Acer Faster Awards 2026: சிறந்த காராக மஹிந்திரா எக்ஸ்இவி 9இ & சிறந்த பைக்காக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ்
இந்தியாவில் 2025ஆம் ஆண்டின் சிறந்த கார்கள், மோட்டார்சைக்கிள்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் பிரபலங்களை கௌரவிக்கும் விதமாக, ஃபாஸ்டர் (FASTER) தனது ஐந்தாவது 'ஏசர் ஃபாஸ்டர்' (Acer FASTER) விருதுகள் நிகழ்ச்சியை இந்த 2026இல் டெல்லிக்கு அருகே குர்கான் பகுதியில் நடத்தி முடித்துள்ளது. முதலில் ஃபாஸ்டர் என்றால் என்ன என்பதை பார்போம். மின்னணு முறையில் வாடிக்கயாளர்களை சென்றடையும் ஆட்டோமொபைல் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு என்பதன் சுருக்கமே FASTER ஆகும்.
ஏசர் இந்தியா இதன் பிரதானமான ஸ்பான்சர் (Sponser) ஆகும். ஸ்பார்க் மிண்டா லிமிடெட் (Spark Minda Limited) கூடுதல் ஸ்பான்சராக இணைந்து வழங்கிய இந்த விருது வழங்கும் விழாவில், ஆட்டோமொபைல் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் பிற பிரிவுகளில் 13 வெற்றியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இது ஐந்தாம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஃபாஸ்டரின் வாகன மதிப்பீடு ஆகும்.

FASTER நடுவர் குழுவில், இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் டிஜிட்டல் மீடியாக்களின் ஆசிரியர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, ஆறு மொழிகளில் மாதந்தோறும் 25 கோடிக்கும் அதிகமான வாசகர்களை சென்றடைகிறது. நமது டிரைவ்ஸ்பார்க் (Drivespark)-இன் புரோமீட் கோஷ், காடிவாடி (Gaadiwaadi)-இன் கௌரவ் யாதவ், பைலட் ஆன் வீல்ஸ் (PilotOnWheels)-இன் ரோஷன் ஜோசப், கார் பிளாக் இந்தியா (CarBlogIndia)-இன் ரோஹித் குரானா போன்றோர் நடுவர்களாவர்.
ஒவ்வொரு வாகனமும் கட்டாய நேரடி சோதனை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. அந்த சோதனை மற்றும் ஆய்வுகளின்படி, ஏசர் ஃபாஸ்டர் கார் ஆஃப் தி இயர் 2026 (Car of The Year 2026) விருதை மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (XEV 9e) தட்டிச் சென்றது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் (TVS Apache RTX), மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் விருதை வென்றுள்ளது.

இந்த இரு வாகனங்களும், மார்க்கெட்ஸ் & மார்க்கெட்ஸ் (Markets & Markets) மற்றும் ஸென் டெக்னாலஜிஸ் (Zen Technologies) ஆகிய ஆராய்ச்சி நிறுவனங்களால் சரிபார்க்கப்பட்ட பின்னர் நடுவர் குழுவின் நேரடி மதிப்பீட்டின் மூலம் அங்கீகாரம் பெற்றன. கார் பிரிவில், முதன்முறையாக பெட்ரோல்/டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) ஒரே தரத்தின் கீழ் மதிப்பிடப்பட்டன.
இது இந்திய எலெக்ட்ரிக் வாகனத் துறை எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. மஹிந்திராவின் இங்லோ (INGLO) பிளாட்ஃபார்மில் உருவான எக்ஸ்இவி9இ எலெக்ட்ரிக் கார், இந்தியாவின் முதல் உள்நாட்டு எலெக்ட்ரிக் கார் வடிவமைப்பு ஆகும். இது 656கிமீ ரேஞ்ச், 180 கிலோவாட்ஸ் DC ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சாஃப்ட்வேர் கட்டமைப்பு மற்றும் 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விலையுயர்ந்த மஹிந்திரா எலெக்ட்ரிக் காராக இருப்பினும், இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட யூனிட்கள் விநியோகிக்கப்பட்டு, இந்த விருதை வென்ற எலெக்ட்ரிக் கார் இது ஆகும். டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் உள்நாட்டு அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான அப்பாச்சி ஆர்டிஎக்ஸ், 299சிசி லிக்யு-கூல்டு DOHC என்ஜின், ரைடு-பை-வயர் டெக்னாலஜி, டிராக்ஷன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் மற்றும் 180மிமீ சஸ்பென்ஷன் வசதியுடன் ரூ.1.99 லட்சம் விலையில் வருகிறது.
விழாவில், டாடா சியரா (Tata Sierra) கார் 'டிசைன் ஆஃப் தி இயர்' விருதையும், உலகின் முதல் 77 GHz ரேடார் சிஸ்டம் கொண்ட அல்ட்ராவயலட் எக்ஸ்47 (Ultraviolette X47) 'எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆஃப் தி இயர்' விருதையும் பெற்றுள்ளன. பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) 'பிரீமியம் கார் ஆஃப் தி இயர்' விருதை பெற்றுள்ள நிலையில், இந்தியர்களின் இருபது வருட நம்பிக்கைக்காக ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர் 'டைம்லெஸ் ஐகான்' (Timeless Icon) விருதை தட்டிச் சென்றது.

விழாவின் மிகவும் நெகிழ்ச்சியான தருணம், ஜேகே டயர் (JK Tyre) நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட் மற்றும் தனியார் நிறுவனங்களுடனான தகவல்தொடர்பு பிரிவின் மறைந்த தலைவரான சஞ்சய் 'ஹார்டி' ஷர்மாவுக்கு வழங்கப்பட்ட 'பெருமைக்குரிய விருது' (Award of Honour) ஆகும். 2026 பிப்ரவரி 11 அன்று 61 வயதில் காலமான ஹார்டி, 1997இல் இந்தியாவின் தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப்பைத் தொடங்கி, நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், ஜெஹான் தாருவாலா போன்ற பலரின் வாழ்க்கையை வளர்த்த பெருமைக்குரியவர் ஆவார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபாஸ்டர் விருதுகள் குழுவில் அங்கமாக இருப்பது எங்களுக்கு மகிழ்சி அளிக்கிறது. பல கட்ட ஆய்வுகள், சரிப்பார்ப்புகள் மற்றும் மற்றவர்களுடனான ஆலோசனைகளுக்கு பின்பே தகுதியான வாகனங்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறோம். இது அவற்றை உருவாக்கிய நிறுவனங்களுக்கு அளிக்கும் அங்கீகாரம் ஆகும். இதன் மூலம் மக்கள் சிறந்த ஒன்றை தேர்வு செய்து வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications









