பள்ளம், மேடு எல்லாத்தையும் ஈசியா சமாளிக்கும் பஜாஜ் சேத்தக்! ஓட்டி பார்த்ததில் ஸ்கூட்டரை விட்டு இறங்க மனசே வரல!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம், சேத்தக் சி25 (Chetak C25) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் கவனம் செலுத்துகிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட உன்னதமான வடிவமைப்பு மற்றும் நடைமுறை அம்சங்களை இது வழங்குகிறது. இத்தகைய பஜாஜின் புதிய தயாரிப்பை சமீபத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் குழு ஓட்டிப் பார்த்தது. அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை ரிவியூவாக இங்கே வழங்கியுள்ளோம்.
Chetak C25 விமர்சனம் – தோற்ற வடிவமைப்பு
சேத்தக் சி25, அதன் பாரம்பரிய வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பெரும்பாலான கோணங்களில், அதன் முந்தைய வெர்சன்களைப் போலவே இருக்கிறது. சேத்தக் 35 மற்றும் 30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் காணப்படும் வட்ட வடிவ ஹெட்லைட்டைச் சுற்றி ஒரு ஹாலோ LED பகல்நேர ரன்னிங் விளக்கு (DRL) இதில் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பிரபலமான சேத்தக் லோகோ முக்கியமாகத் தெரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முழு உலோகத்தால் ஆனது, இது வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை வழங்குகிறது. முன்புறத்தில், சேத்தக் சி25 ஆனது 180 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 95 மிமீ டிராவல் உடன் கூடிய டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. ஸ்கூட்டரின் பின்புறத்திலும் டிஸ்க் பிரேக் மற்றும் சஸ்பென்ஷனுக்கு டபுள் ஷாக்-அப்சார்பர்ஸ் உள்ளது.
ஸ்கூட்டரின் பின்புறத்தில் ஹப்-மவுண்டட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. டெயில் லேம்ப் வடிவமைப்பில் 'பனிக்கட்டி' ஆப்டிக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது, இது பின்புறத்தில் இருந்து நல்ல பிரகாசமான ஒளியை உறுதி செய்கிறது. 12-இன்ச் அலாய் சக்கரங்களுடன் உள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கவாட்டுப் பகுதி நேர்த்தியாகவும், ஒருங்கிணைந்த கால் பெக்குகள் மற்றும் தெரு கலை சார்ந்த கிராபிக்ஸ் அம்சங்களையும் கொண்டுள்ளது.

பயண சவுகரியத்தை பொறுத்தவரையில், பஜாஜ் சேத்தக் சி25 ஒரு வசதியான ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது. இதற்காக, அகலமான இருக்கைகள் மற்றும் போதுமான லெக்ரூம் இருப்பதால், பல்வேறு உயரங்களில் உள்ள ஓட்டுநர்களுக்கும் ஏற்றதாக சேத்தக் சி25 உள்ளது. தட்டையான ஹேண்டில்பார் வடிவமைப்பு, குறிப்பாக நகர்புறப் போக்குவரத்தில் ஓட்டுவதற்கு வசதியாகவும், கண்ட்ரோல் உடனும் இருக்கிறது.
முன்புறத்தில் இரண்டு கப் ஹோல்டர்கள் உள்ளன. இருக்கையின் கீழ் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி உள்ளது. அதில், பின்புற ஸ்பாய்லர் இல்லாத ஒரு முழு முக ஹெல்மெட்டை வைக்க முடியும். இவற்றுடன் சேத்தக் சி25, டெக் பேக் (Tech Pack) உடன் கிடைக்கிறது. இது ஸ்போர்ட் ரைடிங் மோட் (Riding Mode)-ஐ வழங்குகிறது; இது அதிக வேகத்தில் செல்ல உதவுகிறது.

டெக் பேக் இல்லாமல், ஸ்கூட்டர் அதன் அதிகபட்ச வேகத்தை மெதுவாகவே அடையும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், சாய்வான சாலைகளில் பின்னோக்கிச் செல்லாமல் இருக்க உதவும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் (Hill Hold Assist) மற்றும் பார்க்கிங் செய்த பிறகும் ஹெட்லைட் வெளிச்சத்திற்காக 'ஃபாலோ மீ ஹோம்' (Follow me home) போன்ற பல பிரீமியம் அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
Chetak C25 விமர்சனம் – பரிமாண அளவுகள் & எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப்
பஜாஜ் சேத்தக் சி25 ஆனது 107 கிலோ எடை கொண்டதாக உள்ளது, இது நகர்ப்புறத்தில் பயணிப்பதற்கு இலகுவானது. இதன் சிறிய அளவிலான தோற்றம், நெரிசலான நகர வீதிகளில் எளிதாக செல்ல உதவுகிறது. இந்த வடிவமைப்பு, ஸ்கூட்டரை ஹேண்ட்லிங் செய்வதை எளிதாக்குகிறது. சேத்தக் சி25 ஆனது 2.25 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இது சிறந்த எடை பகிர்வுக்காக ஸ்கூட்டருக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 113 கிமீ வரை செல்லலாம் என்று கூறுகிறது. நடைமுறைச் சூழ்நிலையில், பயனர்கள் சுமார் 90 முதல் 95 கிமீ தூரம் வரை ரேஞ்சை எதிர்பார்க்கலாம்.
ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 55 கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது, புதிய சேத்தக் சி25 ஆனது நடுத்தர வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவை சேர்ந்தது என்பதை குறிக்கிறது. இதன் பேட்டரியை வீட்டிலேயே 2 மணி நேரம் 25 நிமிடங்களில் 0-80% சார்ஜ் செய்ய முடியும். இது, சிறிய இடைவேளைகளில் விரைவாக சார்ஜ் செய்ய உதவுகிறது.

சேத்தக் சி25 ஐந்து முதல் ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. இது மூன்று ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வரையிலான நிலையான உத்தரவாதத்துடன் வருகிறது, இதில் எது முதலில் வருகிறதோ அது கணக்கில் கொள்ளப்படும். கூடுதலாக ரூ.6,000 செலுத்துவதன் மூலம், இந்த உத்தரவாதத்தை ஐந்து வருடங்களாக நீட்டிக்க முடியும்.
Chetak C25 விமர்சனம் – ரைடிங் அனுபவம் – நகர்ப்புறத்தில் சிறப்பாக இயங்கும் தன்மை
நகர்ப்புறத்தில் சேத்தக் சி25 ஐ ஓட்டுவது, அதன் பலத்தை வெளிப்படுத்துகிறது. இதன் இலகுவான கட்டுமானம் மற்றும் சிறிய பரிமாணம், போக்குவரத்து நெரிசலில் எளிதாகச் செல்ல அனுமதிக்கிறது. தட்டையான ஹேண்டில்பார் மற்றும் வசதியான இருக்கை பொசிஷன் உள்ளிட்டவை ஓட்டுவதற்கு ஏற்ற தோரணையை அளிக்கின்றன.

நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் இந்த ஸ்கூட்டரின் செயல்பாடு, சற்று அதிக சக்தி கொண்ட மற்ற அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே உள்ளது. இருப்பினும், மணிக்கு 55 கிமீ வேகத்தில் செல்வதால், அதிவேக நெடுஞ்சாலை பயணங்களுக்கு இது ஏற்றதல்ல. அதிவேக பயணத்தை எதிர்பார்பவர்களுக்கு இது சற்று ஏமாற்றமாக அமையலாம்.
விரைவான சார்ஜிங் வசதி இந்த ஸ்கூட்டரின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட். இந்த அம்சம், அன்றாடப் பயணிகள், கல்லூரி மாணவர்கள் அல்லது உணவு விநியோக ஊழியர்களுக்கு ஏற்றது, அவர்கள் தங்கள் ஸ்கூட்டரை உணவு இடைவேளையின்போது சார்ஜ் செய்யலாம். இது விரைவான சார்ஜிங், தேவையற்ற நேரத்தை குறைத்து, அன்றாட நடைமுறைத்தன்மையை அதிகரிக்கிறது.

ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் அவசர கால விளக்கு போன்ற அம்சங்கள் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. அவசர கால விளக்கு, திடீரென பிரேக் போடும்போது டெயில் லைட்டை ஒளிரச் செய்து, பின்னால் வரும் வாகனங்களை எச்சரிக்கிறது. இந்த அம்சங்கள், ஸ்கூட்டரை ஓட்டும்போது கூடுதல் தைரியத்தையும், பாதுகாப்பையும் சேர்க்கின்றன.
Chetak C25 விமர்சனம் – டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு & இறுதி எண்ணங்கள்
பஜாஜ் சேத்தக் சி25, நகர்ப்புறத்தில் சிறப்பாக இயங்கும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உள்ளது. இது தினசரி பயணங்களுக்கு சுறுசுறுப்பான, வசதியான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற ரேஞ்சை வழங்குகிறது. இதன் கட்டமைப்பு தரம், முழு உலோக உடல் மற்றும் விரைவான சார்ஜிங் வசதி ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாகும்.

நகர்ப்புற பயன்பாட்டிற்கு நம்பகமான, குறைந்த வேகத்தில் செல்லும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்புவோருக்கு புதிய சேத்தக் சி25 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக, விரைவான சார்ஜிங் மற்றும் நம்பகமான கட்டமைப்பு தரத்தை எதிர்பார்ப்போர்க்கு இது சரியான சாய்ஸ் ஆகும். இருப்பினும், அதிக வேகம் அல்லது நீண்ட தூரம் அடிக்கடி பயணிக்க விரும்புபவர்கள், இது இல்லாமல் வேறு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









