வந்தவங்க எல்லாரும் இந்த காரை பற்றி தான் பேச்சு! புது வாகனம் வாங்கும் முன் இதை பார்த்துட்டு ஒரு முடிவு எடுங்க!
2025ஆம் ஆண்டிற்கான ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் (Acer FASTER Awards) அறிவிக்கப்பட்டு உள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த கார் & பைக்குகளை ஆய்வு செய்து ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளுக்கு தகுதி உடைய கார் & பைக்குகளை தேர்வு செய்யும் குழுவில் நமது டிரைவ்ஸ்பார்க் (Drivespark) குழுவை சேர்ந்த புரோமித் கோஷ் கலந்துக் கொண்டார். டிரைவ்ஸ்பார்க் உள்பட மொத்தம் 6 ஊடக நிறுவனங்கள் விருதுகளை பெறும் வாகனங்களை தேர்வு செய்துள்ளன. இதன்படி, எந்தெந்த வாகனங்கள் எந்தெந்த விருதுகளை பெற்றுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஆட்டோமொபைல் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாகவும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வாகனங்களில் சிறந்தவற்றை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஃபாஸ்டர் (FASTER) என்பதன் முழு விரிவாக்கம், ஆட்டோமொபைல்களுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வரும் ஊடகங்களின் கூட்டமைப்பு ஆகும்.

இந்த கூட்டமைப்பில் நமது டிரைவ்ஸ்பார்க்கும் அங்கம் வகிக்கிறது. இதனால், ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் சரியான வாகனங்களுக்கு வழங்கப்படுவதில் டிரைவ்ஸ்பார்க்கின் பங்களிப்பும் உள்ளது. டிரைவ்ஸ்பார்க் உள்பட கார் பிளாக் இந்தியா, காடிவாடி, கியர் ஃபிளிக், மோட்டோராய்ட்ஸ், பைலட் ஆன் வீல்ஸ் என 6 முன்னணி ஆட்டோமொபைல் மீடியோக்கள் ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் வழங்கும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
ஹரியானா மாநிலத்தின் குருக்கிராமில் இன்று (மார்ச் 26) நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான ஏசர் ஃபாஸ்டர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் வழக்கம்போல் பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வகைப்படுத்தப்பட்டு சிறந்த வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கார்களில் சிறந்த காருக்கான 'கார் ஆஃப் தி இயர்' விருது மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX)-க்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2024ஆம் வருடத்தின் சிறந்த பைக்கிற்கான விருதை பஜாஜ் ஃப்ரீடம் 125 (Bajaj Freedom) என்கிற சிஎன்ஜி (CNG) பைக் தட்டி சென்றுள்ளது. ஸ்கூட்டர் ஆஃப் தி இயர் விருது டிவிஎஸ் ஜூபிட்டர் (TVS Jupiter) ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த எலக்ட்ரிக் காருக்கான விருது எம்ஜி விண்ட்சர் (MG Windsor) எலக்ட்ரிக் காருக்கும், சிறந்த எலக்ட்ரிக் 2-வீலருக்கான விருது ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் வருடத்தின் சிறந்த விலையுயர்ந்த காருக்கான விருதை மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரும், சிறந்த விலையுயர்ந்த பைக்கிற்கான விருதை பிஎம்டபிள்யூ ஆர்1300 ஜி.எஸ் பைக்கும் தட்டி சென்றுள்ளன. கடந்த ஆண்டில் அப்டேட் செய்யப்பட்ட கார்களிலேயே சிறப்பான அப்டேட்டை பெற்ற காராக ஹூண்டாய் அல்கஸாரும், சிறப்பான அப்டேட்டை பெற்ற 2-வீலராக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர்310 பைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவை இல்லாமல், இந்த முறை புதுமையான 'காலத்தால் அழியாத' விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, காலத்தால் அழியாத 4-வீலராக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரும், 2-வீலராக ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மக்கள் பலரால் அறியும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்தப்பட்ட வாகனங்களாக மஹிந்திராவின் பி.இ 6 மற்றும் எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் கார்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டில், வாகனங்களில் சிறந்த தொழிற்நுட்பங்களை வழங்கியதற்கான விருதை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பெறுகிறது. 2024ஆம் ஆண்டில் வாகன பாகங்களை உற்பத்தி செய்து வழங்கியதில் சிறப்பாக விளங்கியதற்கான விருது மிண்டா கார்ப்பிரேஷனுக்கு வழங்கப்படுகிறது. மக்களுடன் தகவல் தொடர்பில் சிறந்து விளங்கியதற்காக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் விருதை பெறுகிறது.

கடந்த ஆண்டில் சமூக அக்கறை உடன் செயல்பட்ட தனியார் ஆட்டோமொபைல் நிறுவனமாக மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் டீலர்ஷிப் ஷோரூம் அதிகாரிகளுடன் நல்ல உறவை கொண்டிருப்பதற்காக 'பி.ஆர் டீம் ஆஃப் தி இயர்' விருதை நிஸான் நிறுவனத்தை சேர்ந்த எடெல்மேன் என்கிற தனியார் நிறுவன குழு பெறுகிறது.

அதேநேரம், மக்கள் மற்றும் டீலர்ஷிப் ஷோரூம் அதிகாரிகளுடன் நல்ல உறவை கொண்டிருப்பதற்காக தனி நபருக்கான விருதை நீராஜ் அட்ரி பெறுகிறார். அதேபோல், '2024இன் சிறந்த தகவல் தொடர்பு ஆளுமை' விருதை கியா இந்தியா நிறுவனத்தை சேர்ந்த சக்தி உபாத்யாய் அவர்களும், கௌரவ விருதை ஊடக நிறுவனங்களை ஒருங்கிணைத்தமைக்காக ரவி சர்மா அவர்களும், மோட்டார்ஸ்போர்ட் நபராக சஞ்சய் தகாலே அவர்களும், தொழிற்துறையை சேர்ந்த சிறந்த நபராக மெர்சிடிஸ்-பென்ஸின் சந்தோஷ் அய்யர் அவர்களும் விருதுகளை பெறுகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024ஆம் ஆண்டின் சிறந்த வாகனங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள வாகனங்களை உருவாக்கிய நிறுவனங்களுக்கு டிரைவ்ஸ்பார்க் சார்பில் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். விருதுகள் மூலம் ஊக்கமளித்து தரமான மற்றும் பாதுகாப்பான வாகனங்களை உருவாக்க உந்துதலாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் ஆகும். ஆதலால், ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications









