கூடுதல் வசதிகளுடன் புதிய ரியோ மினி எஸ்யூவி: பிரிமியர் அறிமுகம்
ரூ.4.7 லட்சம் ஆரம்ப விலையில் ஏராளமான புதிய வசதிகளுடன் ரியோ மினி எஸ்யூவியை பிரிமியர் அறிமுகம் செய்துள்ளது.

பழம்பெரும் கார் நிறுவனமான பிரிமியர் நிறுவனம் ரியோ என்ற அம்சமான மினி எஸ்யூவியை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய வசதிகள் மற்றும் வடிவமைப்பில் மாற்றங்களுடன் புதிய ரியோ மாடலை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் புதிய ரியோ விற்பனைக்கு கிடைக்கும். இந்த மினி எஸ்யூவியில் 1173 சிசி(1.2 லிட்டர்) திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த எஞ்சின் 77 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும், லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, டீசல் எஞ்சின் இரண்டுவிதமான சிசி திறன்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஒன்று 1489 சிசி (1.5 லிட்டர்) திறன் கொண்ட டர்போ டீசல் எஞ்சினாக இருக்கிறது. இந்த எஞ்சின் 65 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். டீசல் மாடல் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மற்றொன்று, 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின். ஆனால், இந்த எஞ்சின் தற்போது சோதனை நிலையில் உள்ளது. விரைவி்ல் இந்த எஞ்சினுடன் ரியோ மினி எஸ்யூவி மார்க்கெட்டிற்கு வருகிறது.
ரியோ மினி எஸ்யூவியின் அனைத்து மாடல்களும் பவர் ஸ்டீயரிங், முன்பக்கம் பவர் விண்டோஸ், ஆட்டோமேட்டிக் ரியர் வியூ மிரர்கள், ரூப் ரெயில்ஸ், சென்ட்ரல் லாக்கிங், சிடி/எம்பி-3 ப்ளேயர்களுடன் கிடைக்கும்.
ஹைவேரியண்ட் ரியோ எஸ்யூவி ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம்(ஏபிஎஸ்), கீ லெஸ் என்ட்ரி, அலாய் வீல்களுடன் கிடைக்கும். இந்த மினி எஸ்யூவி அனைத்து சாலைகளிலும் அனாயசமாக செல்லும் வகையில் மிக கட்டுறுதியுடன் அதிக கிரவுண்டு கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ரியோவின் பின்பக்க இருக்கை மடக்கி விரிக்கும் வசதிகொண்டது. அனைத்து வசதிகளுடன் காம்பெக்ட்டாக இருக்கும் ரியோ மினி எஸ்யூவியின் பேஸ் மாடல் ரூ.4.7 லட்சம் முதல் ஹைவேரியண்ட் மாடல் ரூ.6.35 லட்சம் வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரிமியர் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








