17 ஆயிர ரூபாய் கூடுதலா செலவு பண்ணா ராயல் என்ஃபீல்டு பைக்கையே வாங்கிட்டு போய்டலாம்! எதை வாங்குவதுனு குழப்பமா?
இந்த மோட்டார்சைக்கிள்களின் என்ஜின் திறன் மற்றும் அவற்றின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது இந்த ஒப்பீடு வினோதமாகத் தோன்றலாம். இருப்பினும், நீங்கள் இந்த பைக்குகளில் ஒன்றை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இவை இரண்டும் எளிதில் அணுகக்கூடிய மோட்டார்சைக்கிள்கள், ஒத்த ஆற்றல் புள்ளிவிவரங்கள் மற்றும் கிட்டத்தட்ட ஒரே விலை வரம்பில் வருகின்றன.
இந்த இரு பைக்குகள் எவை என்றால், யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 (Yamaha XSR155) மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) என்பன ஆகும். இதில், எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கை 'ஸ்போர்ட் ரெட்ரோ' என்று யமஹா அழைக்கிறது. இது யமஹா ஆர்15 (R15) மற்றும் எம்டி-15 (MT-15) பைக்குகளின் சேசிஸ் (Chassis) மற்றும் என்ஜினைப் பகிர்ந்து கொள்கிறது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 சற்று பழமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு: எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக் 155சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் மூலம் 10,000 ஆர்பிஎம்-இல் 18.4 குதிரைத்திறனையும் (hp), 7,500 ஆர்பிஎம்-இல் 14.2 என்எம் (Nm) டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் வருகிறது.
| Specifications | XSR155 | Hunter 350 |
|---|---|---|
| Engine Displacement | 155 cc | 349 cc |
| Max Engine Power | 18.1 bhp @ 10,000 rpm | 20.2 hp @ 6,100 rpm |
| Max Engine Torque | 14.2 Nm @ 7,500 rpm | 27 Nm @ 4,000 rpm |
| Number of Gears | 6 | 5 |
| Fuel Tank Size | 10 Litres | 13 Litres |
மறுப்புறம் ஹண்டர் 350 ஆனது 349சிசி ஏர்-கூல்டு என்ஜின் மூலம் 6,100 ஆர்பிஎம்-இல் 20 குதிரைத்திறன், 4,000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறனை உருவாக்குகிறது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் வருகிறது. இந்த அளவீடுகள் மட்டுமே முழு உண்மையைச் சொல்லாது; இந்த இரு என்ஜின்களுக்கு மாறுபட்ட குணாதிசயங்கள் உள்ளன.

அதன் மூலமாக, எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக் 11.66 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டக்கூடியதாகவும், ஹண்டர் 350 பைக் 15.15 வினாடிகளை எடுத்துக்கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. எக்ஸ்.எஸ்.ஆர் 155, வேரியபிள் வால்வு ஆக்சுவேஷன் (VVA) தொழில்நுட்பத்துடன் அதிக ஆர்பிஎம்-க்கு உத்வேகம் அளித்து, 7,000 ஆர்பிஎம்-க்கு மேல் இனிமையான எக்ஸாஸ்ட் சத்தத்தை வெளிப்படுத்துகிறது.
| Acceleration | XSR 155 | Hunter 350 |
|---|---|---|
| 0-60kph | 4.29 seconds | 4.95 seconds |
| 0-80kph | 7.02 seconds | 8.75 seconds |
| 0-100kph | 11.66 seconds | 15.15 seconds |
ஹண்டர் 350 உச்ச ஆற்றலை 6,100 ஆர்பிஎம் வேகத்தில் உற்பத்தி செய்து, மிட்-ரேஞ்ச் ஆர்பிஎம்களில் சிறப்பாக செயல்படுகிறது. இரு பைக்குகளிலும் மணிக்கு 100கிமீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பயணிக்க முடியும். எக்ஸ்.எஸ்.ஆர்155 அதிக உச்சப்பட்ச வேகத்தையும், ஆறாவது கியரின் நன்மையையும் கொண்டுள்ளது. ஹண்டர் 350 அதிக டார்க் திறன் மூலமாக குறைவான கியர் மாற்றங்களுடன் நகரத்தில் சிறப்பாக செயல்படுகிறது.

எக்ஸ்.எஸ்.ஆர் 155 நகரத்திற்கு ஏற்றதாயினும், ஆக்ஸலரேஷனுக்கு அடிக்கடி கியர் மாற்றங்கள் தேவை. இரு மோட்டார்சைக்கிள்களிலும் ஸ்லிப்-அசிஸ்ட் கிளட்ச் அமைப்பு சீராக இயங்குகிறது. எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கின் சிறிய என்ஜின் மற்றும் குறைந்த எடை காரணமாக மைலேஜ் சிறப்பாக கிடைக்கிறது. ஹண்டர் 350 ஆனது மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளை காட்டிலும் எடை குறைவானதாக இருப்பினும், யமஹா பைக் உடன் ஒப்பிடுகையில் குறைவான மைலேஜையே வழங்குகிறது.
| Specifications | XSR155 | Hunter 350 |
|---|---|---|
| Kerb Weight | 137 kg | 181 kg |
ரைடிங் சௌகரியம் மற்றும் ஹேண்ட்லிங்: 137 கிலோ எடை கொண்ட எக்ஸ்.எஸ்.ஆர் 155, ஹண்டர் 350 பைக்கை விட சுமார் 44 கிலோ இலகுவானது. இதனால் நகரத்தில் எக்ஸ்.எஸ்.ஆர் 155 மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கில் தரையில் இருந்து 810மிமீ உயரத்திலான ரைடர் இருக்கை உடன் ஒப்பிடுகையில், 790 மிமீ உயரம் கொண்ட ஹண்டர் 350, குறைந்த உயரம் கொண்ட ஓட்டுநர்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

எக்ஸ்.எஸ்.ஆர்155 ஆக்ரோஷமான ரைடிங் பொசிஷனை வழங்குகிறது. ஹண்டரின் இருக்கை மற்றும் ஹேண்டில்பார் ஆனது நிமிர்ந்த, இலகுவான ரைடிங்கை வழங்குகிறது. ஹேண்ட்லிங்கைப் பொறுத்தவரை, எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக் அதன் டெல்டாபாக்ஸ் ஃபிரேம் மற்றும் உறுதியான சஸ்பென்ஷன் மூலம் வளைவுகளில் அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகிறது. ஹண்டரைத் திருப்ப கூடுதல் முயற்சி தேவை, ஆனால் வளைவுகளில் நிலைத்தன்மையுடன் இருக்கிறது.
எக்ஸ்.எஸ்.ஆர் 155 பைக்கின் டாப்-எண்ட் என்ஜின் வேகம் அதற்கு நம்பிக்கையான ஆற்றலை அளிக்கிறது. ஹண்டர் 350 நிதானமான பயணத்திற்குரியது. ஹண்டர் 350 பைக்கின் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், பள்ளங்கள், வேகத்தடைகளில் சவுகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. எக்ஸ்.எஸ்.ஆர் 155 பைக்கின் கடினமான சஸ்பென்ஷன், மோசமான சாலைகளில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இரு பைக்குகளின் பிரேக்கிங் திறனும் நம்பகமானதுடன், சோதனைகளில் கிட்டத்தட்ட சமமாகவே செயல்பட்டன.
தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு: எக்ஸ்.எஸ்.ஆர் 155 முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் திரை, ஸ்மார்ட்போன் இணைப்பு (அழைப்பு/குறுஞ்செய்தி அலார்ட்கள்), டிராக்ஷன் கண்ட்ரோல், USD முன்பக்க ஃபோர்க், மோனோஷாக், முழு-LED விளக்குகள், அசிஸ்ட்/ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் ஏற்கனவே கூறியதுபோல் வேரியபிள் வால்வு ஆக்சுவேஷன் என நவீன அம்சங்கள் மற்றும் பிரீமியம் ஹார்ட்வேர்களை கொண்டுள்ளது.

ஹண்டர் 350 எளிமையான, பாரம்பரிய அம்சங்களுடன் வருகிறது. டகோமீட்டர் இல்லாத செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், விலைமிக்க டாப் வேரியண்ட்களில் ட்ரிப்பர் நேவிகேஷன் போட் (எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கில் இல்லை) உள்ளன. டூயல்-சேனல் ஏபிஎஸ் (ABS), ஸ்லிப்பர் கிளட்ச் இருந்தாலும், டிராக்ஷன் கண்ட்ரோல் இல்லை. மாறாக, வழக்கமான சஸ்பென்ஷன் (டெலஸ்கோபிக் முன் ஃபோர்க், இரட்டை ஷாக் அப்சார்பர்கள்), சௌகரியம் மற்றும் பாரம்பரிய ரைடிங் உணர்வுக்கு ஹண்டர் 350 முன்னுரிமை அளிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்.எஸ்.ஆர் 155 ரூ.1.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), ஹண்டர் 350 ரூ.1.67 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என இரண்டிற்கும் ரூ.17,000 வேறுபாடு உள்ளது. இரு பைக்குகளும் விலைக்கு ஏற்ப உயர்தரமாக உணரப்படுகின்றன. பைக்கின் ஸ்டைலிங் என்பது வாங்கும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட ரசனை சார்ந்தது. எக்ஸ்.எஸ்.ஆர் 155 நியோ-ரெட்ரோ தோற்றத்திலும், ஹண்டர் 350 முழு ரெட்ரோ ஸ்டைலிலும் உள்ளன.
தரையில் இருந்து குறைந்த இருக்கை உயரம், வசதியான எர்கோனாமிக்ஸ், பின் இருக்கை பயணி பிடித்துக் கொள்வதற்கான கம்பிகளுடன் நடைமுறைத் தன்மைக்கு ஹண்டர் 350 சிறந்தது. இந்த இரண்டு பைக்குகளில் ஒன்றை தேர்வு செய்வது கடினமானதாக இருந்தாலும், ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மிகவும் கச்சிதமானதாகத் தெரிகிறது. விலையும் ஹண்டர் 350 பைக்கில் கவனிக்கத்தக்கது ஆகும். அதேநேரம், வேகமானது, இலகுவானது, அதிக எரிபொருள் திறன் கொண்டது என்பதால், எக்ஸ்.எஸ்.ஆர் 155 இந்த ஒப்பீட்டில் அதிக மதிப்புடைய வெற்றியாளராக திகழ்கிறது.
ஆயினும், மேம்படுத்தப்பட்ட ஹண்டர் 350 பைக்கின் சஸ்பென்ஷன், மென்மையான கிளட்ச், வசதியான பயணம், கவர்ச்சியான என்ஜின் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கே உண்டான 'பழைய' தோற்றம் இல்லாதது போன்ற குணாதிசயங்கள் பலரை ஈர்க்கின்றன. இளம் ஓட்டுநர்கள் எக்ஸ்.எஸ்.ஆர் 155 பைக்கின் செயல்திறன், தோற்றம், தொழில்நுட்பத்தை விரும்புவார்கள். நிதானமான, வசதியான பயணத்தை விரும்புவோரை ஹண்டர் 350 ஈர்க்கும்.


Click it and Unblock the Notifications









