ரோட்டில் ஓட்டினு போனா தனியா தெரிவீங்க! இப்போ இந்த மாதிரி ஸ்கூட்டர் தான் அதிகமா வருது!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் இந்தியாவில் புதிய 'ஸூம் 160' (Xoom 160) ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ₹1,44,999 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 160 cc இன்ஜின் மற்றும் சாகச பயணத்திற்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற அம்சங்களை ஸூம் 160 கொண்டுள்ளது.
இது, நகரத்தில் சவாரி செய்வதற்கும், சுற்றுலாவிற்கும் ஏற்றவாறு ஸ்கூட்டரை விரும்புவோரை இலக்காகக் கொண்டு, சாகச ஸ்கூட்டர் பிரிவில் ஹீரோவின் முதல் முயற்சியாக இருக்கிறது. இந்த வெளியீடு, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் வளர்ந்து வரும் 160சிசி ஸ்கூட்டர் பிரிவில் நுழைவதைக் குறிக்கிறது.

ஸூம் 160 ஆனது, மாறுபட்ட நிலப்பரப்புகளை கையாளவும், நடைமுறை பயன்பாட்டை வழங்கவும், ஏப்ரிலியா SR 160 மற்றும் யமஹா ஏரோக்ஸ் 155 போன்ற போட்டியாளர்களுடன் போட்டியிடவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஸ்கூட்டர்களில் இருந்து இதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் வலிமையான ஸ்டைலிங் (Styling) தனித்து நிற்கிறது.
வடிவமைப்பு & ஸ்டைலிங்: ஸூம் 160-இன் ஸ்டைலிங் ஷார்ப்பானது மற்றும் செயல்பாட்டுக்கு ஏற்றது. இது உயரமான விண்ட்ஸ்கிரீன், அகலமான ஹேண்டில்பார் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எல்லாவற்றையும் முக்கியமாக, இது ஒரு மேக்ஸி-ஸ்கூட்டர் (Maxi-scooter) ரகம் ஆகும். அதாவது, இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பில் ரைடர் சவுகரியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இதன் காரணமாக, ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியில் வித்தியாசமான டிசைன் பின்பற்றப்பட்டு உள்ளதால், அந்த இடத்தில் பொருட்களை வைத்து எடுத்து செல்வது இயலாதது ஆகியுள்ளது. ஓட்டுனர் கால் வைக்கும் பலகை நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக விசாலமாக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் ஸ்கூட்டரின் வடிவமைப்பு நவீனமானது, நீண்ட பயணங்களுக்கு மட்டுமின்றி அன்றாட பயன்பாட்டிற்கும் ஏற்றவாறு உள்ளது. முன்புறம் எல்இடி ஹெட்லைட்கள், கூர்மையான அப்ரன் முரட்டுத்தனமான தோற்றத்தில் உள்ளது.
பின்புறத்தில், ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களின் வசதிக்காக பெரிய இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்கூட்டரின் பரிமாண அளவுகள் வழக்கமான நகர ஸ்கூட்டர்களை விடப் பெரியவை, இதனால் இது சாலையில் இயங்கும்போது ஒரு சிறந்த தோற்றத்தை அளிக்கிறது. ஹேண்டில்பாரின் மத்தியில் வழங்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஒரு டிஜிட்டல் யூனிட் ஆகும். இது வேகம், எரிபொருளின் நிலை, பயண விவரங்கள் மற்றும் பிற அத்தியாவசிய தகவல்களைக் காட்டுகிறது.

என்ஜின் & செயல்திறன்: ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டரில் 156சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இது அதிகப்பட்சமாக 14 bhp பீக் பவரையும், 13.7 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. மேலும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, நகர போக்குவரத்திலும், நெடுஞ்சாலைகளிலும் சீரான முடுக்கம் மற்றும் எளிதான கையாளுதலை வழங்குகிறது.
இந்த ஸ்கூட்டர், சவாரி செய்யும் சூழ்நிலைகளைப் பொறுத்து லிட்டருக்கு 40 முதல் 45 கிமீ வரை எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த இன்ஜின், தினசரி பயணத்திற்கும், வார இறுதிப் பயணங்களுக்கும் ஏற்றவாறு செயல்திறன் மற்றும் திறன் ஆகியவற்றின் சமநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்ற பாதுகாப்பு அம்சங்கள்: ஸூம் 160 ஸ்கூட்டரில் ஹெட்லைட்கள், டெயில் விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர்கள் உள்ளிட்ட எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஹேண்டில்பாரில் இருக்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் திரை ஆனது புளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் அழைப்பு எச்சரிக்கைகளுடன் கூடியதாக உள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில் சாவியில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதியும், ரிமோட் சாவி மூலமாக இருக்கையை திறக்கும் வசதியும் உள்ளன.
பாதுகாப்பு அம்சங்களில் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள், ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (CBS) மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை அடங்கும். சஸ்பென்ஷன் (Suspension) அமைப்பு, கரடுமுரடான சாலைகளைக் கையாள வடிவமைக்கப்பட்ட டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்களை உள்ளடக்கியதாக உள்ளது.

வகைகள் & விலை: ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டர் அறிமுகத்தின்போது ஒரே ஒரு வேரியண்டில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ₹1,44,999 ஆகும். மக்களிடம் இருந்து கிடைக்கும் தேவையைப் பொறுத்து, எதிர்காலத்தில் இந்த ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.
எங்கு வாங்குவது? யார் யார் போட்டியாளர்கள்?: ஸூம் 160, இந்தியா முழுவதும் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கிறது. டெலிவிரிகள் (Deliveries) இன்னும் சில வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரிலியா எஸ்.ஆர் 160 (Aprilia SR160), யமஹா ஏரோக்ஸ் 155 (Yamaha Aerox 155) மற்றும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 (Suzuki Burgman Street 125) ஆகியவை இந்த புதிய ஹீரோ ஸ்கூட்டரின் முக்கிய போட்டியாளர்களாகும்.

இவை இரண்டும் பிரீமியம் ஸ்கூட்டர் பிரிவில் செயல்திறன் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் கலந்த கலவையாக உள்ளன. இருப்பினும், இவற்றில் இல்லாத அட்வான்ஸான என்ஜின் உடன் ஸூம் 160 உருவாக்கப்பட்டு உள்ளது. யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் தான் பவர்ஃபுல்லான என்ஜினை கொண்டதாக இருப்பினும், கிட்டத்தட்ட அதற்கு இணையானதாக ஸூம் 160 ஸ்கூட்டரின் என்ஜின் உள்ளது.
மேலும், யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை போன்று ஸ்மார்ட் மொபைல் போன் இணைப்பு வசதி மற்றும் சாவியில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதிகளை கொண்டிருப்பது ஸூம் 160 ஸ்கூட்டரின் சிறப்பு ஆகும். ஆனால், மற்ற இரு ஸ்கூட்டர்களை காட்டிலும் எடைமிக்கதாக ஸூம் 160 உள்ளது. ஆனால், கரடு முரடான பாதைகளிலும் செல்வதற்கு ஏற்ப, மற்ற ஸ்கூட்டர்களை காட்டிலும் ஸூம் 160 ஸ்கூட்டரில் நீளமான சஸ்பென்ஷன் முன்பக்கத்தில் வழங்கப்பட்டு இருப்பதால் ஸ்கூட்டரின் எடை அதிகம் என்பது நமக்கு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டரில் சாகச அம்சங்களை விரும்பும் ஓட்டுநர்களுக்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்குகிறது. இது இந்தியச் சூழலுக்கேற்றவாறு நடைமுறை மற்றும் உறுதியான வடிவமைப்பை ஒருங்கிணைக்கிறது. விற்பனையில் போட்டியாக உள்ள மற்ற ஸ்கூட்டர்களை காட்டிலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ஸ்கூட்டர் என்பது ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டருக்கு பெரிய அனுகூலமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









