ஊரே தூக்கி வைத்து கொண்டாடும் காரில் இந்த வசதிகள் இல்லையா! பணத்தை கம்மி பண்ண என்னெல்லாம் பண்ணியிருக்காங்க!
மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) ஆனது மஹிந்திராவின் மிகவும் நவீனமான பெட்ரோல்/ டீசல் (ICE) எஸ்யூவி காராக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் இது விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார்கள் பிரிவில் புதிய தரநிலையை இந்த கார் நிறுவியிருந்தாலும், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது சில அம்சங்களில் பின்தங்கியுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் வந்தாலும், அன்றாட நடைமுறை பயன்பாட்டிற்கான சில முக்கிய வசதிகள் இந்த காரில் இல்லை. உதாரணமாக, ஆட்டோமேட்டிக் வேரியண்டில் பேடில் ஷிஃப்டர்கள் (Paddle Shifters) இடம்பெறவில்லை. இது இல்லாதது மென்மையான டிரைவிங்கை வழங்கினாலும், டிரைவிங் ஆர்வலர்கள் விரைவான கட்டுப்பாட்டிற்காக பேடில் ஷிஃப்டர்களை விரும்புவார்கள்.

பவர்டு டெயில்கேட், ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD) மற்றும் கேமரா வாஷர் போன்ற வசதிகளும் புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் இல்லை. குறிப்பாக, அதன் முக்கிய போட்டியாளரான டாடா சஃபாரி (Tata Safari) காரின் மேம்படுத்தப்பட்ட மாடலில் இந்த மூன்று அம்சங்களுமே கிடைக்கின்றன. எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை ஒரு ஏழு சீட்டர் எஸ்யூவி-ஆக மஹிந்திரா முன்னிறுத்துகிறது.
முன் மற்றும் இரண்டாவது வரிசை பயணிகளுக்கு போதுமான இடவசதி இருந்தாலும், மூன்றாவது இருக்கை வரிசையில் இடவசதி குறைபாடுள்ளது. இதனால் இந்த காரின் மூன்றாவது இருக்கை வரிசை குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்றதாகக் கருதப்படுகிறது. இரண்டாவது இருக்கை வரிசையில் வெண்டிலேட்டட் (Ventilated) வசதி இருந்தும், சீட்களை ஸ்லைடிங் செய்யும் வசதி இல்லாதது நீண்ட தூர பயண சவுகரியத்தை குறைக்கலாம்.

மேலும், ஏசி கட்டுப்பாடுகள் முற்றிலும் தொடுதிரை அடிப்படையிலானவை என்பதால், டிரைவிங்கின் போது ஓட்டுநருக்கு இது சற்று சிரமமாக அமையலாம். 3 திரைகளை கொண்ட கோஸ்ட்-டு-கோஸ்ட் திரை அமைப்பு ஏராளமான செயல்பாடுகளை வழங்கினாலும், அது பயன்படுத்த அதிக நேரம் எடுக்கும் சிக்கலான அமைப்பாக உள்ளது.
எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியோன் (mStallion) பெட்ரோல் என்ஜின் சுத்திகரிக்கப்பட்டதாகவும், அனைத்து சாலை நிலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. இருப்பினும், இது எரிபொருள் சிக்கனத்தில் (Mileage) சற்று பின்தங்கியுள்ளது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ, லெவல்-2 அடாஸ் சென்ஸ்+ (ADAS Sense+) சிஸ்டம் மற்றும் 540-டிகிரி சரவுண்ட் கேமரா போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. ஆனால், இவை டாப்-ஸ்பெக் ஏ.எக்ஸ்7 (AX7) வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கின்றன. எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் ஆல்-வீல் டிரைவ் (AWD) வசதி உள்ளது. இது பல்வேறு நிலப்பரப்புகளைக் கையாளும் திறன் கொண்டது.
டிரைவ் மோட்கள் (Drive Modes) இருந்தாலும், சேறு, பனி மற்றும் மணல் போன்ற குறிப்பிட்ட பாதை மோட்கள் இல்லை. இதுபோன்ற மல்டி-டெரெய்ன் மோட்களைச் சேர்த்திருந்தால், இந்த எஸ்யூவி கார் இன்னும் பல்துறைப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாறியிருக்கும், ஏனெனில் பல போட்டியாளர்கள் ஏற்கனவே இந்த வசதிகளை வழங்குகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிற்நுட்ப ரீதியாக புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ சிறந்தது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும், முக்கியமான மைலேஜ் விஷயத்திலே சற்று குறைப்பாடு உள்ளதால், நகர்ப்புற பயன்பாட்டிற்காக இந்த காரை வாங்குபவர்கள் டீசல் வேரியண்டை தேர்வு செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. இது மேம்பட்ட மைலேஜையும், நீண்ட பயணங்களுக்குப் பொருளாதார ரீதியாகவும் சிறந்ததாக இருக்கும். மேலும், ADAS தொழில்நுட்பத்தை இந்த காரில் மிட்-லெவல் வேரியண்ட்களிலும் மஹிந்திரா சேர்த்திருந்தால், இந்த காரின் மதிப்பு அதிகரித்திருக்கும், காரின் பாதுகாப்பையும் மேலும் பலப்படுத்தியிருக்கும்.


Click it and Unblock the Notifications









