இவர்கிட்ட இந்த கார் எல்லாம் கூட இருக்கா!! கலைஞருக்கு 34 வயது இருக்கும்போது உருவாக்குன லேண்ட் ரோவர் கார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K Stalin), ஒரு பழமையான 1958 மாடல் லேண்ட் ரோவர் சீரிஸ் I (Land Rover Series I) கார் உடன் காட்சி தந்துள்ளார். ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் புதிய ஆலையில் லேட்டஸ்ட் லேண்ட் ரோவர் எவோக் (Land Rover Evoque) காரை ஓட்டி பார்த்த முதல்வர், அப்போது எடுக்கப்பட்ட படங்களுடன் சேர்த்து பழைய லேண்ட் ரோவர் சீரிஸ்-1 கார் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று (பிப்.09) தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ் - ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் புதிய பசுமைத் தொழிற்சாலையை முதலமைச்சர் நேரில் சென்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு, நவீன தொழில்நுட்பத்திற்கும் பழமையின் பாரம்பரியத்திற்கும் இடையே ஒரு மாறுபட்ட பயணமாக அமைந்தது.

பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் JLR பெயரில் சுமார் ரூ.9,000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுவரும் இந்த தொழிற்சாலையின் முதல் கட்டத்திற்கு ரூ.900 கோடி செலவிடப்பட்டுள்ளது. அடுத்த 5- 7 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் வகையில் இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில், சிகேடி (CKD) முறையில் வெளிநாட்டில் இருந்து பாகங்கள் கொண்டுவரப்பட்டு, இங்கு முழு காராக ஆண்டுக்கு சுமார் 20,000 கார்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் JLR நிறுவனத்தின் ஆடம்பர கார் மாடல்களைத் தயாரிப்பதற்கான முதல் ஆலையாகும். இங்கிலாந்து, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுடன், உலகளாவிய உற்பத்திக் களத்தில் இந்தியாவையும் இது இணைக்கிறது.

470 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஆலை, 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கவும், நீர்-நேர்மறை ஆலையாகவும் நிறுவப்பட்டு வருகிறது. இத்தகைய ஆலையின் முதற்கட்ட பகுதியை திறந்து வைத்ததுடன், அங்கு அசெம்பிள் (Assemble) செய்யப்பட்ட முதல் எவோக் காரை டிரைவர் சீட்டில் அமர்ந்து முதலமைச்சர் ஓட்டியும் பார்த்தது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
அப்போது அவருடன் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட படங்களுடன், பழமையான 1958 மாடல் லேண்ட் ரோவர் கார் உடன் எடுத்துக் கொண்ட படத்தையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
பழைய லேண்ட் ரோவரையும், நவீன ரேஞ்ச் ரோவர் எவோக்கையும் ஒப்பிட்டுப் புகைப்படங்களைப் பகிர்ந்து, "இரு வேறு காலங்கள்" வழியாக பயணம் செய்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 1958 மாடல் லேண்ட் ரோவர் சீரிஸ் I ஆனது பிரிட்டிஷ் நாட்டில் தோன்றி பின்னர் உலகம் முழுவதும் பிரபலமாகிய லேண்ட் ரோவர் கார்களுக்கு எல்லாம் முன்னோடியாகும். இன்னும் சொல்லப்போனால், இது லேண்ட் ரோவர் பிராண்டின் துவக்கத்தைக் குறிக்கிறது.

இருப்பினும், முதலமைச்சர் உடன் காட்சி தரும் முதல் சீரிஸ் லேண்ட் ரோவர் கார் ஆனது அதன் காலக்கட்டத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட கார் ஆகும். அதாவது, அதே 1958ஆம் ஆண்டில் 2ஆம் சீரிஸ் லேண்ட் ரோவர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. பழமையான கார்கள் மீது கொண்ட ஆர்வத்தால், ஸ்டாலின் இந்த காரின் மூலம் பிராண்டின் நீண்ட கால பாரம்பரியத்தை எடுத்துக்காட்டினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலமைச்சர் ஸ்டாலினின் கார்கள் மீதான ஆர்வம் அனைவரும் அறிந்ததே. அவர் சமீபத்தில் ஒரு பழமையான ஃபியட் 1100 (MER 6172) காரை ஓட்டி வரும் படங்களும், ஜெர்மனியின் டஸெல்டோர்ஃபில் உள்ள கிளாசிக் ரெமிஸ் போன்ற மையங்களுக்குச் சென்றதும் இதற்கு சான்றாகும். அவரது அரசு வாகனக் குழுவில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 (Defender 110) மற்றும் ஒரு வெள்ளை நிற டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டை "இந்தியாவின் டெட்ராய்ட்" என்று தொடர்ந்து வலியுறுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின், மேம்பட்ட உற்பத்தி மற்றும் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மாநிலத்தின் தயார்நிலையை எடுத்துரைக்கிறார். இந்த புதிய JLR ஆலை, அவரது இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு முக்கிய ஊக்கசக்தியாக அமைந்துள்ளது. அதன் வெளிப்பாடாகவே, நவீன கால மாற்றத்தின் அடையாளமாக, இந்த புதிய ராணிப்பேட்டை ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் எவோக் காரை முதலமைச்சர் ஸ்டாலின் தன் கைப்பட ஓட்டிப் பார்த்தார்.


Click it and Unblock the Notifications









