பழைய ஆல்டோ காராக இருந்தாலும் விட்டு வைக்கல! இதுக்கு போயா இலட்சக்கணக்கில் செலவு பண்றாங்க!
நம் இந்தியாவில் புதுமையான சிந்தனைகளுடன் துணிச்சலும் கொண்ட திறமையான மனிதர்களுக்கு பஞ்சமே இல்லை. அதற்கு சமீபத்திய ஓர் உதாரணமாக, பழைய மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) காரை எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரியைப் பயன்படுத்தி ஒரு ஹைப்ரீட் (Hybrid) காராக மாற்றிய காணொளி இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த ஆல்ட்டோ காரின் உண்மையான இன்டெர்னல்-கம்பஷன் என்ஜின் (ICE) சிறிதும் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. மாறாக, அதன் ஒரிஜினல் என்ஜின் உடன் எலெக்ட்ரிக் மோட்டார் அமைப்பும் இணக்கமாகச் செயல்படும் வகையில் இந்த புதுமையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாருதி சுஸுகி ஆல்டோ காரை ஹைப்ரீட் காராக மாற்றிய செயல்முறையை 'டெக்னிகல் பார்த்' (Technical Parth) என்ற யூடியூப் சேனல் (Youtube Channal) ஒரு விரிவான காணொளியாகப் பகிர்ந்துள்ளது. இந்த காணொளி, குறிப்பிட்ட ஆல்டோ கார் ஜாக்கி ஸ்டாண்டில் இருந்தபோது அதன் பின் சக்கரங்கள் மட்டும் சுழல்வதைக் காட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது.
அதன்பிறகு, காரின் உண்மையான என்ஜின் இயக்கப்படுகிறது. அப்போது ஆல்டோவின் நான்கு சக்கரங்களும் சுழலத் தொடங்குகின்றன. தொடர்ந்து, ஓட்டுநர் காரை சாலையில் செலுத்துகிறார். அவரது வலது கையில் த்ரோட்டில் (Throttle) போன்ற ஒரு கருவி இருப்பது தெரிகிறது; இது எலெக்ட்ரிக் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் கருவியாக இருக்கலாம்.

இந்த ஆல்டோ காரின் பின்சக்கர அச்சு முழுவதும் மாற்றப்பட்ட விதம் குறித்து காணொளி விளக்கி காண்பித்துள்ளது. மாருதி சுஸுகி (Maruti Suzuki) தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட இந்த ஆல்டோவின் பின் சக்கர அச்சுவை முதலில் கழற்றியுள்ளனர். காரின் சேசிஸில் இணையும் புள்ளிகள் மற்றும் பின்பக்க சஸ்பென்ஷன் சுருள்களுக்கான மவுண்டுகளுடன் அது வெளியே கொண்டுவரப்பட்டது.
இந்த பழைய அச்சு அகற்றப்பட்டதும், அதனுடன் இணைந்திருந்த இரண்டு கரங்கள் மற்றும் ஸ்பிரிங் மவுண்டுகள் கவனமாகப் பிரிக்கப்பட்டன. அதன் பிறகு, இந்த முக்கியமான பாகங்கள், எலெக்ட்ரிக் மோட்டாரைப் பொருத்துவதற்கான சிறப்பு வசதியுடன் கூடிய ஒரு புதிய பின் சக்கர அச்சுடன் கவனமாக வெல்டிங் (Welding) செய்யப்பட்டன.

துருப்பிடிப்பதைத் தடுக்க, புதிய அச்சு மற்றும் வெல்டிங் செய்யப்பட்ட இடங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. பின்னர், எலெக்ட்ரிக் மோட்டார் குறிப்பிட்ட இடத்தில் காரின் பின்பக்க அச்சுடன் இறுக்கமாகப் பொருத்தப்பட்டது. அது கழண்டு வராமல் இருப்பதை உறுதி செய்த பிறகு, அனைத்துப் பாகங்களும் பொருத்தப்பட்ட அந்த அச்சுவை காரின் பின்புறம் இழுத்து வந்து சேசிஸ் உடன் மீண்டும் திருகுகள் கொண்டு இறுக்கமாகப் பொருத்தியுள்ளனர்.
அதன் பிறகு, எலெக்ட்ரிக் மோட்டாருடன் பேட்டரி இணைக்கப்பட்டு, இறுதியாக முழு அமைப்புடனும் பேட்டரி பேக் சேர்க்கப்பட்டுள்ளது. இறுதியாக, காரில் புதியதாக பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் பவர்டிரெய்ன் எப்படிச் செயல்படுகிறது என்பதை ஓட்டி பார்த்து உறுதி செய்துள்ளனர். இருப்பினும், இந்த ஆல்டோ காரில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரி பேக், எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி அமைப்பின் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஆல்ட்டோ ஹைப்ரீட் காரில் மேற்கொள்ளப்பட்ட கைவினைத்திறன் மிக உயர்ந்ததாக இல்லாவிட்டாலும், இந்தப் பணியைச் செய்தவரின் முயற்சி பாராட்டுக்குரியது. இது ஐசிஇ (ICE) வாகனத்தை ஹைப்ரீட் வாகனமாக மாற்றும் மலிவான மற்றும் பயனுள்ள வழியாகும். எனினும், இது அனைவருக்கும் ஒரு சாத்தியமான விருப்பமாக மாற இன்னும் விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் தேவை.


Click it and Unblock the Notifications









