இனி கிரிக்கெட்ல இந்த நாட்டுக்கு சப்போர்ட் பண்ணவே கூடாது! இந்தியாவுக்கு எதிரா இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பாக்கல
உலகில் ஒரு சில நாடுகளில் மட்டும்தான் கார் உற்பத்தி மிகவும் அதிக அளவில் நடைபெறுகிறது. குறிப்பாக சீனா (China), இந்தியா (India), அமெரிக்கா (United States), ஜப்பான் (Japan), தென் கொரியா (South Korea), ஜெர்மனி (Germany) மற்றும் மெக்ஸிகோ (Mexico) போன்ற நாடுகள்தான் உலகின் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றன.
இந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், அந்தந்த நாடுகளின் உள்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த ஏற்றுமதி தொடர்பான விஷயத்தில் சீனா மற்றும் இந்தியா ஆகிய 2 நாடுகளுக்கும் தற்போது பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பு விரிவாக விளக்குகிறது.

சீனா மற்றும் இந்தியா ஆகிய 2 நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் கார்கள், ஏராளமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில், தென் ஆப்ரிக்காவும் (South Africa) ஒன்றாகும். சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 4 வருடங்களில் மட்டும் சீனாவில் இருந்து தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 368 சதவீதம் உயர்ந்துள்ளது. மறுபக்கம் இந்தியாவில் இருந்து தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 135 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த கார்களில் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 53 சதவீதம் ஆகவும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 22 சதவீதம் ஆகவும் உள்ளது. தென் ஆப்ரிக்க சந்தையில் சீனா மற்றும் இந்திய கார்கள் ஆதிக்கம் செலுத்துவதை இந்த புள்ளி விபரங்கள் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
எனவே தென் ஆப்ரிக்க அரசு தங்கள் உள்நாட்டு கார் உற்பத்தி துறையை பாதுகாப்பதற்காக தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சீனா மற்றும் இந்தியாவில் இருந்து தென் ஆப்ரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதிப்பதற்கு தென் ஆப்ரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து எகனாமிக் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தென் ஆப்ரிக்க அரசு இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் எடுக்கவில்லை. ஆனால் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதிப்பது தொடர்பாக தென் ஆப்ரிக்க அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
ஒருவேளை 50 சதவீத வரி விதிக்கப்பட்டால், சீனா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் விலை தென் ஆப்ரிக்காவில் உயரும். இதன் காரணமாக அங்கு சீனா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் விற்பனை குறையும். மாறாக தென் ஆப்ரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் விற்பனை அதிகரிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), மஹிந்திரா (Mahindra) மற்றும் டாடா (Tata) போன்ற நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து தென் ஆப்ரிக்காவிற்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. ஒரு வேளை தென் ஆப்ரிக்கா 50 சதவீதம் வரி விதித்தால், இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் பாதிப்பு ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








