70 புதிய மாடல்கள் அறிமுகத்துடன் நிறைவடைந்த டெல்லி ஆட்டோ கண்காட்சி!
டெல்லி பிரகதி மைதானத்தில் 7 நாட்கள் நடந்த டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. வரும் 2014ம் ஆண்டு நடைபெற உள்ள அடுத்த கண்காட்சி வேறு ஒரு புதிய இடத்தில் நடத்த ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 1986ம் ஆண்டு முதல் டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல் டெல்லி பிரகதி மைதானத்தில் கடந்த 5ந் தேதி முதல் 7 நாட்கள் இந்த ஆண்டு கண்காட்சி நடைபெற்றது.
இதில், உலகெங்கிலும் இருந்து 24 நாடுகளை சேர்ந்த 1,500 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவி்ல் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார், பைக் உள்ளிட்ட 58 புதிய மாடல்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டன. தவிர, 12 எலக்ட்ரிக் மாடல்களும்,9 கான்செப்ட் மாடல்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த ஆண்டு கண்காட்சியில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் மொத்தம் 7 லட்சம் பேர் மட்டும் வருகை தந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். (கடந்த 2010ம் ஆட்டோ கண்காட்சியை 12 லட்சம் பேர் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.)
இந்த நிலையில், கண்காட்சியின் இறுதிநாளான நேற்றும் அதிக பார்வையாளர்கள் வருகை தந்தனர். இந்த நிலையில், லால் சவுக்கில் நடந்த கண்காட்சி நிறைவு விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கமல்நாத் கலந்துகொண்டார்.
எதிர்காலத்தில் சாலை கட்டமைப்பு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பங்கள் குறித்து நிறைவு விழாவில் பேசியவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், வரும் 2014ம் ஆண்டு நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ கண்காட்சியை வேறு ஒரு புதிய இடத்தில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக பார்வையாளர்கள் பார்வையிடும் வகையிலும், பாதுகாப்புக்கு ஏற்றதாகவும் புதிய இடத்தை தேர்வு செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications