அம்பானி இருக்கும் அதே ஊரில்தான் இவரும் வசிக்கிறார்... அரண்மனை போல் இருக்கும் வீட்டிற்குமுன் அரிதான நிசான் கார்
இந்திய கோடீஸ்வரரும், தீவிர கார் ஆர்வலருமான யோகன் பூனாவாலா (Yohan Poonawalla) தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாகன சேகரிப்பில், புகழ்பெற்ற டொயோட்டா சுப்ரா ஏ80 (Toyota Supra A80) காருக்குப் பிறகு, புதியதாக 2025 நிசான் ஜிடிஆர் ஆர்35 நிஸ்மோ (Nissan GTR R35 NISMO) காரை இணைத்துள்ளார்.
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசானின் இந்த ஐகானிக் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. இதனால், தனியார் இறக்குமதியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு தொழிலதிபர் பூனாவாலாவிடம் டெலிவிரி (Delivery) செய்யப்பட்டுள்ளது. தற்போது இதன் புகைப்படங்கள் 'புனே மோட்டிவ்' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் இணையத்தில் பரவி வருகின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஜிடிஆர் ஆர்35 நிஸ்மோ பதிப்பு உலக அளவிலேயே தனித்துவமானது. இத்தகைய கார் இந்தியாவில் வாங்கப்பட்டு இருப்பது தொடர்பான புகைப்படங்களில், பூனாவாலாவின் பிரம்மாண்ட மாளிகையில் இந்த கார் நிறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த கார், நிஸ்மோ காருக்கே உண்டான ஸ்டெல்த் கிரே நிறத்தில் ஜொலிக்கிறது. அதனருகே அவரது மற்ற உயர் வகை கார்களும் தென்படுகின்றன.
நிசான் ஜிடிஆர் கார்கள் எப்போதும் உலகின் மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், 2025ஆம் ஆண்டுடன் இந்த புகழ்பெற்ற கார்களின் உற்பத்தி முடிவுக்கு வந்தது. தற்போது இந்திய தொழிலதிபர் பூனாவாலா வாங்கியிருக்கும் ஆர்35 மாடல் ஆனது அதன் இறுதித் தலைமுறையாகும். எனவே, பூனாவாலாவின் இந்த நிஸ்மோ மாடல், தயாரிக்கப்பட்ட கடைசி சில ஜிடிஆர் கார்களில் ஒன்றாக இருக்கலாம்.

சாதாரண ஜிடிஆர் மாடலே மிகுந்த சக்தி வாய்ந்தது. 473 குதிரைத்திறன் கொண்ட 3.8 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் உடன் 0-100 கிமீ/மணி வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டக்கூடியது. ஜிடிஆர் ஆர்35 நிஸ்மோ பதிப்பு ஆனது சாதாரண ஜிடிஆர் காரின் இந்த செயல்திறனில் திருப்தி அடையாதவர்களுக்காக உருவாக்கப்பட்டது ஆகும்.

இதற்காக இன்னும் ஆற்றல்மிக்க, 600 குதிரைத்திறனை உற்பத்தி செய்யக்கூடிய வி6 என்ஜின் உடன் நிஸ்மோ பதிப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலமாக, இந்த பதிப்பானது ஜிடிஆர் கார்களின் வேகத்தையும் திறனையும் முற்றிலும் புதிய தளத்திற்கு கொண்டு சென்றது. இதன் வி6 என்ஜின் ஆனது கார் மாடிஃபிகேஷனில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பிடித்தமான என்ஜின் ஆகும்.

மேலும், இந்த நிஸ்மோ பதிப்பு 3.0 வினாடிகளுக்கும் குறைவான நேரத்திலேயே 0-100 கிமீ/மணி வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. இத்தகைய அபாரமான செயல்திறன் கொண்ட கார் மலிவான விலையில் கிடைக்காததில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. ஜப்பானில் ஜிடிஆர் ஆர்35 நிஸ்மோ காரின் விலை சுமார் 3,00,85,000 ஜப்பானிய யென் ஆகும்.
இது இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ ரூ.1.7 கோடி ஆகும். இது தனியார் இறக்குமதி என்பதால், பூனாவாலா இந்த காருக்கு 100% அடிப்படை சுங்க வரியுடன் சேர்த்து, மொத்தமாக 150-200 சதவீதம் வரை வரி செலுத்தியிருக்க வாய்ப்புள்ளது. இதனால், ஜப்பான் விலையை காட்டிலும் 3- 4 மடங்கு அதிக விலையில் இந்த காரை அவர் சொந்தமாக்கி இருக்கக்கூடும்.

இதைவிட சுவாரஸ்யமான தகவல் ஒன்று உள்ளது. நிசான் நிறுவனம் சாதாரண ஜிடிஆர் ஆர்35 காரை 2016ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. அப்போது, அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.99 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நிஸ்மோ பதிப்புகள் ஒருபோதும் இந்தியச் சந்தைக்குக் கொண்டுவரப்படவில்லை. இந்தத் தலைமுறை ஜிடிஆர் கார் மாடல்களில், நிஸ்மோ சிறப்புப் பதிப்புதான் சாலையோரப் பயன்பாட்டிற்கான மிக உயர்ந்த மற்றும் மூர்க்கமான பதிப்பாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிசான் ஜிடிஆர் கார்களிலேயே நிஸ்மோ சிறப்புப் பதிப்பு முன்பகுதியில் கணிசமாக இலகுவானது. இதன் மூலமாக, தாழ்வான ஈர்ப்பு மையம், மேம்பட்ட முன்புற-பின்புற எடைப் பகிர்வைக் கொண்டுள்ள ஜிடிஆர் ஆர்35 நிஸ்மோ காரை இந்தியாவில் பலர் கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள் என நினைக்கிறோம். ஆனால், அத்தகைய காரை தேடி கண்டுப்பிடித்து வாங்கியுள்ளார் என்றால், தொழிலதிபர் பூனாவாலா எந்த அளவிற்கு ஸ்போர்ட்ஸ் கார் பிரியர் என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









