6.5 லட்ச ரூபாயில் எலெக்ட்ரிக் காரை கொடுப்பதற்காகவே டாடாவை பாராட்டனும்! பழசை விட புது மாடல் ஏன் சிறந்தது?
டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, மார்க்கெட்டில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிறந்த ரேஞ்ச் உடனும், தேவையான நவீன அம்சங்களுடனும் வாடிக்கையாளர்களை ஈர்த்துவரும் பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் புகழை மேம்படுத்தும் விதமாக, டாடா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காருக்கு ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேடை வழங்கியுள்ளது. பல புதிய அம்சங்களுடன் வந்துள்ள புதிய பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) BaaS திட்டத்தில் ரூ.6.49 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
| Variant | 30 kWh (Medium Range) | 40 kWh (Long Range) |
|---|---|---|
| Smart | Rs 9.69 lakh | — |
| Smart+ | Rs 10.29 lakh | Rs 10.89 lakh |
| Adventure | — | Rs 11.59 lakh |
| Empowered | — | Rs 12.29 lakh |
| Empowered+S | — | Rs 12.59 lakh |
*All prices are introductory ex-showroom.
புதிய டாடா பன்ச் இவி மேம்படுத்தப்பட்ட தோற்றம், நவீன தரத்திலான கேபின், சில புதிய தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் மிக முக்கியமாக, அதிக ரேஞ்சை வழங்கக்கூடிய புதிய 40 kWh பேட்டரி ஆகியவற்றுடன் வந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் தற்போதைய பன்ச் இவி உடன் ஒப்பிடும்போது புதிய பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

வெளிப்புற வடிவமைப்பு: எலெக்ட்ரிக் வெர்சனாக இருந்தாலும் சரி, பெட்ரோல் வெர்சனாக இருந்தாலும் சரி டாடா பன்ச் காரின் வெளிப்புற வடிவமைப்பு எப்போதும் அதன் பலங்களில் ஒன்றாகும். 2024ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, பன்ச் இவி கவர்ச்சியான தோற்றமுடைய எலெக்ட்ரிக் காராக இருந்து வருகிறது. புதிய பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிப்புற மாற்றங்கள் பெரியதாக இல்லாவிட்டாலும், அவை நுட்பமாகச் செய்யப்பட்டு, காருக்குப் புத்துணர்ச்சியூட்டுகின்றன.
இதனால், காரின் ஒட்டுமொத்த தோற்றமும், பரிமாண அளவுகளும் பழைய பன்ச் இவி எலெக்ட்ரிக் காரைப் போலவே இருக்கின்றது. முன்பக்கத்தில் இந்த கார் மூடிய கிரில், இரண்டாக பிரிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் அமைப்பு மற்றும் மெல்லிய டிஆர்எல்-களைக் கொண்டுள்ளது. காரின் முன்பக்கத்தில் அப்கிரேட்கள் நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் குறைவாக இருப்பினும், ஹெட்லைட்களை இணைக்கும் முன்பக்க பம்பரில் இருந்த கருப்பு வண்ணப் பட்டை புதிய மாடலில் நீக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கலாம்.

முன்பக்க பம்பரின் கீழ் உள்ள ஸ்கஃப் பிளேட்டும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது காரின் முன்பகுதிக்கு எளிமையான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது. பக்கவாட்டில், புதிய மற்றும் பழைய பன்ச் இவி எலெக்ட்ரிக் கார்களுக்கு இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் காணப்படவில்லை. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 16-இன்ச் அலாய் சக்கரங்கள், தடிமனான பாடி கிளாடிங்ஸ் மற்றும் ரூஃப் ரெயில்கள் தொடர்கின்றன.
பின் கதவு கைப்பிடிகள் மேலே ஜன்னல் கண்ணாடிகளுக்கு அருகே வழங்கப்பட்டுள்ளதால், காரில் இரு கதவுகள் மட்டுமே உள்ளது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. முன்பக்கக் கதவுகளில் புதிய 'Tata.ev' பேட்ஜும் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் பின்பக்க வடிவமைப்பு ஆனது கடந்த மாதம் ஃபேஸ்லிஃப்ட் பெற்ற பன்ச் பெட்ரோல் காரை ஒத்துள்ளது.
இருப்பினும் கூடுதலாக, கருப்பு நிற உறை கொண்ட இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், பின்பக்க ஸ்பாய்லர் மற்றும் பம்பரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன், சில்வர் நிறத்தில் புதிய ஃபோக்ஸ் ஸ்கிட் பிளேட்டும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. மேலும், புதியதாக சேர்க்கப்பட்டுள்ள கிளாடிங்குகள் காரின் பின்பக்கத்திற்கு ஒரு தசைப்பிடிப்பான தோற்றத்தை வழங்கியுள்ளன.
உட்புற வடிவமைப்பு: புதிய டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரும், முந்தைய பன்ச் இவி காரும் உட்புற தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருந்தாலும், புதிய ஃபேஸ்லிஃப்ட் கார் கிரே மற்றும் வெள்ளை நிற தீம் உடன் வந்துள்ளது. டாஷ்போர்டின் மத்தியில் காற்றில் நிற்பது போன்ற எஃபெக்ட்டில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. அதற்கு கீழே, ஏசி காற்று துளைகள் கிடைமட்டமாக வழங்கப்பட்டுள்ளன.
அதற்கும் கீழே, பல கண்ட்ரோல்களையும், ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தையும் கொண்ட டச் பேனல் ஒன்று உள்ளது. இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம் ஆனது, வெள்ளைத் மற்றும் கருப்பு என்கிற இரட்டை நிற லெதரால் சுற்றப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் சக்கரத்தில் பேடில் ஷிஃப்டர்களும் உள்ளன. இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை புதிய இண்டர்ஃபேஸ் (Interface) உடன் உள்ளது.
| Specification | 30 kWh (Medium Range) | 40 kWh (Long Range) |
|---|---|---|
| Battery Pack | 30 kWh | 40 kWh |
| Claimed Range (MIDC Part 1 + 2) | 365–375 km | 468 km |
| Power (PS) | 88 PS | 129 PS |
| Torque (Nm) | 154 Nm | 154 Nm |
| 0–100 kmph Acceleration | 13.5 seconds | 9 seconds |
*Real-world estimated C75 range is ~260-275km (30kWh) and ~335-355km (40kWh).
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, டாடா நிறுவனம் ஏற்கனவே அதை பல தொழிற்நுட்ப அம்சங்களுடன் வழங்கிவந்தது. புகார்களுக்கு பெரியதாக இடம் கொடுக்கவில்லை. ஆனால் காலம் செல்லச் செல்ல வாடிக்கையாளர்களின் தேவைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றை பூர்த்தி செய்யும் வகையில், டாடா நிறுவனம் பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் சில புதிய அம்சங்களை வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








