சிங்கத்தை சீண்டி பார்த்துட்டாங்க... வரிசையா எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்கும் ராயல் என்ஃபீல்டு!
கோவாவில் நடைபெற்றுவரும் 2025ஆம் ஆண்டிற்கான மோட்டோவெர்ஸ் (Motoverse) நிகழ்ச்சியில் ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான 'ஃபிளையிங் ஃப்ளே எஃப்.எஃப்.எஸ்.6' (Flying Flea FF.S6)-ஐ பார்வையாளர்கள் முன் காட்சிப்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இலகுரக ராணுவ பைக்கின் பெயரைத் தாங்கி வரும் இந்த பைக் ஆனது ராயல் என்ஃபீல்டின் ஃபிளையிங் ஃப்ளே வரிசையில் இரண்டாவது மாடலாகும்.
புதிய எஃப்.எஃப்.எஸ்.6 பைக், ஸ்க்ராம்ப்ளர் தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன், அகலமான ஹேண்டில்பார் மற்றும் தட்டையான இருக்கை ஆகியவை ஓட்டுநருக்கு சௌகரியமான பயண அனுபவத்தை வழங்குகின்றன. நகர்ப்புறப் பயணங்களுக்கு ஏற்ப வழக்கமான சாலைகளில் இருந்து கரடுமுரடான பாதைகள் வரையில் சமாளிக்கும் திறன் கொண்ட பைக்காக இதனை வடிவமைத்துள்ளதாக ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஃபிளையிங் ஃப்ளே பைக்கின் முன்பக்கத்தில் 19 அங்குல சக்கரமும், பின்பக்கத்தில் 18 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களில் உள்ள டூயல் பர்பஸ் டயர்கள், சாலை மற்றும் சாலை அல்லாத பயணங்களுக்கு இடையேயான சீரான மாறுதலை உறுதி செய்கின்றன. இந்த பைக்கில் பெல்ட் சிஸ்டத்திற்கு பதிலாக 'செயின் ஃபைனல் டிரைவ்' சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது, சவாலான பயணப் பாதைகளில் குறைந்த வேகத்தில் இயங்கும்போதும் பைக்கிற்கு அதிக டார்க் கிடைப்பதற்கு உதவுகிறது. வழக்கமான எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விட இந்த பைக்கின் பெரிய அளவிலான பின்பக்க ஸ்ப்ராக்கெட் ஆனது ஏற்றமான சாலைகளையும், பல்வேறு வகையான மேற்பரப்புகளையும் எளிதாகக் கடக்க உதவக்கூடியதாக உள்ளது. மெக்னீசியத்தால் ஆன பேட்டரி கேசிங், இந்த எலெக்ட்ரிக் பைக்கின் தனித்துவமான அம்சமாகும்.

இது மோட்டாரின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பைக்கின் எடையையும் குறைத்துள்ளது. இத்தகைய பேட்டரி கேசிங்கில் பொருத்தப்படும் பேட்டரி பேக், பைக்கின் வெளிப்புற வடிவமைப்புடன் ஒன்றிணைந்து அதன் சிறந்த செயல்பாட்டுத் தன்மையை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. இந்த பைக்கில் குவால்காம் ஸ்னாப்டிராகன் கியூ.டபிள்யூ.எம்2290 (Qualcomm Snapdragon QWM2290) ப்ராசஸர் மூலம் இயங்கும் இன்-ஹவுஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் உள்ளது.
இதன் மூலமாக, 4ஜி, ப்ளூடூத், வைஃபை இணைப்பு, வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓவர்-தி-ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்டுகளை பெறலாம். பிரத்யேக மொபைல் செயலி மூலம் இருக்கும் இடத்தில் இருந்தே பைக்கை பற்றிய விபரங்களை அணுகுவது மட்டுமன்றி, நேவிகேஷன் எனப்படும் பயணத்திற்கான வழக்காட்டுதல்களையும் பெறலாம். மேலும், டூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-channel ABS) அம்சமும் இந்த பைக்கில் உள்ளது.

இதனை ஆஃப்-ரோடு பயணங்களின்போது முழுமையாக அணைத்து வைக்கலாம். நகர்ப்புற சாலைகள், மண் பாதைகள் மற்றும் கலவையான நிலப்பரப்புகளுக்கு ஏற்ப பலவிதமான ரைடிங் மோடுகளும் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் இடம்பெற்றுள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம், ஃபிளையிங் ஃப்ளே எஃப்.எஃப்.எஸ்.6 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் உற்பத்தியை 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் அம்சங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் மிகவும் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் பைக்காகவும் இல்லாமல், அதேநேரம் விலை குறைவான எலெக்ட்ரிக் பைக்காகவும் இல்லாமல் நடுத்தரத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் பைக்குகளை ஃபிளையிங் ஃப்ளே என்கிற தனியாக ஒரு பிராண்டின் கீழ் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பிராண்டில் ஏற்கனவே முதல் ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்காக ஃபிளையிங் ஃப்ளே சி6 வெளியீடு செய்யப்பட்டு, வருகிற 2026 ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது இரண்டாவது எலெக்ட்ரிக் பைக்கையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2025 மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications









