125 வருடங்களில் சென்னையில் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி இருக்கு!! இந்த பைக் வாங்குபவர்களுக்கு செம்ம லக்கு
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், இத்தாலியில் நடைபெற்று வரும் 2025ஆம் ஆண்டிற்கான EICMA கண்காட்சியில் இதுவரை இல்லாத பிரத்யேக மாடலான 'கிளாசிக் 650 125வது ஆண்டுவிழா பதிப்பு' மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் வெறும் வாகனம் மட்டுமல்ல, 125 ஆண்டுக்கால ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்கிறது.
1901ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கிய ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இன்றும் அதன் கிளாசிக்கான வடிவமைப்பு மற்றும் ராஜ கம்பீரமான ஸ்டைலை கொண்ட பைக்குகளுக்கு பெயர் பெற்றதாக உள்ளது. குறிப்பாக, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக்குகள் கடந்த பல வருடங்களாகவே மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இதனாலேயே, நிறுவனத்தின் 125 ஆண்டுகாலத்தை கொண்டாடும் விதமாக ஸ்பெஷல் எடிசனை கிளாசிக் 650 பைக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கு முன்னதாக தற்போது 2025 EICMA கண்காட்சியில் கிளாசிக் 650 காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிப்பு கிளாசிக் 650 பைக்கின் சிறப்பம்சங்களை புதுமையான பாணியில் வழங்குகிறது.
இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வரும் EICMA 2025 கண்காட்சியில், ராயல் என்பீல்டு தனது இந்த புதிய வெளியீட்டின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளாசிக் 650-இன் இந்த சிறப்புப் பதிப்பு, இந்திய சாலைகளில் ராயல் தரத்திலான பைக் ரைடிங் அனுபவத்தை வழங்கிய பிராண்டின் ஆன்மாவைத் துல்லியமாக பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த பைக்கின் அடிப்படை தோற்றம் கிளாசிக்காக இருந்தாலும், அதன் வண்ணங்களும், நுண்ணிய விவரங்களும் மற்ற மாடல்களில் இருந்து இதனை வேறுபடுத்துகின்றன. புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 650 125வது ஆண்டுவிழா பதிப்பு, ராயல் என்பீல்டின் புகழ்பெற்ற அதே தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த பைக், கண்ணீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் மற்றும் பழமையான ராயல் என்ஃபீல்டு பைக் உணர்வை அளிக்கும் நெஸ்ஸல்-ஸ்டைல் வட்ட வடிவிலான ஹெட்லேம்பை கொண்டுள்ளது. இந்த பதிப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், அதன் புதிய 'ஹைப்பர்ஷிஃப்ட்' பெயிண்ட் திட்டம் ஆகும். இது வெளிச்சம் மற்றும் கோணங்களுக்கு ஏற்ப சிவப்பு மற்றும் தங்க நிறங்களாக அழகாக மாறுகிறது.

இதன் விளைவாக, பைக் தனித்துவமான மற்றும் பிரீமியம் தோற்றத்தில் மிளிர்கிறது. இந்த பதிப்பை மேலும் சிறப்பானதாக்க, ராயல் என்பீல்டு நிறுவனம் பைக்கின் பெட்ரோல் டேங்கில் தங்க முலாம் பூசப்பட்ட '125 ஆண்டுகள்' என்கிற லோகோவை பொறித்துள்ளது. இது நிறுவனத்தின் நீண்ட கால பயணத்தை மட்டுமல்லாமல், அதன் பாரம்பரியம் மற்றும் ஸ்டைலுக்கு பிராண்ட் இன்னும் உறுதியாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.
கருப்பு நிற என்ஜின் கேஸ், கருப்பு நிற எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் கருப்பு நிற சக்கர ஸ்போக் ரிம்கள் இந்த பைக்கிற்கு ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த தோற்றத்தை அளிக்கின்றன. அதேபோல், பிரத்யேகமாக பார்த்து பார்த்து தையலிடப்பட்ட இருக்கை பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, நீண்ட தூர பயணங்களுக்கும் வசதியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: EICMA 2025 கண்காட்சியில் உலகளாவிய அறிமுகத்தைத் தொடர்ந்து, ராயல் என்பீல்டு கிளாசிக் 650 125வது ஆண்டுவிழா பதிப்பு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் அறிமுகம், நவீன தொடுதல் மற்றும் தனித்துவத்துடன் கிளாசிக் தோற்றத்தை விரும்பும் பைக் ஆர்வலர்களுக்கு ஒரு சிறப்பான தேர்வாக அமையலாம்.


Click it and Unblock the Notifications









