பாலுக்கு அடம்பிடிக்கும் குழந்தைபோல இந்த பைக் வேணும்னு அடம் பிடிக்க போறாங்க.. பல்சர் என்எஸ்400இசட் ரைடு ரிவியூ!
பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar), இந்த பைக்கை வெறுப்பவர்களைக் காண்பது மிகவும் அரிதானது. குறைவான விலையில் ஸ்போர்ட்ஸ் வகை பைக்கை வாங்கிக் கொள்ள முடியும் என்றால், அது பஜாஜ் பல்சராலேயே பலருக்கு சாத்தியமாக இருக்கின்றது. 2021 ஆம் ஆண்டிலிருந்து இந்த பைக் இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றது.
கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆகியும் இந்த பைக் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய எஞ்சின் கொண்ட பல்சர், அதாவது, அதிக சிசி திறன் கொண்ட பல்சர் பைக் மாடலை பஜாஜ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

பல்சர் என்எஸ்400இசட் (Bajaj Pulsar NS400Z) மாடல்தான் அது. இந்த பைக்கையே சமீபத்தில் ரைடு ரிவியூ (Ride Review) செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அப்போது பைக்குறித்து கிடைத்த அனுபவங்களையே இந்த பதிவில் விரிவாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாங்க அதிக சிசி திறன் கொண்ட புதிய பல்சர் பைக் பற்றிய தகவலை இங்கே காணலாம்.
பல்சர் என்எஸ்400இசட்-இன் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் விபரம்: பல்சர் என்எஸ், இந்த பெயரில் கிடைக்கும் பல்சர் பைக்குகள் அனைத்தும் ஸ்ட்ரீஃபைட்டர் தோற்றம் கொண்டவையாக இருக்கின்றன. இதேபோல், புதிய என்எஸ்400இசட் மாடலும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் தோற்றத்தையேக் கொண்டுள்ளது. குறிப்பாக, என்எஸ்200 மாடலின் டிசைன் தாத்பரியங்கள், சிறப்பம்சங்கள் பலவற்றை இந்த பைக் மாடல் பெற்றிருக்கின்றது.

அதேவேளையில், கூடுதல் கட்டுமஸ்தான தோற்றத்தை புதிய என்எஸ்400இசட் பெற்றிருக்கின்றது. இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்த என்எஸ் 200 மாடலைப் போன்றே என்எஸ் 400 இசட் மாடல் இருக்கின்றது. இந்த தோற்றமே என்எஸ் 400 இசட் அதிக பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பதையும் வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.
இந்த தோற்றத்திற்கு இன்னும் அதிகம் பலம் சேர்க்கும் விதமாக எல்இடி டிஆர்எல்கள், புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், சேம்பைன் நிற யுஎஸ்டி ஃபோர்க் (முன் பக்கத்தில்), பெரிய ஃப்யூவல் டேங்க், ஸ்பிளிட் வகை இருக்கை, ஸ்பிளிட் வகை டெயில் லைட், அடிப்பகுதியில் எக்சாஸ்ட் உள்ளிட்டவை பல்சர் என்எஸ்400இசட் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பஜாஜ் பல்சர் என்எஸ்400இசட் மாடலில் ரைடு-பை-ஒயர் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த அம்சத்தைக் கொண்டிருக்கும் முதல் பல்சர் பைக் மாடல் இதுவே ஆகும். இத்துடன், பன்முக ரைடிங் மோட்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ப்ளூடூத் இணைப்பு மற்றும் திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதிக் கொண்ட எல்சிடி திரை ஆகியவை இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த திரையையும் வேறு எந்த பல்சர் பைக் மாடலிலும் பார்க்க முடியவில்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.
பல்சர் என்எஸ்400இசட் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் எஞ்சின் பற்றிய விபரங்கள்: கேடிஎம் பைக்குகளில் பயன்படுத்தப்படும் 373.3 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே இந்த பைக் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் லிக்யூடு கூல்டு எஞ்சின் ஆகும்.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 39.45 பிஎச்பி பவரை 8,800 ஆர்பிஎம்மிலும், 35 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸே இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கியர்பாக்ஸ் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரோடு, மழை, ஸ்போர்ட் மற்றும் ஆஃப்-ரோடு என்கிற நான்கு விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ரைடிங் அனுபவத்தை வழங்கக் கூடியவை ஆகும். டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவை பைக் இயக்கத்தைப் பாதுகாப்பானதாகவும், சுவாரஷ்யமானதாகவும் மாற்ற உதவும். இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஃப்ரேம் என்எஸ்200 மாடலிடம் இருந்து பெறப்பட்டது ஆகும். அதேவேளையில், இதில் பொருத்தப்பட்டு இருக்கும் அதிக பவர்ஃபுல்லான எஞ்சினின் திறனை தாங்கிக் கொள்ள ஏதுவாக இந்த ஃப்ரேமிற்கு இன்னும் கூடுதல் பலம் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக ஏற்கனவே கூறியதைப் போல என்எஸ்400இசட் மாடலின் முன் பக்கத்தில் 43 அங்குல யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ப்ரீ-லோடு அட்ஜெஸ்டபிள் வசதிக் கொண்ட மோனோஷாக் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்தியாவின் கரடு-முரடான பாதைக்கு ஏற்ற சஸ்பென்ஷன் இதுவாகும்.

இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு 320 மிமீ டிஸ்க் பிரேக் முன் பக்க வீலிலும், கிரைமெகா காலிபர்களைக் கொண்ட 230 மிமீ டிஸ்க் பிரேக் பின் வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. 17 அங்குல வீல்களே இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. முன் பக்கத்தில் 110/70 அளவுள்ள டயரும், பின் பக்கத்தில் 140/70 அளவுள்ள டயரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
பல்சர் என்எஸ்400இசட் ஓட்டுவதற்கு எப்படி இருக்கின்றது? இந்த பைக்கின் முன் பக்க தோற்றம் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. மற்ற என்எஸ் மாடல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் ஸ்டைலானதாக என்எஸ்400இசட் இருக்கின்றது. அதவேளையில், சற்று பருமனானதாகவும் காட்சியளிக்கின்றது. எனவே எளிதில் இரண்டு சக்கர வாகன காதலர்களின் மனதை இது கவரக் கூடியதாக இருக்கின்றது.

எஞ்சினின் உச்சபட்ச திறன் உங்களை மீண்டும் மீண்டும் அதை தொட தூண்டும் வகையில் இருக்கின்றது. 8,800 ஆர்பிஎம்மில் மிக துடிப்பான ரைடு அனுபவம் கிடைக்கும். மேலும், உச்சபட்சமான 9,500 ஆர்பிஎம்மில் புதிய அனுபவத்தை, மற்ற எந்தவொரு பல்சர் பைக்கிலும் பெற்றிராத அனுபவத்தை இதில் பெறுவீர்கள்.
குறிப்பாக, இதில் வழங்கப்பட்டு இருக்கும் ரைடு-பை-ஒயர் அம்சத்தை இயக்கும்போது அதன் வினைத்திறன் மிகப் பெரிய அளவில் மேம்படுகின்றது. அதிலும், ஸ்போர்ட்ஸ் மோட் மிக சிறப்பாக என்ஜாய் செய்ய இந்த அம்சம் பெரும் உதவியாக இருக்கின்றது. இதன் திறன் வெளியேற்றம் மிக சிறப்பானதாக உள்ளது.

அதேவேளையில், அதிர்வுகளும் கூடவே வந்து ஒட்டிக் கொள்கின்றன. மூன்றாம் கியரில் 3,000 மற்றும் 4,000 ஆர்பிஎம் வெளியேற்றும்போது அதிகபட்ச வைப்ரேஷனை உணர முடிகின்றது. இதுதவிர இந்த பைக்கில் அதிக சூடாகும் பிரச்னையும் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். இதன் சஸ்பென்ஷனும் மிக சிறப்பாக உள்ளது.
இந்தியாவின் கரடு-முரடான சாலைக்கு ஏற்றதே அது ஆகும். மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும்போதும் மிக சிறப்பாக வளைந்து, நெளிந்த ஏதுவாக இந்த பைக் உள்ளது. எம்ஆர்எஃப் ரெவ்-எஸ் டயரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த டயர் மிக சிறப்பான பங்களிப்பை இயக்கத்தின்போது வழங்குகின்றது.

சாலை வழுக்குவிடுமோ என நினைக்கக் கூடிய சாலையில்கூட மிக சிறந்த இயக்க அனுபவத்தை இந்த டயர்கள் வழங்குகின்றன. இதேபோல், பிரேக்குகளும் மிக சிறப்பான நிறுத்தத்தை வழங்குகின்றன. உச்சபட்ச வேகத்திலும் மிக சிறந்த வேக குறைப்பை அது வழங்குகின்றது. இந்த பைக்கை டிரைவ் செய்து பார்த்ததில் லாங்-டிரைவிற்கு ஏற்ற பைக் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல்சர் பைக்குகளுக்கு கணிசமான அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே பெரிய எஞ்சின் கொண்ட புதிய பல்சர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இந்த பைக் அதிக திறன் வெளியேற்றத்தை விரும்புவோர்களுக்கு மிக சிறந்த விருந்தாகும்.


Click it and Unblock the Notifications









