பென்ஸ் காரை விட டொயோட்டா கார் எந்த விதத்திலும் சளைத்தது இல்ல! இரண்டுக்கும் விலையில் எவ்வளவு வித்தியாசம்?
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட சொகுசு கார், வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் (V-Class Facelift) ஆகும். 2022ஆம் ஆண்டில் விற்பனை நிறுத்தப்பட்ட வி-கிளாஸ் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சனாக வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அளவில் பெரிய பிரம்மாண்டமான சொகுசு எம்பிவி காரான இதற்கு போட்டியளிக்கும் வகையில் டொயோட்டா (Toyota) நிறுவனம் வெல்ஃபையர் (Vellfire) எம்பிவி காரை விற்பனை செய்கிறது.
வெளிப்புற தோற்றம்: இந்த இரண்டு எம்பிவி கார்களும் நீண்ட வேன் போன்றதான தோற்றத்தையும், விசாலமான உட்புற இடவசதியை வழங்குகின்றன. இருப்பினும், புதிய வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் அதன் நீளமான வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) (3430 மிமீ) மூலம் தனித்து நிற்கிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ், AVANTGARDE வெளிப்புற வடிவமைப்பையும், மெர்சிடிஸ் கார்களுக்கே உண்டான முக்கோண நட்சத்திர கிரில், மல்டிபீம் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் ஏராளமான க்ரோம் அம்சங்களுடன் வந்துள்ளது.

மறுபுறம், டொயோட்டா வெல்ஃபையர் எப்போதும் அட்வான்ஸான எதிர்கால பாணி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் சிறப்பான 6-ஸ்லாட் கொண்ட கிடைமட்ட கிரில், இரண்டாக பிரிக்கப்பட்ட லேயரில் LED ஹெட்லேம்ப்கள் மற்றும் கவர்ச்சிகரமான முன்பக்க பம்பர்கள் உள்ளன. Z-வடிவ பில்லர், கூர்மையான டைனமிக் கோடுகள் மற்றும் பெட்டி போன்ற அதேசமயம் பிரீமியம் தோற்றமும் சாலையில் இயங்கும்போது இந்த காரின் அழகை மேம்படுத்துகிறது.
என்ஜின் ஆப்ஷன்: மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலானது ஒரு ஹைபிரிட் என்ஜின் அமைப்பால் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது 9-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைந்து, மென்மையான பவர் டெலிவரி மற்றும் மேம்பட்ட செயல்திறனை உறுதி செய்கிறது.

டொயோட்டா வெல்ஃபையர் பெட்ரோல்-ஹைபிரிட் என்ஜின் உடன் சிவிடி (CVT) கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இது சிறந்த மைலேஜ் மற்றும் தடையற்ற டிரைவிங் வசதிக்கு முன்னுரிமை அளிக்கிறது. இதன் 2.5 லிட்டர் பெட்ரோல்-ஹைபிரிட் என்ஜின் அதிகப்பட்சமாக 142 கிலோவாட்ஸ் (சுமார் 193 hp) ஒருங்கிணைந்த பவரையும், 240 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த அளவில் பெரியதான காருக்கு 19.28 கிமீ/லிட்டர் மைலேஜ் பாராட்டத்தக்கது என்று டொயோட்டா கூறுகிறது.
பரிமாண அளவுகள்: மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட், டொயோட்டா வெல்ஃபையரை விட பெரிய ஒட்டுமொத்த உடல் பரிமாணங்களைக் கொண்டுள்ளது. வி-கிளாஸ் 5370 மிமீ நீளமும், 1928 மிமீ அகலமும், 1880 மிமீ உயரமும் கொண்டது. இரண்டு எம்விபி கார்களும் ஏழு இருக்கைகள் கொண்டதாக இருந்தாலும், வி-கிளாஸ் அதன் நீண்ட வீல்பேஸ் மற்றும் அகலமான சக்கர பொசிஷன் காரணமாக சிறந்த கேபின் இடத்தையும், பயணிகளுக்கு சவுகரியமான இடவசதியையும் வழங்குகிறது.
மறுபுறம், டொயோட்டா வெல்ஃபையர் 5005 மிமீ நீளமும், 1850 மிமீ அகலமும், 1950 மிமீ உயரமும், 3000 மிமீ வீல்பேஸும் கொண்டதாக உள்ளது. மேலும், 19-இன்ச் அலாய் சக்கரங்களுடன் வருவதால், மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் காரை விட சற்று உயரமான தோற்றத்தை பெறுகிறது.
தொழிற்நுட்ப அம்சங்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் ஆகிய இரண்டும் சிறப்பான அம்சங்களையும், உலகத்தரம் வாய்ந்த கேபின் வசதியையும் வழங்குகின்றன. இது பின் இருக்கை பயணிகளுக்கு ஒரு உண்மையான சொகுசு பயண அனுபவத்தைத் தருகிறது. வி-கிளாஸில் மல்டி-பீம் LED ஹெட்லேம்ப்கள், ஏழு ஏர்பேக்குகள், ஆக்டிவ் சேஃப்டி, ஸ்லைடிங் டோர்கள், பிரீமியம் லெதரெட் இன்டீரியர்கள் மற்றும் ஓட்டுநர் கண்காணிப்பு கேமரா ஆகியவை உள்ளன.
வெல்ஃபையரில் டூயல் டோன் 19-இன்ச் அலாய் சக்கரங்கள், கனெக்டட் எல்இடி டெயில் லேம்ப்கள், பிரீமியம் டூயல் டோன் டேஷ்போர்டு, மெமரி ஃபோம் கொண்ட ஜெனூயின் லெதர் இருக்கைகள் மற்றும் இரண்டாவது வரிசையில் ஒட்டோமான் வசதியுடன் கூடிய கேப்டன் இருக்கைகள் உள்ளன. இது இரட்டை சன்ரூஃப், 14 வண்ண கேபின் விளக்குகள், 15 JBL ஸ்பீக்கர்களுடன் 35.5 செமீ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 35.5 செமீ பின் இருக்கை பொழுதுபோக்கு அமைப்பு ஆகியவற்றுடன் வருகிறது.
விலை: மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.1.40 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என்கிற சற்று அதிக விலையில் வருகிறது. இருப்பினும், இது சிறந்த இடவசதி, ஒரு லவுஞ்ச் போன்ற கேபின் அனுபவம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் அதன் விலையை நியாயப்படுத்துகிறது. மறுபுறம், டொயோட்டா வெல்ஃபையர் சுமார் ரூ.1.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என்கிற விலையுடன் வருகிறது. இது அதே வசதியான மற்றும் சிறப்பம்சங்கள் நிறைந்த உட்புறத்துடன், 'ஜெட் போன்ற' பின் இருக்கை அனுபவத்தை ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரண்டு எம்பிவி கார்களும் உயர்தர ஓட்டுநர் அனுபவத்தைத் தேடும் உயர் ரக வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவை. இருப்பினும், கூடுதல் கேபின் இடமும் லிமோசைன் போன்ற வசதியும் உங்கள் முக்கிய முன்னுரிமையாக இருந்தால், வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் சிறந்த தேர்வாகும். ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் பிரீமியம், அதிக கேபின் இடவசதி கொண்ட அனுபவத்தை நீங்கள் விரும்பினால், வெல்ஃபையர் ஒரு சரியான விருப்பமாக தனித்து நிற்கிறது.


Click it and Unblock the Notifications








