ரூ.4.5 லட்சம் கொடுத்து வாங்கும் அளவிற்கு வொர்த்தா? பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் என சொன்னால் நம்ப முடிகிறதா?

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் உலகளவில் விலையுயர்ந்த 2-வீலர்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது. சமீப காலமாக எலக்ட்ரிக் 2-வீலர்களில் கவனம் செலுத்திவரும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 'சிஇ 02' என்கிற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு விற்பனை செய்வது மட்டுமின்றி, புதிய சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக லாஸ்ட்-மைல் டெலிவிரி வணிகத்திலும் கவனம் செலுத்த பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் திட்டமிட்டுள்ளது.

இத்தகைய விலையுயர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டிப் பார்க்க நமது டிரைவ்ஸ்பார்க் குழு தலைநகர் டெல்லிக்கு அழைக்கப்பட்டோம். அங்கு, புதிய பிஎம்டபிள்யூ சிஇ 02 ஸ்கூட்டரை ஓட்டி சோதனை செய்து பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை விரிவான ரிவியூவாக இங்கே வழங்கியுள்ளோம். அதனை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

bmw ce 02 scooter review

டிசைன் & வசதிகள்: இந்தியாவில் ஏற்கனவே பிஎம்டபிள்யூ சிஇ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. அதன் சிறிய ரக வெர்சனாக புதிய சிஇ 02 களமிறக்கப்பட்டுள்ளது. ஆனால், சிஇ 04 உள்பட எந்தவொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு புதுமையான தோற்றத்தில் புதிய சிஇ 02 உள்ளதை இந்த இடத்தில் நாங்கள் கூறியே ஆக வேண்டும்.

ஒருபக்கம் பார்த்தால் அட்வான்ஸான அட்வென்ச்சர் பைக்கை போன்றும், மறுபக்கம் பார்த்தால் பழமையான மங்கி பைக்கை போன்றும், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் விசித்திரமான தயாரிப்பாக சிஇ 02 விளங்குகிறது. தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டாரின் தொழிற்சாலையில் தான் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

bmw ce 02 scooter review

தோற்றத்தை பொறுத்தவரையில், படங்களிலும் வீடியோக்களில் நீங்கள் காண்பதை விட சிஇ 02 ஸ்கூட்டர் அளவில் பெரியதாகும். ரூ.4.5 லட்சத்தில் ஸ்கூட்டர் என்றால் சாதாரணமாகவா இருக்கும்! ஸ்கூட்டருக்கு முன்பக்கத்தில் செவ்வக வடிவில் எல்இடி ஹெட்லைட், இதற்கு மேலே இருக்கிறதா அல்லது இல்லையா என தெரியாத அளவிற்கு ஒரு விண்ட்ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் சக்கரங்கள் சிறியதுபோல் தெரியலாம்; ஆனால், அவை 14-இன்ச் ஆகும்.

இடைவெளியே இல்லாமல் முழுவதுமாக கவர் செய்யப்பட்டதாக இந்த சக்கரங்கள் உள்ளன. முன் சக்கரத்திற்கு மேல் சஸ்பென்ஷனுக்கு தங்க நிறத்தில் தலைக்கீழான ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. சிஇ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போல், புதிய சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் தாழ்வானதாக உள்ளது. தரையில் இருந்து இந்த ஸ்கூட்டரில் ரைடர் இருக்கை ஆனது வெறும் 745மிமீ உயரத்தில் உள்ளது. ஹைலைன் பேக்கேஜ் பேடிங்கை பொருத்திக் கொண்டால் கூடுதலாக 20மிமீ உயரம் அதிகமாக கிடைக்கும்.

bmw ce 02 scooter review

இருக்கை தட்டையானதாக உள்ளது. இது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் இதில் இடம்பெற்றுள்ள பெட்ரோல் டேங்க் ஆனது போலியானது ஆகும். பின்னால் அமர்பவர்கள், ஸ்கூட்டரின் பின் சக்கரத்தின் மீது அமர போவதில்லை. ஏனெனில், பின் சக்கரம் ஆனது ஸ்கூட்டரில் இருந்து நன்கு நீண்டுள்ளது. பின் இருக்கையில் அமர்பவர்கள் பிடித்துக்கொள்ள கிராப் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளதை காணலாம்.

ரைடர் அமரும் பகுதிக்கு சரியாக கீழே தான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. பின் இருக்கையில் அமர்பவருக்கு கீழ் பின்பக்க சஸ்பென்ஷனுக்கான மோனோஷாக் செட்-அப் உள்ளது. பின் சக்கரத்திற்கான மட்கார்டில் சிவப்பு நிற எல்இடி லைட் வழங்கப்பட்டுள்ளது. அப்படியே ஸ்கூட்டருக்கு முன்னால் சென்றால், ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள 3.5-இன்ச் மைக்ரோ-டிஎஃப்டி டிஸ்பிளே மூலமாக ஸ்கூட்டரின் வேகம், சார்ஜ் அளவு உள்ளிட்ட விபரங்களை அறியலாம்.

bmw ce 02 scooter review

மேலும், ஸ்கூட்டர் தற்சமயம் எந்த மோடில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் இந்த டிஸ்பிளே மூலமாக அறியலாம். ரைட் மோட்-ஐ மாற்றிக் கொள்ள ஹேண்டில்பாரின் வலதுப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள ஸ்விட்ச்கியரை பயன்படுத்த வேண்டும். 3.5-இன்ச் மைக்ரோ டிஎஃப்டி டிஸ்பிளேவை ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட்போன் உடன் இணைத்துக் கொள்ள முடியும்.

மெக்கானிக்கல் பாகங்கள் & பரிமாண அளவுகள்: புதிய பிஎம்டபிள்யூ சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் நீளம் 1,970மிமீ, அகலம் 876மிமீ மற்றும் உயரம் 1,140மிமீ (விண்ட்ஸ்க்ரீன் உடன் சேர்த்து) ஆகும். முன் மற்றும் பின் சக்கரத்திற்கு இடையேயான தூரம் 1,350மிமீ மற்றும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை 132 கிலோ ஆகும்.

bmw ce 02 scooter review

இரும்பிலான டபுள்-லூப் ஃப்ரேமில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 117மிமீ வீல் டிராவல் உடன் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 56மிமீ வீல் டிராவல் உடன் மோனோஷாக் மற்றும் சிங்கிள்-சைடு கேஸ்ட் அலுமினியம் ஸ்விங்கார்மும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிற்கு முன் சக்கரத்தில் 2-பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிபர்கள் உடன் 239மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் 220மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன.

இவை இல்லாமல், பயணிகளின் பாதுகாப்புக்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.92kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 90கிமீ-க்கு பயணிக்கலாம் என பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் தெரிவிக்கிறது. இதனை சோதித்து பார்த்து ஆராய ஸ்கூட்டருடன் எங்களுக்கு போதிய நேரம் கிடைக்கப் பெறவில்லை.

bmw ce 02 scooter review

ஸ்கூட்டரின் மத்தியில் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இயக்க ஆற்றலை வழங்க ஏர்-கூல்டு லித்தியம்-இரும்பு பேட்டரி பேக் கொடுக்கப்படுகிறது. எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 5,000 ஆர்பிஎம்-இல் 14.75 பிஎச்பி மற்றும் வெறும் 1,000 ஆர்பிஎம்-இல் 55 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

0-இல் இருந்து 50kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 95கிமீ ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், ஃப்ளோ, சர்ஃப் மற்றும் ஃப்ளஷ் என 3 விதமான ரைடிங் மோட்களை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெறலாம். ஸ்கூட்டருடன் ஹைலைன் பேக்கேஜை வாங்கினால் மட்டுமே இதில் ஃப்ளஷ் ரைடிங் மோடை பெற முடியும்.

bmw ce 02 scooter review

மொபைல் போனை போன்று, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பவர்-சேவிங் மோட் உள்ளது. சார்ஜ் குறைவாக இருக்கும் நேரத்தில் உபயோகப்பட கூடிய இது, மோட்டாரில் இருந்து வெளிவரும் பவர் அவுட்-புட்டை கட்டுப்படுத்தி ஸ்கூட்டரை மிதமான வேகத்தில் நீண்ட தொலைவிற்கு இயங்க வைக்கும். புதிய சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் 0.9 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜரை வழங்க பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலமாக வெறும் 2 மணிநேரம் 48 நிமிடங்களில் பேட்டரியின் சார்ஜை 20%-இல் இருந்து 80% நிரப்பி விடலாமாம். அதுவே, 0-இல் இருந்து 100% சார்ஜ் நிரப்ப 5 மணிநேரங்கள் 12 நிமிடங்கள் தேவைப்படுமாம். கூடுதல் தொகையை செலுத்தி ஹைலைன் பேக்கேஜை வாங்கினால் 1.5 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் கிடைக்கும். இதில் 20%- 80% சார்ஜை 1 மணிநேரம் 42 நிமிடங்களிலும், முழு சார்ஜை வெறும் 3.5 மணிநேரத்திலும் நிரப்பிவிட முடியுமாம்.

bmw ce 02 scooter review

ரைடிங் இம்பிரஷன்ஸ்: ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், பிஎம்டபிள்யூ சிஇ 02 ஆனது மகிழ்ச்சி ஆகும். குறிப்பாக, ஃப்ளஷ் மோடில் மிகுந்த ஜாலியான பயணத்தை பெற முடிகிறது. ஏனெனில், இந்த ரைட் மோடில் ஸ்கூட்டரின் த்ரோட்டல் ரெஸ்பான்ஸ் உடனடியாகவும், அதிகமாகவும் கிடைக்கிறது. எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து உடனடியாக டார்க் திறன் கிடைப்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் உதவிக்கரமாக இருக்கிறது.

தேவைப்பட்டால், குறைவான த்ரோட்டல் ரெஸ்பான்ஸை பெறவும் ஸ்கூட்டரின் ஃப்ளஷ் மோட் அனுமதிக்கிறது. சர்ஃப் மோட் ஆனது எலக்ட்ரிக் மோட்டாரின் முழு பவரை உபயோகப்படுத்துவதற்கான ரைட் மோட் ஆக உள்ளது. ஃப்ளஷ் மோடை போன்று, இந்த மோடில் பிரேக்கை மிகவும் அழுத்தமாக கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

bmw ce 02 scooter review

ஃப்ளோ மோட் ஆனது அடிக்கடி நிறுத்தி, நிறுத்தி செல்ல வேண்டிய டிராஃபிக் ஜாம் பகுதிகளுக்கு ஏற்றது. குண்டும், குழியுமான சாலைகளில் ஃப்ளோ மோடை பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். ஏனெனில், இந்த ரைட் மோடில் த்ரோட்டல் ரெஸ்பான்ஸ் ஆனது மிகவும் மென்மையாக கிடைக்கிறது. இதற்கேற்ப ஸ்கூட்டரை கண்ட்ரோல் செய்வது மிகவும் எளியதாக உள்ளது.

பொதுவாகவே, பைக்குகளை காட்டிலும் ஸ்கூட்டர்களை ஓட்டுவது எளியது என பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். புதிய சிஇ 02 ஆனது அதனினும் எளியதாக உள்ளது. இருக்கை தாழ்வானதாக உள்ளதால், ஏறி அமர்வதும், பின்னர் இறங்குவதும் எளியதாக உள்ளது. நிமிர்ந்த ரைடிங் பொசிஷன் மற்றும் எடை குறைவான பேட்டட் இருக்கை சவுகரியமான ரைடிங்கை வழங்குகிறது.

bmw ce 02 scooter review

இருப்பினும், மிகவும் உயரம் அதிகம் கொண்டவர்களுக்கு சிஇ 02 ஏற்றது இல்லை என்பதை கூறிக்கொள்கிறோம். பின் இருக்கையில் அமர்பவர்கள் ஒல்லியாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு தான் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், சிஇ 02 ஆனது தனியாக பயணம் செய்பவர்களுக்கும், காலேஜ் மாணவர்களுக்கும் தான் ஏற்ற ஸ்கூட்டர் ஆகும். மற்றப்படி, சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் செட்-அப்பில் எந்த குறையையும் சொல்ல முடியாது.

சஸ்பென்ஷன் செட்-அப் ஆனது ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரின் ரேக் ஆங்கிள் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏபிஎஸ் உடன் இணைந்து செயல்படும் டிஸ்க் பிரேக்குகள் பயணத்தின்போது நம்பிக்கை அளிக்கக்கூடியவை ஆக உள்ளன. அதிவேகத்தில் இயங்கும்போதும் சிஇ 02 எந்தவொரு அதிர்வுகளும் இன்றி நிலையான பயணத்தை வழங்குகிறது. இதனால், ஹை ஸ்பீடில் இயங்கும்போதும் எங்களால் தைரியமாக திசைகளை மாற்ற முடிந்தது.

bmw ce 02 scooter review

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தத்தில் பிஎம்டபிள்யூ சிஇ 02 ஆனது எதிர்காலத்தில் இருந்து வந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்று உள்ளது. அந்த அளவிற்கு தனித்துவமான அடையாளத்தை சிஇ 02 கொண்டுள்ளது. இருப்பினும், இந்த ஸ்கூட்டர் அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏற்றது என சொல்ல மாட்டோம். ஏனெனில், புதிய பிஎம்டபிள்யூ சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாழ்வானது மற்றும் விலையும் அதிகமானதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 1, 2024, 12:32 [IST]
English summary
Bmw ce 02 electric scooter first ride review price design features battery all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X