டிவிஎஸ் ஸ்கூட்டரை விட பஜாஜ் ஸ்கூட்டர் இந்த ஒரு விஷயத்தில் சிறந்தது! இரண்டின் விலையும் 1 லட்ச ரூபாயை தாண்டல
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) கம்பெனி மற்றும் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) ஆகியவை இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனச் சந்தையில் முன்னணி நிறுவனங்களான உள்ளன. தங்களது மலிவு விலையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் வலுவாக போட்டியிட்டு வரும் இந்த நிறுவனங்களின் டிவிஎஸ் ஐக்யூப் (iQube) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஆகியவை ஏற்கனவே சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், சமீபத்தில் டிவிஎஸ் தனது ஆர்பிட்டர் (Orbiter) என்கிற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்குப் போட்டியாக, பஜாஜ் நிறுவனமும் தனது சேத்தக் சி2501 (C2501) என்கிற இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு பட்ஜெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விரிவாக ஒப்பிட்டு, இதில் எது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

தோற்றம் மற்றும் வடிவமைப்பு: டிவிஎஸ் ஆர்பிட்டர் ஒரு பாரம்பரியமான ஸ்கூட்டர் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் உயரமாக ஸ்டாண்டிங் பொசிஷன் மற்றும் தட்டையான கால் வைக்கும் இடம் ஆகியவை தினசரி பயணத்திற்கு உகந்ததாக இருக்கிறது. குறிப்பாக, ஏரோடைனமிக்ஸ் மற்றும் ஓட்டுநரின் சவுகரியத்திற்கு முக்கியத்துவம் அளித்து இந்த டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மறுப்புறம், பஜாஜ் சேத்தக் சி2501 ஒரு நியோ-ரெட்ரோ வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மற்ற சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே, இதுவும் கிளாசிக் தோற்றத்துடன் நவீனத்துவத்தை இணையாகக் கொண்டுள்ளது. இதில் வைர வடிவ ஹெட்லைட் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் ஹெட்லைட் கவுலில் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால் இது மற்ற சேத்தக் ஸ்கூட்டர்களில் இருந்து வேறுபடுகிறது.

செயல்திறன் மற்றும் பேட்டரி: பஜாஜ் சேத்தக் சி2501 ஆனது 2.2 கிலோவாட் மோட்டாரை மையப்பகுதிக்கு அடியில் பெறுகிறது. இது 2.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த பேட்டரி பேக்கை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 113 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சேத்தக் இ-ஸ்கூட்டர் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
டிவிஎஸ் ஆர்பிட்டர், சற்று அதிக ஆற்றல்மிக்க 2.5 கிலோவாட் மோட்டார் மற்றும் 3.1 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக்குடன் வருகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 68 கி.மீ ஆகும். மேலும் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 158 கி.மீ தூரம் வரை செல்ல முடியும்.
மெக்கானிக்கல் பாகங்கள்: இந்த இரு ஸ்கூட்டர்களிலும் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் அமைப்பு முன்பக்கத்தில் உள்ளது. ஆனால், சேத்தக் சி2501 பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் வருகிறது; இது சிறந்த ஹேண்ட்லிங், சவுகரியமான பயண அனுபவத்தை வழங்குகிறது. அதுவே, டிவிஎஸ் ஆர்பிட்டர் இரட்டை ஷாக் அப்சார்பர்களை பின்பக்கத்தில் கொண்டுள்ளது. ஆர்பிட்டர் 14-இன்ச் முன் சக்கரம் மற்றும் 12-இன்ச் பின் சக்கரத்துடன் வருகிறது; இது மேடு பள்ளங்களை எளிதாக கையாள்கிறது.
பிரேக் அமைப்பில், பஜாஜ் சேத்தக் சி2501 ஒரு படி மேலே உள்ளது, ஏனெனில் இது முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கை கொண்டுள்ளது. டிவிஎஸ் ஆர்பிட்டர், இருபுறமும் டிரம் பிரேக்குகளுடன் சின்க் பிரேக் சிஸ்டம் (Synchronised Braking System) வசதியுடன் வருகிறது. இந்த இரு ஸ்கூட்டர்களும் ஐபி67 தரச்சான்று பெற்ற பேட்டரி பேக்கை கொண்டுள்ளன. இது தூசி மற்றும் நீர் புகாத தன்மையை உறுதி செய்கிறது. மேலும், இரு ஸ்கூட்டர்களுக்கும் 3 ஆண்டுகள் அல்லது 50,000 கி.மீ வாரண்டி வழங்கப்படுகிறது.
தொழில்நுட்ப அம்சங்கள்: பஜாஜ் சேத்தக் சி2501 ஒரு எளிமையான வட்ட வடிவ எல்சிடி கன்சோல் உடன் வருகிறது. இதில் ரிவர்ஸ் மோட் மற்றும் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை கண்ட்ரோல் செய்யும் வசதி உள்ளது. டிவிஎஸ் ஆர்பிட்டரிலும் மொபைல் போன் அழைப்பு/குறுஞ்செய்தி எச்சரிக்கைகள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் ஒடிஏ (Over-The-Air) அப்டேட்கள் ஆகியவை ஸ்டாண்டர்டாக கிடைக்கின்றன.
விலை: பஜாஜ் சேத்தக் சி2501 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.87,100 ஆகவும், டிவிஎஸ் ஆர்பிட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99,900 ஆகவும் தற்சமயம் உள்ளன. இவை பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் மலிவு விலையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் விலை வேறுபாடு கிட்டத்தட்ட ரூ.12,800 ஆக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு எளிமையான, அன்றாட நகரப் பயணங்கள் மற்றும் குறுகிய தூர பயணங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்புபவர்களுக்கு பஜாஜ் சேத்தக் சி2501 ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதன் தனித்துவமான வடிவமைப்பு, பிரீமியம் தோற்றம் மற்றும் உறுதியான கட்டமைப்பு உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அதேநேரம், டிவிஎஸ் ஆர்பிட்டர் சற்று சிறந்த செயல்திறன் மற்றும் அதிக தொழிற்நுட்ப அம்சங்களை வழங்குகிறது.
எப்போவது நெடுஞ்சாலைப் பயணங்களுக்கும் இந்த டிவிஎஸ் ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும். செயல்திறன் ரீதியாக, ஆர்பிட்டர் சேத்தக் சி2501-ஐ விட சிறந்த பேட்டரி திறன் மற்றும் ரேஞ்சைக் கொண்டுள்ளது. எனினும், ஆர்பிட்டரின் 0-80% சார்ஜிங் நேரம் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும். இது சேத்தக் சி2501-ஐ விட சற்று அதிகம். இந்த இரு ஸ்கூட்டர்களும் தலா இரு விதமான ரைடு மோட்களைக் கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








