ஹோண்டா ஆக்டிவா மார்க்கெட்டை காலி பண்ணுமா புதிய ஹீரோ ஸ்கூட்டர்? எந்த மாதிரியான ஆட்களுக்கு ஏற்றது?
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் அதன் புதிய டெஸ்டினி 125 (Destini 125) ஸ்கூட்டரை பற்றிய விபரங்களை சமீபத்தில் வெளியீடு செய்தது. இதனை தொடர்ந்து விரைவில் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் சவுகரியம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ப தோற்றத்திலும், தொழிற்நுட்ப வசதிகளிலும் மற்றும் ரைடிங் சவுகரியத்திலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நிறைய அப்டேட்களை கொண்டுவந்துள்ளது. அவற்றை எல்லாம் அறிய, 2024 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரை நாங்கள் கோவாவில் நகரத்தின் பரபரப்பான சாலைகளில் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை ரிவியூவாக இங்கே வழங்கியுள்ளோம்.
தோற்றம் & வசதிகள்: புதிய டெஸ்டினி ஸ்கூட்டர் மாடர்னான டிசைனை பெற்றுள்ளது. இதற்கேற்ப ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்இடி தரத்திலான இந்த விளக்குகள் ஸ்கூட்டருக்கு புத்துணர்ச்சியான தோற்றத்தை வழங்குவது மட்டுமின்றி, ஒளி பிரகாசத்தையும் அதிகரித்துள்ளன. ஸ்கூட்டரை சுற்றிலும் முன்பக்க ஃபெண்டர், சைடு பேனல்கள் மற்றும் மஃப்லர் கவர் உள்ளிட்ட பகுதிகளில் பளபளப்பான க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஸ்கூட்டரை காஸ்ட்லீ லுக்கில் தோற்றமளிக்க செய்துள்ளது. எங்களிடம் டெஸ்ட் டிரைவ்க்கு வழங்கப்பட்டது 2024 டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் இசட்.எக்ஸ்+ வேரியண்ட் ஆகும். அதில், அலுமினியம்-ஃபினிஷிங்கில் க்ரோம் வழங்கப்பட்டு இருந்தது. ஸ்கூட்டர் முழுவதுமாக உலோகத்தில் ஆனதாக உள்ளது. இதனால், நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும் தன்மையை ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்.
ஸ்கூட்டரை மேலும் காஸ்ட்லீயானதாக தோற்றமளிக்க செய்வதற்காக, க்ரோம் பார் எண்ட்ஸ், டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் மற்றும் H-வடிவ எல்இடி டெயில்லேம்ப் உள்ளிட்டவை 2024 டெஸ்டினி ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. பயணிகள் நன்கு சவுகரியமாக அமர்ந்து பயணிப்பதற்காக நீளமான இருக்கையும், பின் இருக்கை பயணிக்கு சவுகரியத்திற்காக பேக் ரெஸ்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்நுட்ப வசதிகளை பொறுத்தவரையில், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உடன் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஆட்டோ-கேன்சல் இன்டிகேட்டர்ஸ், இருக்கைக்கு வெளியே பெட்ரோல் நிரப்பும் பகுதி மற்றும் யுஎஸ்பி மொபைல் போன் சார்ஜர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றினால் ஸ்கூட்டரில் உங்களுடைய தினசரி பயணம் எளிதாக இருக்கும். மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
என்ஜின் & அப்டேட்ஸ்: 2024 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான 124.6சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 9 எச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 4 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

2024 டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் மென்மையான பெர்ஃபார்மன்ஸுக்காகவும், மேம்பட்ட மைலேஜுக்காகவும் சிவிடி கியர்பாக்ஸை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சிறப்பாக ட்யூன் செய்துள்ளது. ICAT சோதனையின்படி, 2024 டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் மைலேஜ் லிட்டருக்கு 59கிமீ ஆகும். 2024 டெஸ்டினி ஸ்கூட்டரில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 57மிமீ அதிகரிக்கப்பட்டு உள்ளது.
முன்பை போல், 12 இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாலும், சக்கர ரிம்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. பின் சக்கரத்தில் மட்டும் அகலமான டயர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும், போதுமான ரேக் ஆங்கிள் மற்றும் பின் சக்கரத்தில் சற்று உயரமாக வழங்கப்பட்டுள்ள ஸ்விங்கார்ம் பிவட்டினால் ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டருக்கே உண்டான செயல்படுதிறனில் எந்த மாற்றமும் இல்லை.

இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளிலும் கொண்டு செல்வதற்கு ஏற்ற 2-வீலராக 2024 டெஸ்டினியை சொல்லலாம். ஸ்கூட்டரில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. 2024 டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் இசட்.எக்ஸ் மற்றும் இசட்.எக்ஸ்+ வேரியண்ட்களில் முன் சக்கரத்தில் 190மிமீ டிஸ்க் பிரேக்கையும், வி.எக்ஸ் வேரியண்ட்டில் 130மிமீ டிரம் பிரேக்கையும் பெறலாம்.
ஆனால், அனைத்து வேரியண்ட்களிலும் கம்பைண்டு பிரேக் சிஸ்டம் மற்றும் சைடு-ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கும். இந்த ஸ்கூட்டரில் ஹீரோவின் ஐ3எஸ் டெக்னாலஜி (ஐடியல் ஸ்டாப்- ஸ்டார்ட்) இருப்பதால் மைலேஜை பற்றிய கவலை வேண்டாம். அதுமட்டுமின்றி, ஸ்கூட்டர் கவிழ நேர்ந்தால், தவறுதலாக ஆக்ஸலரேஷன் கொடுக்கப்படுவது தடுக்கப்படும் வகையில் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரைடிங் இம்பிரஷன்: 2024 டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் சவுகரியமான பயணத்தை பெறும் வகையில் ஹீரோ நிறுவனம் பார்த்து, பார்த்து உருவாக்கியுள்ளது. மென்மையான சஸ்பென்ஷன் சாலையில் உள்ள மேடு, பள்ளங்களை எளிதாக கையாள்கிறது. இருக்கை ஆனது ரைடர் மற்றும் பின் இருக்கையில் அமர்பவர் என இருவருக்கும் சவுகரியமாக உள்ளது.
நிமிர்ந்தப்படி ஸ்கூட்டரை ஓட்டி வேண்டியுள்ளதால், ரிலாக்ஸாகவும் ஸ்கூட்டரை ஓட்ட முடிகிறது. ஆனால், ஸ்கூட்டரின் பிரேக் சிஸ்டம் இன்னும் கொஞ்சம் அதிக ரெஸ்பான்ஸை வழங்கக்கூடியதாக இருந்தால் நன்றாக இருக்கும். முன்பக்க டிஸ்க் பிரேக் ஷார்ப்பாக பிரேக் பிடிக்கவில்லை. அதேபோல், பின் டிரம் பிரேக்கும் இன்னும் கொஞ்சம் அதிக பிடிமானத்தை வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

என்ஜின் மிகவும் மென்மையாக செயல்படுகிறது. இதனால், வேகமான பயணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு என்ஜின் பவர் போதுமானதாக இல்லாதது போன்று ஒரு உணர்வு ஏற்படலாம். இருப்பினும், அதிர்வுகள் இல்லாத மென்மையான பயணம் மற்றும் சிறந்த எரிபொருள் திறனினால், 2024 டெஸ்டினி 125 ஸ்கூட்டர் ஆனது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற ஸ்கூட்டராகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய 2024 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் ஆனது ஸ்டைலான தோற்றம், சவுகரியம் மற்றும் செயல்முறைக்கு ஏற்ற தன்மை என மூன்றிலும் சிறப்பானதாக உள்ளது. மாடர்ன் டிசைனில், தேவையான வசதிகள் உடன் ரைடருக்கு தேவையான மேம்பாடுகளை கொண்டதாக 2024 டெஸ்டினி 125 விளங்குகிறது. ஏற்கனவே கூறியதுபோல், நகர்புறத்தில் ஓட்டுவதற்கு புதிய டெஸ்டினி ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும்.

ஆனால், அதேநேரம் அதிகப்படியான பெர்ஃபார்மன்ஸை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்காது என்பதை கூறிக் கொள்கிறோம். மென்மையான சவுகரியமான பயணம் மற்றும் சிறந்த மைலேஜ் உள்ளிட்டவை தான் 2024 டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் அடையாளங்களாக விளங்குகின்றன. ஆதலால், வயதானவர்களும் ஓட்டுவதற்கு ஏற்ற ஸ்கூட்டராக 2024 ஹீரோ டெஸ்டினி 125 -ஐ சொல்லலாம்.


Click it and Unblock the Notifications









