பெட்ரோலா, டீசலா, எலெக்ட்ரிக் காரா? எதை வாங்கறது பெஸ்ட் தெரியுமா?
பண்டிகை காலம் நெருங்கி வரும் இவ்வேளையில் புதிய கார் வாங்குவதற்கு பலர் யோசித்து வருகிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல், ஹைப்ரிட், எலெக்ட்ரிக் என எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் பலருக்கு உள்ளது. மேலும், E20 எரிபொருள் குறித்த குழப்பங்கள், எரிபொருள் மீதான மாசு விதிகள் கட்டுமையாக்கபட்டு வரும் நிலை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி விலக்கு உள்ளிட்ட காரணங்களால் எரிபொருள் தேர்வில் பலர் குழப்பத்தில் உள்ளனர். இன்றைய சூழலை வைத்து பார்த்தால் தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு பெட்ரோல் காரே சிறந்த தேர்வாக நான் பரிந்துரை செய்வேன்.
பெட்ரோல் காரை பரிந்துரைப்பதற்கு முதன்மையான காரணம் பிற எரிபொருள் வகையை விட பெட்ரோல் கார்கள் பொதுவாக குறைவான விலையில் கிடைக்கின்றன. இது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு பொருளாதாரச் சுமையை குறைக்கும். மேலும், கார் வாங்கும்போது டவுண்பேமண்ட் மட்டுமின்றி, மாதத் தவணை, இன்ஸ்யூரன்ஸ், எரிபொருள் செலவு என பல செலவீனங்கள் உண்டு. அதில், பெட்ரோல் கார்கள் செலவீனங்களில் குறைவாக இருக்கின்றன.

இரண்டாவது முக்கிய காரணமாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை மட்டுமின்றி சிறிய நகரங்கள், கிராமங்களிலும் இன்று பெட்ரோல் நிலையங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. பெட்ரோல் கார்களுக்கான உதிரிபாகங்களை பெறுவது எளிது என்பதுடன் இந்த கார்களை பழுதுநீக்குதலில் அனுபவம் பெற்ற மெக்கானிக்குகளும் அதிகமாக உள்ளனர். ஒரு குடும்பத்தினர் கார் வாங்குகிறார்கள் என்றால் அர்கள் எந்த சூழலிலும், கவலை இல்லாமல் பயன்படுத்த முடியுமா? என்பது மிக முக்கிய விஷயம். அந்த அளவுகோலில் பெட்ரோல் கார்கள்தான் நம்பிக்கையான தேர்வாக குறிப்பிடலாம்.
கடந்த சில மாதங்களாக E20 பெட்ரோல் குறித்த அச்சமும், விவாதங்களும் அதிகரித்துள்ளன. மைலேஜ் குறையுமா? உதிரிபாகங்களில் பிரச்னை ஏற்படுமா? என்ற சந்தேகங்கள் பலரிடம் இருக்கிறது. மேலும், "E20 பெட்ரோல் பயன்படுத்தும்போது மைலேஜ் 6 சதவீதம் வரை குறையலாம், ஆனால் எஞ்சின் செயலிழப்புக்கு வாய்ப்பு இல்லை. பழைய பிஎஸ்3 கார்களில் மட்டும் எரிபொருள் ரப்பர் குழாய் மற்றும் எஞ்சின் கேஸ்கெட்டுகள் மாற்ற வேண்டி இருக்கலாம்," என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார். இதனால், பெட்ரோல் கார் வாங்கலாமா? என்று பலர் யோசிக்கின்றனர்.
ஆனால், அவர் குறிப்பிட்டுள்ளது பழைய கார்களுக்கு மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். இப்போது தயாரிக்கப்படும் கார்கள் E20 பெட்ரோலுக்கு இணக்கமான உதிரிபாகங்களுடன் எஞ்சின்கள் தயாரிக்கப்படுவதால் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு மிக மிக குறைவு. மேலும், சரியான இடைவெளிகளில் பெட்ரோல் கார்களை பரிசோதனை செய்தால், பிரச்னைகளை தவிர்க்க முடியும். பெட்ரோல் மட்டுமே சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டது என்ற பொருளில் கூறவில்லை. மைலேஜில் சிறிய வித்தியாசம் இருக்கலாம். ஆனால், அதற்காக பெட்ரோல் கார்களை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.
மற்றொரு முக்கிய விஷயமாக பார்க்க வேண்டியது மறுவிற்பனை மதிப்பு. பிற எரிபொருள் வகை கார்களை ஒப்பிடும்போது பெட்ரோல் கார்களின் மறுவிற்பனை மதிப்பும் பாதுகாப்பானதாக கூறலாம். பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் பெட்ரோல் கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு சிறப்பாக இருக்கிறது.

டீசல் கார்கள் ஒரு காலத்தில் அதிக மைலேஜ் மற்றும் நெடுஞ்சாலை பயணங்களுக்கு மிகச் சிறப்பானதாக இருந்தது. லாங் டிரிப் ஓட்டும்போது டீசல் கார்களை ஓட்டும் அனுபவம் சிறந்ததாக இருக்கும். ஆனால், பராமரிப்பு செலவு அதிகம் என்பதுடன் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அமல்படுத்தப்பட்டது போன்று மாசு உமிழ்வு விதிகள் கடுமையாக்கப்பட்டால், இந்த கார்களின் மறுவிற்பனை மதிப்பு சீக்கிரமாக குறையத் துவங்கும். எதிர்காலத்தில் மாசு உமிழ்வு விதிகள் மேலும் கடுமையாக்கப்படுமா என்ற கேள்வி வாங்குபவர்களின் மனதில் இருப்பதை மறுக்க முடியாது. அடுத்து சிஎன்ஜி எரிபொருள் வகை இருந்தாலும், வட இந்திய நகரங்கள் அளவுக்கு தமிழ்நாட்டில் சிஎன்ஜி எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் பரவலாக இல்லை.

எலெக்ட்ரிக் கார்கள் சிறந்த தேர்வு என்பதை மறுப்பதற்கில்லை. கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் கார்களின் தொழில்நுட்பம் சிறப்பாக மேம்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்குத்தான் முன்னுரிமை இருக்கும். வரும் 2027ம் ஆண்டு வரை டிசம்பர் 31 வரை தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் கார்களுக்கு சாலை வரி விலக்கும் உள்ளது. அதேநேரத்தில், எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரி சார்ஜ் செய்யும் நேரம், நீண்ட கால பயன்பாட்டில் பேட்டரியின் திறன் குறையும் வாய்ப்பும், பேட்டரி செயலிழப்பு ஏற்பட்டால் வாரண்டி காலத்திற்கு பின் அதிக தொகை கொடுத்து மாற்ற வேண்டிய நிலை உள்ளதால் இதற்கான முன்னிலையை குறைக்கிறது.
தினசரி 40 முதல் 50 கிமீ தூரம் வரை தூரத்திற்கு பயன்படுத்துவோருக்கு எலெக்ட்ரிக் கார் சிறந்த தேர்வு என்றாலும், பெருநகரங்களை தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் கட்டமைப்பு இன்னும் அதிக அளவில் இல்லை என்பது பெரிய குறையாக உள்ளது. அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் சற்று திட்டமிட்டு பயணம் செய்ய வேண்டி உள்ளது. எரிபொருளுக்கான செலவு குறைவு என்ற ஒற்றை காரணத்தை வைத்து முடிவு செய்ய இயலாது. நீண்ட தூர பயணங்களில் சார்ஜிங் சிக்கல் இருப்பது மட்டுமில்லாமல், பெட்ரோல் மாடல்களை ஒப்பிடுகையில் விலையும் அதிகமாக உள்ளது.

ஹைப்ரிட் தொழில்நுட்பம் தனிப்பட்ட முறையில் சிறந்த தேர்வாக நான் கூறுவேன். குறிப்பாக, ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடல்கள் சிறந்த தீர்வாக இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் மற்றும் பேட்டரியில் இயங்கும் வசதி கொண்ட இந்த ஹைப்ரிட் கார்கள் மேற்கண்ட அனைத்து எரிபொருள் வகைகளுக்கும் சிறந்த மாற்றுதான். ஆனால், இதன் விலை மிக அதிகம் என்பதுடன் குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டுமே இந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கிடைப்பதும் எல்லோருக்கும் பொருந்தும் தேர்வாக இருக்காது.
கார் என்பது நாகரீக பொருளாக தற்போது இல்லை. அது வாழ்க்கையின் அன்றாட பயன்பாட்டின் அங்கமாக மாறிவிட்டது. எனவே, குடும்பத்தினருடன் பயணிக்கும்போது அது எந்த ஒரு சூழலிலும் பிரச்னைகளை தராமல் நமது முதலீட்டை ஓரளவு பாதுகாப்பாக வைத்து இருக்க உதவுமா? என்று பார்க்க வேண்டியது அவசியம். அடுத்த சில ஆண்டுகளில் இந்த சூழல் மற்றும் அரசுக் கொள்கைகளை பொறுத்து எனது பரிந்துரை மாறலாம். ஆனால், தற்போதைக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களுக்கு பெட்ரோல் கார்தான் சிறந்த பரிந்துரையாக கூற முடியும்.


Click it and Unblock the Notifications
