரீதியாக சில குறைப்பாடுகள் உள்ளன. தற்சமயம் விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட இ20 பெட்ரோலுக்கு ஏற்ப அப்கிரேட் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், அப்கிரேட் செய்யப்படாத பழைய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் இ20 பெட்ரோலால் சில பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
குறிப்பாக, இ20 பெட்ரோலை பயன்படுத்துவதால் பழைய இருசக்கர வாகனங்களில் என்ஜின் தொடர்பான பழுதுகள் ஏற்படுவதாக சில வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். எத்தனாலால் பழைய வாகனங்களின் என்ஜின் சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் சேதமடைகின்றன. இதனால் வாகனத்தின் மைலேஜ் 5% வரையில் குறைகிறது. ஆனால் இது எல்லாம் பழைய செய்தி; சமீப காலமாக இவ்வாறான புகார்கள் குறைந்தவிட்டதன் காரணமாகவே இ20 பெட்ரோலை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.
இருப்பினும், வாகன ஓட்டிகளின் புகார்களை கருத்தில் கொண்டு இ20 பெட்ரோலின் ஆர்.ஓ.என் (RON) எனப்படும் ஆராய்ச்சி ஆக்டேன் எண் குறைந்தப்பட்சம் 95 ஆவது இருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வாகனங்களின் என்ஜின் செயல்படுதிறன் மற்றும் ஸ்டெபிலிட்டியை பாதுகாக்கும். அத்துடன், வாகன தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனை செய்யப்பட்ட தங்களது வாகனங்களை இ20 பெட்ரோலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக கிட்களை வழங்க ஆரம்பித்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இ20 பெட்ரோலை நாடு முழுவதும் கட்டாயமாக்குவதை 2030ஆம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என முன்னதாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. அதன்படி பார்த்தால், இலக்கை 4 வருடங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது. இதன் மூலமாக வருடத்திற்கு சுமார் ரூ.30,000 கோடியை கச்சா எண்ணெய் இறக்குமதியில் மிச்சப்படுத்த முடியுமாம். இருப்பினும், நாட்டின் மிகவும் சில பகுதிகளுக்கு மட்டும் இந்த கட்டாய இ20 பெட்ரோலில் இருந்து குறுகிய காலத்திற்கு விலக்கு வழக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








