மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு மொத்தமா இந்தியாவுக்கே வந்திட போகுதா? ஃபோக்ஸ்வாகன் பெருசா என்னமோ பண்ண போகுது!

வாகன உலகின் மாபெரும் சாம்ராஜ்யமான ஃபோக்ஸ்வாகன் (Volkswagen) வரலாறுகாணாத ஒரு பிரம்மாண்ட மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. சீன நிறுவனங்களின் போட்டியினாலும், எலெக்ட்ரிக் வாகன (EV) உலகிற்கு மாறுவதற்கான பெரும் செலவினங்களினாலும், ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன், தனது ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்றியமைக்கும் அதிரடி திட்டங்களை பரிசீலித்து வருகிறது.

சுமார் 1 லட்சம் பேரை வேலையை விட்டு நீக்கவும், ஜெர்மனியில் உள்ள நான்கு பிரம்மாண்ட தொழிற்சாலைகளை மூடவும் இந்த ஆட்டோமொபைல் ஜாம்பவான் திட்டமிட்டு வருவது ஒட்டுமொத்த உலக சந்தையையும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஃபோக்ஸ்வாகனின் இந்த ரகசிய திட்டம் என்று ராய்ட்டர்ஸ் (Reuters) மற்றும் மேனேஜர் மேகசின் (Manager Magazin) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆலிவர் புளூம் இந்த அதிரடி மறுசீரமைப்பு திட்டத்தை நிறுவனத்தின் உயர்மட்ட தலைவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

volkswagen crisis deepens

வருகிற ஜூலை 9 அன்று நடைபெறவிருக்கும் அதிகாரப்பூர்வ கூட்டத்தில் இந்த வியூகம் இறுதி செய்யப்பட உள்ளது. ஜெர்மனியில் எம்டன் (Emden), ஹனோவர் (Hanover), ஸ்விக்காவு (Zwickau) ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுடன், ஆடி (Audi) நிறுவனத்தின் நெக்கர்சுல்ம் (Neckarsulm) ஆலை என மொத்தம் நான்கு முக்கிய தொழிற்சாலைகளை மூட ஃபோக்ஸ்வாகன் குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்த முடிவால் மட்டும் சுமார் 45,000 பணியாளர்கள் நேரடியாக பாதிக்கப்படக்கூடும்.

மேலும், 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொழிற்சங்கங்களுடன் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்ட 50,000 வேலைவாய்ப்பு குறைப்புகளையும் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக 1 லட்சம் பணியிடங்கள் வரை ரத்தாகக்கூடும் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஃபோக்ஸ்வாகன் சிஇஓ ஆலிவர் புளூம் மற்றும் தலைமை நிதி அதிகாரி (CFO) ஆர்னோ ஆண்ட்லிட்ஸ் ஆகியோரின் தலைமையில், நிறுவனத்தின் உள் கட்டமைப்பு முற்றிலும் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

volkswagen crisis deepens

அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீடுகளுக்கான பட்ஜெட்டை சுமார் 15 சதவீதம் குறைத்து 130 பில்லியன் யூரோக்களாக மாற்ற ஃபோக்ஸ்வாகன் திட்டமிட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமா? ஃபோக்ஸ்வாகனின் முக்கிய பயணிகள் வாகன பிரிவையும், அதன் பிரத்யேக பாகங்கள் தயாரிப்பு பிரிவையும் தனித்தனி சுதந்திரமான நிறுவனங்களாக பிரித்துவிடவும் தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

இந்த எதிர்கால மாற்றங்கள் குறித்து ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ஊடகத் தொடர்பாளர் நேரடியாக கருத்து கூற மறுத்தாலும், நிறுவனத்தின் எதிர்கால நிலைத்தன்மையை உறுதி செய்ய குழுமத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் தேவை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், இந்த அதிரடி முடிவுகள் அவ்வளவு எளிதில் அரங்கேறிவிடாது.

ஜெர்மனியின் வலிமைமிக்க 'ஐஜி மெட்டல்' (IG Metall) தொழிற்சங்கமும், நிறுவனத்தின் மத்திய பணியாளர் கவுன்சிலும் இணைந்து இந்த ஆலை மூடல்களையும், வேலை நீக்கங்களையும் தடுத்து நிறுத்த அனைத்து வழிகளிலும் போராடப்போவதாக ஜூன் 26ஆம் தேதி வெளியிட்ட கூட்டு அறிக்கையில் சூளுரைத்துள்ளன. மேலும், ஜெர்மனியின் லோயர் சாக்சனி (Lower Saxony) மாநில அரசின் ஒப்புதலையும் பெறுவது இந்த அதிரடி திட்டத்திற்கு கட்டாயமாகும்.

ஏனெனில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரராக ஜெர்மனியின் இந்த மாநில அரசாங்கம் விளங்குகிறது. இத்தகைய அதிரடி முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்று தேடினால், அது ஃபோக்ஸ்வாகனுக்கு சீன சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வீழ்ச்சியே ஆகும். அலிக்ஸ்பார்ட்னர்ஸ் (AlixPartners) தரவுகளின்படி, சீனாவில் வெளிநாட்டு கார் நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 2020இல் 57 சதவீதமாக இருந்தது. ஆனால் அது 2025இல் வெறும் 32 சதவீதமாக சரிந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல தசாப்தங்களாக சீனாவில் விற்பனையில் முதலிடத்தில் இருந்த ஃபோக்ஸ்வாகன், எலெக்ட்ரிக் கார்களின் வளர்ச்சியினால் 2024இல் 'பிஒய்டி' (BYD) நிறுவனத்திடமும், 2025இல் 'கீலி' (Geely) நிறுவனத்திடமும் தனது இடத்தை பறிகொடுத்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சீன எலெக்ட்ரிக் கார் நிறுவனங்கள் ஐரோப்பிய மண்ணிலும் தங்களது மார்க்கெட்டை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக உயர்த்தி அசுர வேகத்தில் முன்னேறி வருகின்றன. இந்த உலகளாவிய போட்டியை எதிர்கொண்டு ஃபோக்ஸ்வாகன் தனது புதிய வியூகங்கள் மூலம் மீண்டும் எல்லோரையும் வியக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Article Published On: Saturday, June 27, 2026, 6:23 [IST]
English summary
Volkswagen crisis deepens 1 lakh jobs and 4 german factories face the axe
மேலும்... #volkswagen #germany #job cuts #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out