ஊழியர்களின் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர்! ஷோரூமுக்கு அழைத்துவந்து சிஇஓ வழங்கிய காரின் விலை இத்தனை லட்சமா...?
டாடா சியரா (Tata Sierra), இந்திய கார்கள் மார்க்கெட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்துவரும் கார். 1990ஆம் காலக்கட்டத்தில் விற்பனையில் இருந்த சமயத்தில் சியரா காரை வாங்க முடியாமல் போனவர்கள் அனைவரும் இந்த காரை இப்போது போட்டிப் போட்டு வாங்கி வருகின்றனர். அப்படியிருக்க, இங்கு ஒரு தனியார் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு பிராண்ட்-நியூ டாடா சியரா கார்களை பரிசாக வழங்கி பிரம்மிக்க வைத்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்குவது சமீப காலமாக அவ்வப்போது நடக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. சமீபத்தில் கூட சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் அதன் ஊழியர்களில் 12 பேருக்கு விலையுயர்ந்த ஆடி (Audi) கார்களை பரிசாக வழங்கி பிரம்மிக்க வைத்திருந்தது. அந்த வரிசையில் தற்போது பெங்களூருவில் ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களை ஆச்சிரியப்படுத்தி உள்ளது.

தங்கம் வாங்குதல் மற்றும் நிதி சேவைகளை வழங்கும் பெங்களூருவை சேர்ந்த 'வொயிட் கோல்டு மனி' (White Gold Money) என்கிற நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், தனது ஊழியர்களுக்கு டாடா சியரா மற்றும் அல்ட்ராஸ் (Altroz) கார்களை நிறுவனம் பரிசாக வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பெங்களூருவில் டாடா டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்தில் டெலிவிரிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த டாடா கார்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் உள்ளன. நேரடியாக ஷோரூமில் இருந்தே ஊழியர்களுக்கு கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. இந்த கார் டெலிவிரி நிகழ்ச்சியில் வொயிட் கோல்டு மனி நிறுவனத்தின் சிஇஓ (CEO) பாபு சிஜே கலந்துக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு கார்களுக்கான சாவியை தன் கைப்பட வழங்கினார்.

மனைவி பீனா பாபு உடன் சிஇஓ பாபு சிஜே வந்த லெக்ஸஸ் எல்.எம் 350எச் (Lexus LM 350h) காரும் வெள்ளை நிறத்தில் இருந்தது. இதில் இருந்து பாபு சிஜேவுக்கு வெள்ளை நிறம் என்றால் பிடிக்கும் என்பதையும், அதன் காரணமாகவே தனது ஊழியர்களுக்கான கார்களையும் அவர் வெள்ளை நிறத்தில் தேர்வுச் செய்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.
இந்த விலையுயர்ந்த, பிரம்மாண்டமான லெக்ஸஸ் எல்.எம் 350எச் காரையும் சிஇஓ பாபு சிஜேவுக்கு அவரது மகன் ராகுல் ஜோசப் இந்த டெலிவிரி நிகழ்ச்சியில் வைத்துதான் பரிசாக வழங்கியுள்ளார். சுமார் ரூ.2.70 கோடி மதிப்பிலான இந்த லெக்ஸஸ் எம்பிவி காரை சமீப காலத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், ஷான்வி கபூர், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா என இந்தியாவில் பல பிரபலங்கள் வாங்கி உள்ளனர்.
டாடா கார்களை பரிசாக பெற்ற ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் ஷோரூமுக்கு வருகை தந்திருந்தனர். அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட கார்களில், நான்கு டாடா அல்ட்ராஸ் கார்கள் இடம்பெற்று இருந்தன. மீதி எல்லாம் டாடா சியரா கார்கள் ஆகும். கடந்த 2025 நவம்பர் மாதத்தில் டாடா சியரா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து டெலிவிரிகள் கடந்த ஜனவரி மாதத்தில் துவங்கப்பட்டன.
மொத்தம் 24 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் டாடா சியராவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.11.49 லட்சத்தில் இருந்து ரூ.21.29 லட்சம் வரையில் உள்ளன. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் சியரா விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்குவது சமீப காலமாகவே ஒரு டிரெண்ட் ஆக மாறி வருகிறது. ஆடி, பிஎம்டபிள்யூ (BMW) போன்ற விலையுயர்ந்த கார்களை வழங்குவதை போன்று, டாடா சியரா போன்ற லேட்டஸ்ட் மாடர்ன் கார்களை வழங்குவதும் பரிசை பெறும் ஊழியர்களுக்கு மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








