1.80 லட்ச ரூபாய் பைக்கிற்கு இது எல்லாம் ரொம்ப அதிகம்! ஹீரோ கம்பெனி உருவாக்கியதில் குறை சொல்ல முடியுமா?
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டில் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற EICMA கண்காட்சியில் தனது புதிய மோட்டார்சைக்கிள்களையும், எதிர்காலத்தில் தனது மோட்டார்சைக்கிள்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் வெளிக்காட்டி இருந்தது. அந்த வகையில், ஹீரோ நிறுவனம் சார்பில் கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட கான்செப்ட் 2.5ஆர் க்ஸ்டண்ட் (Concept 2.5R Xtunt) என்கிற பைக் கான்செப்ட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. அப்படியே ஒரு வருடம் ஓடிப்போனது. இந்த ஒரு வருடத்தில் கான்செப்ட் 2.5ஆர் க்ஸ்டண்ட் தனது தோற்றத்தை பெற ஆரம்பித்தது. அதாவது, இந்த கான்செப்ட்டில் இருந்து ஒரு பைக்கை உருவாக்கும் பணிகளில் ஹீரோ மோட்டோகார்ப் ஈடுப்பட்டு வந்தது.
அந்த பைக் தான், எக்ஸ்ட்ரீம் 250ஆர் (Xtreme 250R) ஆகும். கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்தியாவின் மிக பெரும் ஆட்டோமொபைல் கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025)-இல் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக் காட்சிக்கு நிறுத்தப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

இத்தகைய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஏரிகளின் நகரம் என அழைக்கப்படும் ராஜஸ்தானின் உதய்பூரில் புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கை எங்களது டிரைவ்ஸ்பார்க் (Drivespark) குழு ஓட்டி பார்த்தது. அப்போது நாங்கள் பெற்ற அனுபவங்களை ரிவியூவாக இந்த தொகுப்பில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள், அவற்றை தொடர்ந்து பார்க்கலாம்.
தோற்றம் & தொழிற்நுட்ப வசதிகள்: இத்தாலியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட ஹீரோ கான்செப்ட் 2.5ஆர் க்ஸ்டண்ட் ஆனது நேக்டு டிசைனிலான பைக்கிற்கான கான்செப்ட் ஆகும். அதில் இருந்து உருவாக்கப்பட்ட பைக் மட்டும் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? நகர்புறத்திற்குள் ஓட்டுவதற்கான ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக பைக்காக இருப்பினும், புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கை ரேஸ் டிராக்கிலும் ஓட்டும் அளவிற்கு ஹீரோ வடிவமைத்துள்ளது.

அந்த அளவிற்கு விளக்குகள் கொஞ்சம் குறைவாக வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், ஆக்டிவ் ஏரோ மற்றும் மெல்லியதான முன் டயர் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. 2.5ஆர் க்ஸ்டண்ட் கான்செப்ட் ஆனது மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் இருந்தது. ஆனால், அதில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக் அந்த அளவிற்கு ரக்டான தோற்றத்தை கொண்டிருக்கவில்லை. அனைத்து தரப்பு மக்களையும் கவர்வதற்காக ஹீரோ இவ்வாறு செய்திருக்கலாம்.
பைக்கின் முன்பக்கத்தில் முக்கோண வடிவத்தில் வழங்கப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் மட்டும் சற்று முரட்டுத்தனமான தோற்றத்தில் உள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் சிஸ்டத்தில் H-வடிவிலான டிஆர்எல்-கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஹெட்லைட் சிஸ்டத்திற்கு கீழே கோல்டன் நிறத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கும் கீழே 17-இன்ச்சில் அலாய் சக்கரம் உள்ளது.

சஸ்பென்ஷனையும் சக்கரத்தையும் இணைக்கும் இடத்தில் ஆங்குலர் ஃபெண்டர் (Angular Fender) கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியே பைக்கின் பக்கவாட்டிற்கு வந்தால், பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க் நம்மை வசீகரிக்கிறது. பெட்ரோல் டேங்க் பகுதியில் மொபைல் போன் சார்ஜிங் வசதியை காண முடிகிறது. பெட்ரோல் டேங்கின் பருத்த உருவத்திற்கு ஏற்ப இரு துண்டுகளாக இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஓட்டுபவருக்கு தேவையான விபரங்களை வழங்க இந்த பைக்கின் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள எல்சிடி டிஸ்பிளே ஆனது ப்ளூடூத் (Bluetooth) இணைப்பு வசதி உடன் உள்ளது. பைக்கிற்கு அடியில் சிறிய அளவில், தடிமனான வடிவத்தில் எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட் பார்ப்போரை கவர்கிறது. பின் சக்கரமும் 17-இன்ச் தான் என்றாலும், அதில் பொருத்தப்பட்டுள்ள டயர் ஆனது நன்கு அகலமானதாக கொடுக்கப்பட்டுள்ளது.

என்ஜின் & பரிமாண அளவுகள்: புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் 250சிசி, லிக்யுடு-கூல்டு, 4-வால்வு, DOHC, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 9,250 ஆர்பிஎம்-இல் 30 பிஎச்பி மற்றும் 7,250 ஆர்பிஎம்-இல் 25 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த என்ஜின் & கியர்பாக்ஸ் அமைப்பில் ஸ்லிப்பர் & அசிஸ்ட் க்ளட்ச்சும் உள்ளது. ஸ்டீல் டிரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் முன்பக்கத்தில் 43மிமீ-இல் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 6 விதமாக ப்ரீலோடு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யக்கூடிய, வாயு மூலமாக செயல்படக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங் பணியை கவனிக்க முன்பக்கத்தில் 320மிமீ பெடல் டிஸ்க்கும், பின்பக்கத்தில் சற்று சிறியதாக 230மிமீ பெடல் டிஸ்க்கும் உள்ளன. இவற்றுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்காக, ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் 17-இன்ச் அலாய் சக்கரங்களில் 110/70 (முன்பக்கம்) மற்றும் 150/60 (பின்பக்கம்) அளவுள்ள டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கின் நீளம் 2,023மிமீ, அகலம் 828மிமீ மற்றும் உயரம் 1,062மிமீ ஆகும். பைக்கின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 1,357மிமீ ஆக உள்ளது. தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரமானது 806மிமீ ஆகவும், தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியின் உயரமானது 167மிமீ ஆகவும் உள்ளன. 167.7 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 11.5 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

ரைடிங் அனுபவம்: புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக் சாலையில் செல்லும் எவரொருவரையும் கவர்ந்திழுக்க கூடிய வகையில் மிகவும் கவர்ச்சிக்கரமான தோற்றத்தை கொண்டிருப்பதை முதலில் சொல்லியே ஆக வேண்டும். இதனை காரணம் காட்டி நல்லவேளையாக இந்த பைக்கின் செயல்படுதிறனில் ஹீரோ நிறுவனம் எந்தவொரு குறையையும் வைக்கவில்லை.
போட்டியாக உள்ள மற்ற 250சிசி நேக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகள் உடன் போட்டியிடும் அளவிற்கு எல்லா தகுதிகளையும் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் கொண்டுள்ளது. அதிக டார்க் திறனை உடனடியாக வழங்கக்கூடியதாக உள்ள இந்த பைக்கின் 250சிசி என்ஜின் உடனடி பிக்-அப்பை வழங்குகிறது. முதல் கியர் அதிகளவில் ஆற்றலை வழங்கக்கூடியதாக இல்லாவிடினும், உடனடி பிக்-அப்பை கொடுக்கிறது.

புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் கியர்களை மாற்றுவது எளியதாக உள்ளது. நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது கடைசி 6வது கியர் ஏற்றதாக இருக்கும். என்ஜினை அதிகமாக வேலை வாங்காமல், இந்த கியரில் பைக் எளியதாக 100kmph வேகத்தை தாண்டுகிறது. இருப்பினும், 4000- 5250 ஆர்பிஎம் வேகத்தில் என்ஜின் இயங்கும்போது, என்ஜின் வழங்கும் ஆற்றலில் பெரியதாக அதிகரிப்பு இல்லாததை நாங்கள் உணர்ந்தோம்.
புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கின் சஸ்பென்ஷன் செட்-அப் மிகவும் அருமையானதாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளம், மேடுகள் அனைத்தையும் இந்த பைக்கில் எளியதாக கையாள முடிகிறது. போதுமான குஷின்களை கொண்ட இருக்கை மற்றும் ரிலாக்ஸான ரைடிங் பொசிஷன் உள்ளிட்டவை நீண்ட தொலைத்தூர பயணங்களையும் இந்த பைக்கில் எளிமையானதாக வழங்கும்.

இந்த பைக்கின் எடை 167.7 கிலோ என கூறினாலும், ஓட்டும்போது இதில் பாதி எடையில் பைக் இருப்பதுபோல தான் நாங்கள் உணர்ந்தோம். வளைவுகளில் திரும்பும்போது இந்த புதிய ஹீரோ பைக் சிறப்பாகவே செயல்படுகிறது. அத்தகைய நேரங்களில் நமக்கு கூடுதல் தைரியம் கொடுக்கும் விதமாக இந்த பைக்கில் எம்.ஆர்.எஃப் ஜாப்பர் (MRF Zapper) டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, டிராக் மோட் (Track Mode)-இல் பைக்கை ஓட்டும்போது பிரேக்குகள் மிகவும் ஷார்ப்பானவைகளாக உள்ளன.
ஜாலியான பயணத்தை எதிர்பார்க்கும்போது, இந்த டிராக் மோட்-ஐ பயன்படுத்தலாம். ரோடு மோட்-இல் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ்-இன் தலையீடு நாம் எதிர்பார்ப்பதை காட்டிலும் கொஞ்சம் முன்கூட்டியே வருகிறது. இதனால், ரோடு மோட்-இல் டயர்கள் அதிகமாக சாலையில் தேய்கின்றன. இந்த இரு மோட்களில் பைக்கை ஓட்டும்போது ஏபிஎஸ்-ஐ ஸ்விட்ச் செய்ய முடியாதது குறையாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேடிஎம், பஜாஜ், ஹஸ்வர்னா உள்ளிட்ட நிறுவனங்களால் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் 250சிசி பைக்குகள் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் தனது பலமான ஆயுதமாக புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கை களமிறக்குகிறது. இந்த பைக்கை ஓட்டிய சமயத்தில் இந்த பைக் எங்களை கவர்ந்திருந்தாலும், ஹீரோ நிறுவனம் இன்னும் சிறப்பான 250சிசி பைக்கை உருவாக்கி இருக்காலம் என்று அடுத்த நாளிலேயே எங்களுக்கு தோன்றியது.
அதேநேரம், புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக் சிறப்பான தோற்றத்தை ஏகப்பட்ட தொழிற்நுட்ப மற்றும் மெக்கானிக்கல் வசதிகள் உடன் கொண்டிருப்பதால், இந்த பைக்கை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. இந்த பைக்கை வாங்க உள்ளவர்களுக்கு எங்களது பரிந்துரைப்பு ஒன்றே ஒன்றுதான், டயர் அப்கிரேட் உடன் பைக்கை வாங்க முயற்சியுங்கள்.


Click it and Unblock the Notifications









