வெளிநாட்டு பைக்குகளை எல்லாம் விட்டுட்டாங்க... ஹீரோ பைக்குகளை கண்காட்சியில் ஆச்சிரியமா பார்த்த பார்வையாளர்கள்!
இத்தாலி நாட்டில் நடைபெற்றுவரும் 2025ஆம் ஆண்டுக்கான EICMA கண்காட்சியில், ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் தனது புதிய வாகனங்களையும், எதிர்காலப் போக்குவரத்துத் திட்டங்களையும் பெரிய அரங்கில் காட்சிப்படுத்தி உள்ளது. இவற்றில் எதிர்கால 3-சக்கர மோட்டார்சைக்கிள் மற்றும் கலுவிங் கதவுகள் கொண்ட எலக்ட்ரிக் கார் உள்பட எதிர்பார்க்கப்பட்ட இருசக்கர வாகனங்களும் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன.
இந்த பரபரப்பான அறிமுகங்களுக்கு மத்தியில், பெரிதாகக் கவனிக்கப்படாத மூன்று முக்கியமான மாடல்களும் இருந்தன. அவை மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ட்ரீம் 250ஆர் (Xtreme 250R), கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 250 (Karizma XMR 250) மற்றும் ஸூம் 160 (Xoom 160) ஆகியவை ஆகும். இந்த மேம்படுத்தப்பட்ட வாகனங்கள், பயனர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் பல புதிய அம்சங்களை கொண்டுள்ளன.

'ஜியோ மோட்டோ பைக்ஸ்' (GeoMotoBikes) வெளியிட்டுள்ள காணொளியில் இந்த மூன்று வாகனங்களையும் தெளிவாக காண முடிகிறது. எக்ஸ்ட்ரீம் 250ஆர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹீரோ நிறுவனத்தின் முதன்மையான ஸ்ட்ரீட் நேக்கட் மோட்டார்சைக்கிளாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.1.66 லட்சமாக உள்ளது. இதன் 249.03சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு DOHC என்ஜின் அதிகப்பட்சமாக 29.5 bhp சக்தியையும், 25 Nm டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக உள்ளது.
இந்தியாவின் கால் லிட்டர் என்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிள் பிரிவில் இது மிகவும் மதிப்புமிக்க தேர்வாக கருதப்படுகிறது. EICMA கண்காட்சியில், எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஹங்க் 250ஆர் (Hunk 250R) என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரானிக் த்ரோட்டில் (ride-by-wire) மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி இதன் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும். மேலும், ஒரு டைப்-சி யுஎஸ்பி போர்ட்டும் இதில் இருக்கலாம். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 250 பைக்கை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், கடந்த ஆண்டு EICMA-வில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலை விட இது மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ட்ரீம் 250ஆர் போன்றே, கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 250 பைக்கிலும் எலெக்ட்ரானிக் த்ரோட்டில் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கை போலவே, இந்தியாவில் விற்பனையில் உள்ள ஸூம் 160 என்கிற அட்வென்ச்சர் ஸ்கூட்டரையும் புதிய தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் EICMA-இல் ஹீரோ காட்சிப்படுத்தி உள்ளது.

EICMA-இல் நிறுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஸூம் 160 ஸ்கூட்டரில் ஹலோஜன் டர்ன் இண்டிகேட்டர்களுக்குப் பதிலாக LED டர்ன் இண்டிகேட்டர்கள், பின் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் (இரட்டை சேனல் ABS இருக்கலாம்) மற்றும் எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் உள்ள அதே வண்ண LCD இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் திரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஹீரோ நிறுவனம் 125சிசி பட்ஜெட் ஸ்கூட்டர்களில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை வழங்கினாலும், ஸூம் 160 ஸ்கூட்டரில் அது இல்லை. ரைடு-பை-வயர் அமைப்பு, தற்போதைய ஸூம் 160-ன் நீண்ட த்ரோட்டில் இயக்கத்தை சரிசெய்யும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய ஸூம் 160 ஸ்கூட்டரில் உள்ள அதே ஸ்விட்ச்கியர் இதிலிலும் உள்ளது. ஸூம் 125 ஸ்கூட்டர் கூட இதைவிட பிரீமியம் ஸ்விட்ச்கியரைக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது 125சிசி ஸ்கூட்டர்களை விட ஸூம் 160 ஸ்கூட்டரில் குறைவான பிரீமியம் அம்சங்களை வழங்க விரும்புவது மீண்டும் ஒருமுறை உறுதியாகிறது. ஸ்கூட்டரின் விலையை குறைக்கவே இவ்வாறு ஹீரோ செய்வதாக கருதுகிறோம். மறுப்பக்கம், EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதால், கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 250 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications









