தமிழ்நாட்டில் இன்னும் ஏன் BH Series பதிவு கிடைக்கவில்லை? 5 ஆண்டுகளாக நீடிக்கும் குழப்பத்திற்கு பின்னணி என்ன?

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி நிமித்தமாக அடிக்கடி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள், தங்களது சொந்த வாகனங்களை வேறு மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை வேறு மாநிலத்தில் 12 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தும்போது, அந்த மாநிலத்தில் பதிவு செய்வது கட்டாயமாக இருப்பதுடன், அதற்கான வரிகளையும் செலுத்த வேண்டி இருக்கிறது.

மேலும், பழைய பதிவு எண்ணை ரத்து செய்து அதற்கான NOC பெற்று புதிய மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், பழைய மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு செலுத்திய வரி மீதமுள்ள ஆண்டுகளுக்கு கணக்கிட்டு திரும்ப பெறுவதிலும் காலதாமதமும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.

BH Series Number Plate

இந்த நடைமுறை மேற்கொள்வதற்கான நேர விரயத்தையும், அலைச்சல் மற்றும் கூடுதல் நிதி சுமையையும் தவிர்க்கும் நோக்கில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (MoRTH) பாரத் சீரிஸ் (BH Series) எனும் அகில இந்திய வாகனப் பதிவு முறையை அறிமுகப்படுத்தியது.

கடந்த 2021 ஆகஸ்ட் 26 அன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, அதே ஆண்டு செப்டம்பர் 15 முதல் இந்த நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. ஆனால், இந்தத் திட்டம் நாடு முழுவதும் அறிமுகமாகி பல ஆண்டுகள் கடந்தும், தமிழ்நாட்டில் இது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

RTO Office

காரணம் என்ன?

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கார் மற்றும் இருசக்கர வாகன டீலர் ஊழியர்களிடம் நாம் மேற்கொண்ட விசாரணையில், வருவாய் இழப்பு ஏற்படும் என்ற காரணத்தால், இந்த திட்டத்தை செயல்பாட்டு கொண்டு வருவதில் தமிழக அரசு தீவிரம் காட்டவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வழக்கமாக தமிழ்நாட்டில் தனியார் வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்கான சாலை வரி ஒரே முறையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால் BH Series பதிவு செய்யும்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரி செலுத்தும் முறை உள்ளது. இதுகுறித்து RTO மற்றும் கார் டீலர் பணியாளர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மாநில வருவாய் குறையும் என்ற காரணத்தால் இதில் தீவிரம் காட்டப்படவில்லை என்ற கருத்து இருக்கிறது.

Also Read

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை BH சீரிஸ் பதிவை ஏற்றுக்கொள்வது குறித்து ஏற்கனவே பரிசீலித்து இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரி வசூலிக்கும் முறையை தமிழ்நாட்டிலும் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவு கடந்த 2024ம் ஆண்டு நிதித்துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால், அதன்பிறகு மாநில அளவில் இது முழுமையான நடைமுறையாக மாறியதற்கான தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

வருவாய் இழப்பு?

இதற்கிடையே BH Series மூலம் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற கவலையை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கொடுத்த விளக்கத்தின்படி, BH சீரிஸ் பதிவு எண் மூலமாக வாகனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரி வசூலிக்கப்படுகிறது. மேலும், BH சீரிஸ் வாகனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான வரி, மத்திய அரசின் கணக்கீட்டின்படி 1.25 மடங்கு அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. எனவே, மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது என்பதே மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது.

TN-KA Border

இதுகுறித்து சென்னை மற்றும் கோவையை சேர்ந்த கார் டீலர்களின் பணியாளரிடம் விசாரித்தபோது, தமிழ்நாட்டில் வழக்கமான நடைமுறையில் BH பதிவு கிடைக்காத நிலையில், தகுதி பெற்ற சில வாடிக்கையாளர்கள் தாங்கள் வசிக்கும் அல்லது பணிபுரியும் மற்றொரு மாநிலத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்வது குறித்து டீலர்களிடம் கேட்டுள்ளனர். கார் விலை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் நிலையில், தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் இருந்தால், முதலில் தற்காலிக பதிவு பெற்று பின்னர் புதுச்சேரி அல்லது பெங்களூரில் உரிய நடைமுறையின் மூலம் பதிவு செய்வது ஒரு உபாயமாக அவர்களுக்கு கூறி உள்ளனர்.

Also Read

ரீசேல் பிரச்னை

இதற்கு இடையில் BH Series வாகனத்தை எதிர்காலத்தில் விற்பனை செய்யும்போது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. BH சீரிஸ் வாகனம் தகுதியுள்ள மற்றொரு நபருக்கு விற்கப்பட்டால், அந்த பதிவு தொடர்ந்து BH சீரிஸ் பதிவிலேயே இருக்க முடியும். ஆனால் வாங்குபவர் BH சீரிஸ் பதிவுக்கு தகுதியற்றவராக இருந்தால், அந்த வாகனத்தை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் வழக்கமான பதிவு முறைக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். எனவே, BH சீரிஸ் வாகனத்தை வாங்குபவர்கள் பதிவு மாற்றம் செய்வது குறித்த இந்த விஷயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை BH சீரிஸ் பதிவு எண்ணுக்கு வரி செலுத்த வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில், 7 நாட்கள் கால அவகாசத்திற்கு பிறகு நாள் ஒன்றுக்கு ரூ.100 அபாரதத் தொகையுடன் சேர்த்து வரி செலுத்தும் நிலையும் உள்ளது. எனவே, இவற்றை மனதில் வைத்தே BH சீரிஸ் நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 14 ஆண்டுகள் முடிந்த பிறகு BH சீரிஸ் வாகனங்களுக்கு ஆண்டுதோறும் வரி வசூலிக்கப்படும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ராணுவப் பணியாளர்கள், பொதுத்துறை நிறுவன (PSU) ஊழியர்கள் மற்றும் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கிளை அலுவலகங்களைக் கொண்ட தனியார் நிறுவன ஊழியர்களுக்கு BH சீரிஸ் பதிவு தகுதியின் அடிப்படையில் பொருந்தும். தனியார் துறை ஊழியர்கள் இதற்காகப் படிவம் 60 (Form 60) சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

TN Number Plate

பழைய கார் பதிவை மாற்றலாமா?

ஏற்கனவே தமிழ்நாட்டில் 15 ஆண்டு வரி செலுத்தி மாநில எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட காரை படிவம் 27A மூலம் BH சீரிஸ் பதிவுக்கு மாற்ற மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமுண்டு. ஆனால், ஏற்கனவே செலுத்திய மாநில வரியில் மீதமுள்ள தொகையை எவ்வாறு கணக்கிட்டு திருப்பி வழங்குவது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதனால், இந்த நடைமுறையையும் தமிழ்நாடு, கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

மத்திய அரசின் BH சீரிஸ் விதிகள் அமலில் இருந்தாலும், தமிழ்நாட்டில் தகுதியுள்ள வாகன உரிமையாளர்களுக்கு கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமான விஷயமாகவே உள்ளது. குறிப்பாக புதிய வாகனங்களுக்கான BH சீரிஸ் பதிவு, ஏற்கனவே உள்ள வாகனங்களை BH சீரிஸ் பதிவுக்கு மாற்றுவது மற்றும் ஏற்கனவே செலுத்திய மாநில வரியை சரிசெய்வது ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து தீர்வு வழங்க வேண்டும் என்பதே தகுதியுடைய வாகன உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Article Published On: Saturday, September 26, 2026, 13:20 [IST]
English summary
Tamil nadu bh series registration rules implementation status report new existing vehicles
மேலும்... #tamilnadu
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X