டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிரைவ்ஸ்பார்க் குழுவினரை கவர்ந்த சிறந்த பைக்குகள்!
எதிர்பார்த்ததை போலவே பல புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டன. அதில், எங்கள் குழுவின் கவனத்தை ஈர்த்த சிறந்த பைக் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பெர்ஃபார்மென்ஸ் ரகம்
பெர்ஃபார்மென்ஸ் ரகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பைக் மாடல் டிஎஸ்கே பெனெல்லி 302 மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர் மாடல்கள். இந்த இரு பைக்குகளும் பார்வையாளர்களின் கவனத்தையும், எமது குழுவினரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
டிஎஸ்கே பெனெல்லி 302
மிக குறுகிய காலத்தில் பெனெல்லி நிறுவனத்தின் பொறியியல் திறன் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விற்பனையில் உள்ள பெனெல்லி டிஎன்டி 300 மாடலின் முழுவதும் ஃபேரிங் கொண்ட மாடல்தான் இந்த டொர்னேடோ 302.. இந்த பைக்கில் 35 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 300சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 0- 60 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளில் எட்டிவிடும். கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு எதிராளராக களமிறங்க உள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர்
டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் வெளிவர இருக்கும் முதல் பைக் மாடல். இந்த பைக்கின் வடிவமைப்புப் பணிகள் முழுவதையும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் மேற்கொண்ட நிலையில், இந்த பைக்கை உற்பத்தி செய்து தரும் பொறுப்பை தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு செல்ல இருக்கிறது இந்த புதிய பைக் மாடல். இந்த பைக்கில் இருக்கும் 313சிசி எஞ்சின் அதிகபட்சமாக 33.6 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த பைக்குடன் இந்திய மார்க்கெட்டை ஒரு கை பார்க்க பிஎம்டபிள்யூ தயாராகி வருகிறது.

பிரிமியம் ரகம்
ட்ரையம்ப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின்
பிரிமியம் ரகததில் இங்கிலாந்தை சேரந்த் ட்ரையம்ப் நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்த புதிய எஞ்சின்களுடன் புதிய தலைமுறை மோட்டார்சைக்கிள்களை காட்சிக்கு வைத்திருந்தது. அதில், போனிவில் ஸ்டரீட் ட்வின் மோட்டார்சைக்கிள் எமது குழுவினரின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. இந்த பைக்கில் இருக்கும் 900சிசி எஞ்சின் அதிகபட்சமாக 80 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. முந்தைய தலைமுறை மாடலைவிட இந்த எஞ்சின் 18 சதவீதம் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

ட்ரையம்ப் போனிவில் டி120
பழைய டிசைன் தாத்பரியங்களை பிரதிபலிக்கும் டிசைன் அம்சங்களுடன் கூடிய இந்த பைக் புதிய எஞ்சினுடன் களமிறக்கப்பட்டிருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 105 என்எம் டார்க்கை வெளிப்படுததும் திறன் கொண்டது. பல டிரைவிங் ஆப்ஷன்களை வழங்கும் வசதியும் உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வெப்பப்படுத்தும் க்ரில் கவர்கள் ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர, த்ரக்ஸ்டன் மற்றும் கஃபே ரேஸர் மாடல்களும் எம்மை கவர்ந்தது.

க்ரூஸர் ரகம்
யுஎம் ரெனிகேட் மோட்டார்சைக்கிள்கள்
க்ரூஸர் ரகத்தில் எமது குழுவினரின் கவனத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த பார்வையாளரகளையும் அமெரிக்காவின் யுஎம் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த மோட்டார்சைக்கிள்கள்தான். ரெனிகேட் பிராண்டில் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ், ரெனிகேட் கிளாசிக் மற்றும் ரெனிகேட் கமாண்டோ ஆகிய மூன்று மாடல்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த மூன்று மாடல்களுமே தோற்றத்தில் மட்டுமே வேறுபடுகின்றன. இந்த மோட்டார்சைக்கிள்களில் இருக்கும் 279சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 25 பிஎச்பி பவரையும், 21.8 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரூ.1.59 லட்சம் முதலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications
























































































































