லிட்டருக்கு ரூ.11 உயர்த்துவாங்கனு யாருமே எதிர்பார்க்கல! அடுத்த விலை உயர்வுக்கு பயந்து பங்க்களில் செம்ம கூட்டம்
பெட்ரோல், டீசலின் விலைகள் கிட்டத்தட்ட கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்து வருவது இந்திய வரலாற்றிலேயே சிறப்புமிக்க விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு வருடங்களில் இந்தியாவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்த குறைப்போ, அதிகரிப்போ கொண்டுவரப்படவில்லை.
கடந்த மார்ச் 27இல் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதால், இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மறுப்பக்கம், அதிக ஆக்டேன் (Octane) உடன் விற்பனை செய்யப்படும் பிரீமியம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

வழக்கமான பெட்ரோல், டீசலை போன்று பிரீமியம் பெட்ரோல், டீசலின் விலைகளும் கிட்டத்தட்ட 2 வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், இந்தியன் ஆயில் (Indian oil), பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum), இந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) போன்ற முன்னணி ஆயில் நிறுவனங்கள் கடந்த மார்ச் 20ஆம் தேதி பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2.09இல் இருந்து ரூ.2.35 வரை உயர்த்தின.
அந்த சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்றுவந்த போரினால் இந்த விலை உயர்வை அவை அறிவித்தன. இந்த காரணங்களுக்காக, அதன்பின் நயாரா எனர்ஜி (Nayara Energy) என்கிற தனியார் நிறுவனமும் அதன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இந்த நிலையில் தற்போது, இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் மீண்டும் தங்களது பிரீமியம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தி உள்ளன.

பிரீமியம் பெட்ரோல் ஆனது எக்ஸ்பி95 (XP95) மற்றும் எக்ஸ்பி100 என இரு விதமான தரங்களில் விற்பனை செய்யப்படுவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். எக்ஸ்பி95 ஆனது 95 ஆக்டேன் எண் கொண்ட பிரீமியம் பெட்ரோல் ஆகும். இதில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. அதுவே, எக்ஸ்பி100 ஆனது முற்றிலுமாக எத்தனாலே கலக்கப்படாத 100 ஆக்டேன் எண் கொண்ட மிகவும் பிரீமியம் தரத்திலான பெட்ரோல் ஆகும்.
இதில், எக்ஸ்பி95 பெட்ரோலின் விலை கடந்த மார்ச் 20ஆம் தேதி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது எக்ஸ்பி100 பெட்ரோலின் விலை லிட்டருக்கு சுமார் ரூ.11 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் லிட்டருக்கு ரூ.149இல் விற்பனை செய்யப்பட்டு வந்த எக்ஸ்பி100 பெட்ரோலின் விலை தற்போது ரூ.160 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், மார்ச் 20இல் உயர்த்தப்படாமல் இருந்த பிரீமியம் டீசலின் விலையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் தரத்திலான டீசல் ஆனது 'எக்ஸ்ட்ரா க்ரீன்' (Xtra Green) என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் இதன் விலை ரூ.1.50 உயர்த்தப்பட்டு, லிட்டருக்கு ரூ.92.99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வுக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து நிலவிவரும் போர் பதற்ற சூழலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் தான் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கு நாங்கள் குறிப்பிட்டுள்ள பிரீமியம் பெட்ரோல், டீசல் விலைகள் அனைத்தும் டெல்லியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகள் ஆகும். சென்னையை பொறுத்தவரையில், இதில் இருந்து லிட்டருக்கு இன்னும் சில ரூபாய்கள் அதிகமாக வரும். பிரீமியம் பெட்ரோல் மற்றும் டீசலை அதிகமாக விலையுயர்ந்த கார் & பைக்குகளை வைத்திருப்பவர்கள் தான் பயன்படுத்துவதால், இந்த விலை அதிகரிப்பால் மக்கள் மத்தியில் பெரிய அளவிற்கு சலசலப்பு ஏற்படவில்லை.
வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கின்றன. விமானங்களில் பயன்படுத்தப்படும் டர்பைன் (Turbine) எரிபொருளின் விலையும் ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் டர்பைன் எரிபொருளின் விலை ரூ.2 லட்சத்தை தாண்டியிருக்கும் நிலையில், இந்தியாவிலேயே அதிகப்பட்சமாக சென்னையில் ரூ.2,14,597ஐ தொட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








