எதை பார்ப்பது எதை விடுவது என்றே தெரியல... மொத்த இந்தியாவுக்கும் சுத்தி போடனும்!!
பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆட்டோ எக்ஸ்போ 2025 மோட்டார் கண்காட்சி டெல்லியின் துவார்கா பகுதியில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 17ஆம் தேதி துவங்கிய ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சி ஜனவரி 22ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
முதல் நாளான ஜனவரி 17இல் மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் என முன்னணி கார் நிறுவனங்களும், ஹீரோ மோட்டோகார்ப், சுஸுகி மோட்டார்சைக்கிள் என முன்னணி பைக் நிறுவனங்களும் கலந்துக் கொண்டன. அதனை தொடர்ந்து 2ஆம் நாளான ஜனவரி 18ஆம் தேதியிலும் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பங்கேற்றன.

குறிப்பாக, 2வது நாளின் முதல் நிறுவனமாக மோட்டார் வாகனங்களை காட்சிப்படுத்திய வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம் பெரிதும் பலரது கவனத்தை ஈர்த்தது. வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் உலகளவில் பல நாடுகளில் மார்க்கெட்டை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, கார்கள், கனரக வாகனங்கள், 2-வீலர்கள் என பல்வேறு விதமான வாகனங்களை விற்பனை செய்கிறது.
இத்தகைய நிறுவனத்தில் இருந்து ஆட்டோ எக்ஸ்போ 2025-இல் வி.எஃப்3, விஎஃப்6, விஎஃப்7, விஎஃப்8 என 3 எலக்ட்ரிக் கார்கள் வெளியீடு செய்யப்பட்டதுடன், சில கான்செப்ட் வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து, பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து எக்ஸ்3 காரும், மினி கூப்பர் எஸ் ஜே.சி.டபிள்யூ பேக் காரும் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.75.80 லட்சம் மற்றும் ரூ.55.90 லட்சம் ஆகும்.

2வது நாளின் காலை 10 மணிக்கு பின் அசோக் லேலண்ட் மற்றும் எகா மொபிலிட்டி (Eka Mobility) நிறுவனங்களில் இருந்து சில கமர்ஷியல் வாகனங்கள் வெளியீடு செய்யப்பட்டன. அதன்பின், காலை 10.50 மணியளவில் பிரபலமான சீன எலக்ட்ரிக் கார் நிறுவனமான பிஒய்டி அதன் சீ லயன் 7 மற்றும் சீ லயன் 6 எலக்ட்ரிக் கார்களை வெளியீடு செய்தது.
அதனை தொடர்ந்து ஜேபிஎம் ஆட்டோ, டிஐ க்ளீன் மொபிலிட்டி நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்களை காட்சிப்படுத்தின. அதன்பின், இந்தியாவின் முன்னணி 2-வீலர்/ 3-வீலர் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ அதன் வாகனங்களை காட்சிக்கு நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக பஜாஜ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவை நிராகரித்தது. அதேபோல் ஹூண்டாய் நிறுவனமும் அதன் ஐயோனிக் 9 எலக்ட்ரிக் காரை மட்டுமே காட்சிப்படுத்தியது.

இதனை தொடர்ந்து, பல்வேறு சிறு, சிறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது புதிய வாகனங்களை காட்சிப்படுத்தின. அவற்றுள் நமது கவனத்தை ஈர்த்தவை என்றால், வைவா எவா என்கிற சோலார் கார், கோதாவரி இப்ளூ வாகனங்கள், சர்ளா அவியேஷனின் சுன்யா ஏர் டாக்ஸி மாதிரி உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியின் 2வது நாளும் பல்வேறு அசத்தலான வாகனங்களினால் களைக்கட்டியது. இந்த மோட்டார் கண்காட்சி ஆனது ஜனவரி 22ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. முதல் இரு நாட்களுக்கு ஊடகவியலாளர்களுக்கும், டீலர்ஷிப் அதிகாரிகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 3வது நாளில் இருந்து பொதுமக்கள் கண்காட்சியை நேரில் பார்வையிடலாம்.


Click it and Unblock the Notifications









