யூடியூப் மூலம் பணம் குவிக்கும் இளைஞர்கள்... புதுசா இப்போது கார் வேற... விலை எவ்வளவு தெரியுமா?
இன்றைய உலகில், சமூக வலைத்தளங்கள் மூலமாக நிறைய பேர் கணிசமான வருவாயை ஈட்டி வருகின்றனர். இதன் காரணமாக, பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு முழு நேரமாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட ஆரம்பித்தவர்களும் இருக்கின்றனர். இது எல்லாருக்கும் கை கொடுக்கவில்லை என்றாலும், பலரது வாழ்க்கை முற்றிலுமாக மாறியுள்ளது. நிறைய பேர் சமூக வலைத்தளங்கள் மூலமாக கிடைத்த வருவாயில் விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்கியுள்ளதை நம் டிரைவ்ஸ்பார்க் தளத்தில் பலமுறை பார்த்துள்ளோம். அந்த வரிசையில், பிரபல கேரள யூடியூபர்கள் ஒன்று சேர்ந்து விலையுயர்ந்த டாடா காரை வாங்கியுள்ளனர்.
கேரளாவில் எபின் வர்க்கீஸ் மற்றும் லிபின் வர்க்கீஸ் என இரு யூடியூபர்கள் உள்ளனர். சகோதரர்களான இவர்கள் இருவரும் புது, புது இடங்களுக்கு தங்களது வாகனங்களில் சென்று அதனை வீடியோவாக யூடியூப்பில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்காக 'இ புல் ஜெட்' (E Bull jet) என்கிற யூடியூப் சேனலை இவர்கள் நடத்தி வருகின்றனர். இதன் மூலமாக இவர்களுக்கு கணிசமான ரசிகர் கூட்டம் உள்ளது.

பிரபலமாகிவிட்டாலே பிரச்சனைகளும் சேர்ந்தே வரும் என்பதை சொல்லவே வேண்டும். அந்த வகையில், விதிமுறைகளை மீறியதற்காக இவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இ புல் ஜெட் யூடியூப்பர்கள் கைது செய்யப்பட்டது கேரளாவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதேபோல், சமீபத்தில் இவர்கள் சாலை விபத்தில் சிக்கிய சம்பவமும் இணையத்தில் பலரது கவனத்தை பெற்றது.
தங்களது பயணத்திற்காக இவர்கள் டிராவலர் வேன் ஒன்றை கேரவனாக மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த கேரவனில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ள இந்த இ புல் ஜெட் யூடியூப்பர்ஸ், யூடியூப்பில் சுமார் 21.7 இலட்ச சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளனர். இதில் இருந்து இவர்கள் எந்த அளவிற்கு யூடியூப்பில் பிரபலமாக உள்ளனர் என்பதை அறியலாம். இ புல் ஜெட் யூடியூப் சேனலுக்கு கேரளாவை தாண்டி நாட்டின் மற்ற மாநிலங்களிலும் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

இவர்கள் மொத்தம் 5 பேர் கொண்ட குழு ஆகும். இந்த அளவிற்கு பிரபலமாக விளங்கும் இ புல் ஜெட் யூடியூப்பர்கள் டாடா சஃபாரி கார் ஒன்றை செகண்ட் ஹேண்டில் வாங்கியுள்ளனர். இது டெல்லியில் பதிவு செய்யப்பட்ட டாடா சஃபாரி (Tata Safari) கார் ஆகும். மேலும், இ புல் ஜெட் யூடியூப்பர்கள் வாங்கியிருப்பது டாடா சஃபாரி காரின் ஸ்டோர்ம் எக்ஸ்ப்ளோரர் (Storme Explorer) என்கிற ஸ்பெஷல் எடிசன் கார் ஆகும்.
இந்த காரை ரூ.3 லட்சம் விலையில் வாங்கியுள்ளதாக கூறும் இவர்கள், சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கியதும்கூட வேறொரு டாடா சஃபாரி காரில் ஆகும். டாடா சஃபாரி ஸ்டோர்ம் எக்ஸ்ப்ளோரர் எடிசன் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது 2012இல் இருந்து 2015 வரையில் குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அந்த சமயத்திலேயே இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.

சஃபாரி ஸ்டோர்ம் எக்ஸ்ப்ளோரர் காருக்கு உள்ளே 2-டின் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை டாடா மோட்டார்ஸ் வழங்கியது. இதனுடன், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் ஆன்-ஸ்க்ரீன் ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்டவற்றையும் சஃபாரி காரின் இந்த ஸ்பெஷல் எடிசன் பெற்றது. காரின் வெளிப்பக்கத்தில் புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள், டோர் விஸர்கள், பை-சைக்கிள் கேரியர் மற்றும் கார்கோ பேஸ்கெட் போன்றவை இருப்பதை இ புல் ஜெட் யூடியூப்பர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் காணலாம்.
மேலும், காரின் மேற்கூரையில் கனோபியையும் பார்க்க முடிகிறது. 2.2 லிட்டர் வாரிகோர் டர்போசார்ஜ்டு என்ஜின் உடன் சஃபாரி ஸ்டோர்ம் எக்ஸ்ப்ளோரர் கார் விற்பனை செய்யப்பட்டது. அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக இந்த டர்போ என்ஜின் இருந்தது. இந்த காரை மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அந்த சமயத்தில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான விலை கொண்ட காரை வெறும் ரூ.3 லட்சத்தில் வாங்கியிருப்பது உண்மையில் சிறந்த டீல் ஆகும். 20 வருடங்களுக்கு மேல் பழமையான கார்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்திவரும் சூழலில், கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் பழமையான காரை இ புல் ஜெட் யூடியூப்பர்கள் செகண்ட் ஹேண்டில் வாங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications









