தலைவன் இறங்கட்டுமே... 50- 60 வருஷத்துக்கு முந்தைய பிரபலமான பைக்கின் பெயரில் புது BSA பைக்!
பி.எஸ்.ஏ (BSA) நிறுவனம் தனது முதல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான பிஎஸ்ஏ தண்டர்போல்ட் 334 ஏடிவி (Thunderbolt 334 ADV)-ஐ இத்தாலியில் நடைபெறும் EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. இது, பிஎஸ்ஏ பிராண்டின் நான்காவது புதிய மாடலாகவும், பாண்டாம் 350 (Bantam 350) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 650 (Scrambler 650) பைக்குகளின் வெளியீட்டிற்குப் பிறகு வெளிவரும் பைக்காகவும் உள்ளது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனத்தின் கீழ் இந்த பிரிட்டன் பிராண்ட் வேகமாக வளர்ச்சி அடைவதை இது காட்டுகிறது. இந்த புதிய தண்டர்போல்ட் 334 ஏடிவி பைக் முந்தைய பிஎஸ்ஏ பைக்கின் பெயரைத் தாங்கி வருகிறது. அந்த மாடல் வரலாற்று ரீதியாக சுற்றுலா மற்றும் ஆஃப்-ரோடு திறன்களைக் கொண்டிருந்தது.

மேலும், 1972ஆம் ஆண்டில் பிஎஸ்ஏ நிறுவனத்தின் பர்மிங்காம் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியான கடைசி பைக்கின் நவீன வாரிசாக இந்த புதிய தண்டர்போல்ட் பைக் திகழ்கிறது. இந்த மோட்டார்சைக்கிள், 334சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, DOHC என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது யூரோ 5+ இணக்கமானது மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹைவே மற்றும் ஆஃப்-ரோடு செயல்திறனை சமநிலைப்படுத்தும் வகையில், இந்த என்ஜின் டார்க் திறனுக்கும், குறைந்த வேகத்தில் இயங்கும் போதும் மென்மையான பயணத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக பிஎஸ்ஏ நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த புதிய தண்டர்போல்ட் பைக் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் மழை, சாலை & ஆஃப்-ரோடு என்கிற மூன்று ஏபிஎஸ் மோட்களையும் கொண்டுள்ளது.

பைக்கின் 15.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. USD முன் ஃபோர்க்குகள் மற்றும் ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் மோனோ ரியர் ஷாக் ஆகியவை இதன் சஸ்பென்ஷன் செட்-அப் ஆக உள்ளன. இந்த சஸ்பென்ஷன் அமைப்பு, சரளைப் பாதைகள், கரடுமுரடான மேற்பரப்புகள் மற்றும் சேற்று நிலப்பரப்புகளையும் எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீண்ட ஆயுளுக்கும், நீர்நிலைகளைக் கடக்கும் திறனுக்கும் வலுவூட்டப்பட்ட பாஷ் பிளேட், ஒருங்கிணைந்த வலுவேற்றப்பட்ட புற உடற்கூடு ஃபிரேம், நக்கிள் கார்டுகள் மற்றும் மேல்நோக்கி வளைந்த எக்ஸாஸ்ட் குழாய் ஆகியவையும் இந்த அட்வென்ச்சர் ரக பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், அட்ஜெஸ்டபிள் விண்ட்ஸ்கிரீன், அட்ஜெஸ்டபிள் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் அகலமான ஹேண்டில்பார்ஸ் போன்ற அம்சங்களும் இதில் உள்ளன.

இருக்கை உயரம் சுலபமாக அணுகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், இது பல்வேறு உயரம் மற்றும் அனுபவ நிலை கொண்ட ரைடர்களுக்கு ஏற்றது என பிஎஸ்ஏ தெரிவிக்கிறது. இந்த தண்டர்போல்ட் புளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் USB சார்ஜிங் போன்ற நவீன வசதிகளையும் கொண்டுள்ளது. பின்புற சப்-ஃபிரேம், பின் இருக்கை பயணி அமர்வதற்கும், லக்கேஜை வைத்து கொண்டு செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் இணை நிறுவனர் போமன் இரானி இந்த பைக் வெளியீடு குறித்து கூறுகையில், "புதிய BSA தண்டர்போல்ட் சாகசங்களுக்கு தயாராக உள்ளது. அத்துடன், நீண்ட தூர பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. டைனமிக் ஆன் & ஆஃப்-ரோடிங் திறன்கள், நிகரற்ற செயல்திறன் மற்றும் சிரமமில்லாத பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, எங்கள் புதிய பைக் நம்பிக்கையைத் தூண்டுகிறது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட பயணங்களுக்கு ஒரு அட்வென்ச்சர் டூரர் பைக்கைத் தேடும் பிரிவினரை இந்த பிஎஸ்ஏ பைக் வெகுவாக கவரலாம். கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம், தண்டர்போல்ட் ஒரு புதிய ADV பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பொறியியல் அணுகுமுறை கிளாசிக் லெஜண்ட்ஸ் கீழ் செயல்படும் பிஎஸ்ஏ, ஜாவா மற்றும் யெஸ்டி ஆகிய பிராண்டுகளுடன் பகிரப்படும். இந்த பகிர்ந்த பிளாட்ஃபார்ம் யுக்தி, ஒவ்வொரு பிராண்டின் வடிவமைப்பு அடையாளத்தையும் தக்கவைத்துக் கொண்டு, பல சந்தைகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications









