மோதலை தவிர்க்கும் வி2வி... அனைத்து வாகனங்களிலும் கட்டாயமாகிறது... சாலைப் பாதுகாப்பில் அடுத்த புரட்சிகர திட்டம்

சாலை விபத்துக்களை பெருமளவு குறைக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. கார், பைக், மட்டுமின்றி, பஸ், டிரக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் V2V என்று குறிப்பிடப்படும் இந்த வாகனங்களுக்கு இடையிலான எச்சரிக்கை தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத்தை கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வரும் 2028ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து புதிய இலகு, நடுத்தர மற்றும் கனரக வகை வாகனங்களிலும் இந்த பாதுகாப்பு வசதி இடம்பெறும். வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறிந்து அதனை தவிர்ப்பதற்கான எச்சரிக்கையை இந்த Vehicle To Vehicle Communication System (V2V) என்று குறிப்பிடப்படும் பாதுகாப்பு தொழில்நுட்பம் வழங்கும்.

V2V Tech India Explainer

செயல்படும் விதம்

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக வயர்லெஸ் முறையில் சாலையில் செல்லும் வாகனங்கள் அவசர சமயங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். இதற்கு செயற்கைகோள் இன்டர்நெட் அல்லது மொபைல் நெட்வொர்க் போன்ற இணைய தொழில்நுட்பம் அவசியமிருக்காது. அதாவது, மொபைல்போனில் புளுடூத் செயல்படுவது போல குறிப்பிட்ட பகுதியில் செல்லும் வாகனங்கள் இடையே ரேடியோ சிக்னல் முறையில் இந்த பரிமாற்றம் செயல்படும். வாகனத்தின் வேகம், திசை, இருப்பிடம் பிரேக் பிடிப்பது உள்ளிட்ட தகவல்களை அருகில் வரும் வாகனங்களுக்கு சில மில்லி வினாடிகளில் அனுப்பப்படும்.

உதாரணத்திற்கு உங்களுக்கு முன்னால் செல்லும் கார் திடீரென அவசர பிரேக் போடும் நிலை ஏற்பட்டால், அதனை நீங்கள் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே உங்களது காரில் இருக்கும் V2V தொழில்நுட்பத்தின் மூலமாக எச்சரிக்கை வந்துவிடும். அதேபோல், கண்ணுக்குப் புலப்படாத பகுதிகளிலும், வளைவுகளிலும் வரும் வாகனங்கள், தவறான திசையில் வரும் வாகனங்கள், சந்திப்புகளில் மோதும் அபாயம் போன்றவற்றையும் இந்த பாதுகாப்பு கவசம் மூலமாக தவிர்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

வரைவு அறிக்கை விபரம்

இதுதொடர்பாக மத்திய மோட்டார் வாகன விதிகள் 2026 வரைவு அறிக்கையின்படி, வரும் 2027ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் V2V வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் வாகனங்கள் AIS-230 என்ற இந்திய பாதுகாப்பு தரநிலைக்கு இணங்க இருத்தல் அவசியம். AIS-230 என்பது V2V தகவல் பரிமாற்றம், பாதுகாப்பு மற்றும் இணக்கத்தன்மைக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய வாகன தரநிலை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2028ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் அனைத்து இலகு, நடுத்தர மற்றும் கனரக என அனைத்து ரக பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களிலும் V2V அமைப்பு பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. அதாவது, பைக், ஸ்கூட்டர், கார், பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பஸ்கள், டிரக்குகளில் இந்த பாதுகாப்பு அம்சம் கட்டமாயமாகும்.

அவசியமான தொழில்நுட்பம்

கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் 5.13 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகி உள்ளது. அதில், 1.83 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருப்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த நிலையில், இந்த புதிய கவச தொழில்நுட்பத்தின் மூமலாக முன்கூட்டியே வாகன ஓட்டிகள் அபாயத்தை உணர்ந்து விபத்துக்களை தவிர்க்க முடியும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக சாலை விபத்துக்களை பெருமளவு குறைக்க வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. வாகனப் பெருக்கம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் இந்த சூழலில், இந்த பாதுகாப்பு அம்சம் நிச்சயம் தேவையான ஒன்றாகவே பார்க்க முடிகிறது.

தற்போது இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கட்டாயமாக்குவதற்கான வரைவு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள், வாகன உற்பத்தியாளர்களின் கருத்துக்களை பரிசீலித்த பிறகு இறுதி விதிமுறைகள் அறிவிக்கப்படும்.

அதன்பிறகு, வரும் 2028ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களிலும் இந்த புதிய பாதுகாப்பு அம்சம் கட்டாயமாகும் நடைமுறை அமலுக்கு வரும். இறுதி அறிவிப்பு வெளியிடப்படப்பட்டு அமலுக்கு வந்தால் இந்தியாவில் வாகனப் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டது போன்று அடுத்ததாக V2V அமைப்பும் ஒரு முக்கிய மைல்கல்லாக மாறும். இதன் மூலம் எதிர்காலத்தில் சாலை விபத்துகளை கணிசமாக குறைக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Article Published On: Wednesday, August 5, 2026, 9:55 [IST]
English summary
V2v communication system india mandatory from 2028
மேலும்... #road safety #india #automobiles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out