ஆக்டிவாவை விட கம்மியான விலையில்... ஹோண்டா சாதிச்சு காட்டிடுச்சி! க்யூ.சி.1 ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?

ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers), இந்தியாவில் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம். ஆனால், எலக்ட்ரிக் 2-வீலர்களை அறிமுகம் செய்வதில்தான் கொஞ்சம் அதிகமாகவே நீண்ட வருடங்கள் யோசித்து வந்தது. வெளிநாடுகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை ஏற்கனவே விற்பனை செய்துவந்தாலும், இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்வதில் ஹோண்டா நிறுவனத்துக்கு சற்று தயக்கம் இருந்தது. இந்த நிலையில், அந்த தயக்கங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்து, சமீபத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் ஒன்றுக்கு இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் காட்சிக்கு நிறுத்தி கண்காட்சியை கோலாகலப்படுத்தியது.

மேலும், அப்போதே அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகளை அறிவித்து அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவந்தது. ஹோண்டா ஆக்டிவா இ (Activa e) மற்றும் க்யூ.சி.1 (QC1) என்பன அந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இந்த நிலையில், பெங்களூர் (Bengaluru) சாலைகளில் இந்த இரு புதிய ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாங்கள் ஓட்டி பார்த்தோம்.

honda qc1 electric scooter review

அதன் மூலம், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி பல விஷயங்கள் எங்களுக்கு தெரியவந்தன. இதில், ஹோண்டா ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நேரில் நெருக்கமாக பார்க்க எப்படி உள்ளது? அதன் பேட்டரி & ரேஞ்ச் எவ்வளவு? ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என்பன போன்றவற்றை எல்லாம் தனியாக ஒரு ரிவியூ (Review) ஆக தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தொகுப்பில் நாம் புதிய ஹோண்டா க்யூ.சி.1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரிவியூவை பார்க்கலாம்.

தோற்றம் & வசதிகள்: ஹோண்டா ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மினி வெர்சனாக க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விளங்குகிறது. அதாவது, ஆக்டிவா இ ஸ்கூட்டரை காட்டிலும் க்யூசி1 அளவில் சற்று சிறியதாக உள்ளது. ஆனால், தோற்றத்தை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஹோண்டா ஆக்டிவா இ போன்று உள்ளதை ஆட்டோ எக்ஸ்போவின் போதே பார்த்திருந்தோம். நேரில் பார்ப்பதற்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அவ்வாறே உள்ளது.

honda qc1 electric scooter review

குறிப்பாக, ஸ்கூட்டரின் முன்பகுதி பெரிதும் ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒத்துள்ளது. ஆக்டிவா இ ஸ்கூட்டரை காட்டிலும் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக புதிய க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நிறைய ஆடம்பர அம்சங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஹெட்லைட் அப்படியே ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து வழங்கப்பட்டிருந்தாலும், க்யூசி1 ஸ்கூட்டரில் ஹேண்டில்பாரில் டி.ஆர்.எல்-கள் வழங்கப்படவில்லை.

ஹேண்டில்பாருக்கு மத்தியில் வண்ண டிஎஃப்டி (TFT) திரைக்கு பதிலாக நெகட்டீவ் எல்சிடி திரை வழங்கப்பட்டுள்ளது. ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரு ஸ்டோரேஜ் பகுதிகள் ஹேண்டில்பாருக்கு கீழே வழங்கப்பட்டு இருப்பினும், க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரேயொரு ஸ்டோரேஜ் பகுதி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

honda qc1 electric scooter review

இந்த ஸ்டோரேஜ் பகுதிக்கு அருகே லக்கேஜ் ஹூக் மற்றும் யுஎஸ்பி-சி டைப் சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டரின் பேட்டரியை சார்ஜ் செய்யும் பகுதி ஆனது ரைடர் இருக்கைக்கு கீழே வழங்கப்பட்டுள்ளது. இருக்கைக்கு அடியில் 26 லிட்டர்கள் கொள்ளளவில் ஸ்டோரேஜ் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் உடன் சேர்த்து இன்னும் சில பொருட்களையும் வைத்து எடுத்து செல்லலாம்.

மொத்தமாக புதிய க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பார்க்கும்போது இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த ஹோண்டா க்ளிக் (Cliq) என்கிற பெட்ரோல் ஸ்கூட்டரை ஞாபகப்படுத்துகிறது. குறிப்பாக, ஸ்கூட்டரின் பின்பகுதியை பார்க்கும்போது க்ளிக் ஸ்கூட்டர் தான் நினைவிற்கு வருகிறது. க்யூசி1 ஸ்கூட்டரில் பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப் வெளியே தெரியும் அளவிற்கு டெயில்லைட்கள் மற்றும் பின்பக்க இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

honda qc1 electric scooter review

இந்த டிசைன் ஆனது பார்ப்பதற்கு விசித்திரமாகவும், ஸ்டைலாகவும் உள்ளது. அதேபோல், ஸ்கூட்டரின் கருப்பு நிற அலாய் சக்கரங்களும் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன. ஏனெனில், முன் சக்கரம் ஆனது டிரம் பிரேக் உடன் இருக்கும் நிலையில், பின் சக்கரம் எலக்ட்ரிக் மோட்டார் உடன் உள்ளது. அதாவது, ஸ்கூட்டரை இந்த மோட்டார் தான் பின் சக்கரம் வாயிலாக இயக்குகிறது.

மோட்டார் & மெக்கானிக்கல் பாகங்கள்: புதிய ஹோண்டா க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிறிய அளவில் 1.5kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 80கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என ஹோண்டா தெரிவிக்கிறது. ஸ்கூட்டரின் ரேஞ்சை ஆய்வு செய்யும் அளவிற்கு எங்களுக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை.

honda qc1 electric scooter review

ஆனால், எங்களிடம் கொடுக்கப்பட்ட சார்ஜரில் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகியது என்பதை மட்டும் எங்களால் கூற முடியும். 330 வாட்ஸ் திறன் கொண்ட இந்த சார்ஜரை ஸ்கூட்டருடன் தனியாக வாங்க வேண்டும். இதன் மூலம், பேட்டரியை 4 மணிநேரம் 30 நிமிடங்களில் 0-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிடலாம். ஆனால், முழுவதுமாக சார்ஜ் நிரப்ப சுமார் 6 மணிநேரம் 50 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

பேட்டரி பொருத்தப்படும் 1.8 கிலோவாட்ஸ் பிரஷ்லெஸ் டிசி மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 2.4 பிஎச்பி மற்றும் 77 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 0-இல் இருந்து 40kmph வேகத்தை எட்ட குறைந்தது 9.1 வினாடிகளை எடுத்துக் கொள்ளும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 50kmph ஆகும்.

honda qc1 electric scooter review

சஸ்பென்ஷனுக்கு புதிய க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 5 விதங்களாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ஹைட்ராலிக் ட்வின் ஷாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக் பணியை கவனிக்க, முன் சக்கரத்தில் 130மிமீ டிரம் பிரேக்கும், பின் சக்கரத்தில் 110மிமீ டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. முன் சக்கரம் ஆனது பின் சக்கரத்தை விட 2 இன்ச் பெரியதாக கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் நீளம் 1,826மிமீ, அகலம் 701மிமீ, உயரம் 1,129மிமீ மற்றும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 1,275மிமீ ஆகும். தரையில் இருந்து ரைடர் இருக்கை 704மிமீ உயரத்திலும், ஸ்கூட்டரின் அடிப்பகுதி 169மிமீ உயரத்திலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை 89.5 கிலோ ஆகும்.

honda qc1 electric scooter review

பயண அனுபவம்: சாலையில், புதிய க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் மெதுவாக இயங்குகிறது. இதற்கேற்ப ஸ்கூட்டரில் இருந்து சுத்தமாக எந்த சத்தமும் வராததால், சில நேரங்களில் நாம் ஸ்கூட்டரை ஓட்டுகிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது. மோட்டாரில் இருந்து துவக்கத்தில் மிகவும் குறைவான இயக்க ஆற்றலே கிடைப்பதால், ஸ்டார்ட் செய்ததும் அதிக வேகத்தில் செல்வதை எல்லாம் இந்த ஸ்கூட்டரில் எதிர்பார்க்கவே முடியாது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு (Top-Speed) வெறும் 50kmph மட்டுமே. ஆனால், அந்த வேகத்தை எல்லாம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எட்டுவது எல்லாம் வாய்ப்பே இல்லாதது போல தான் எங்களுக்கு தோன்றியது. சஸ்பென்ஷன் செட்-அப் கொஞ்சம் விரைப்பானதாக உள்ளது. இதனால், பள்ளம், மேடுகளில் பயணம் செய்பவர்கள் குலுக்கப்படுவதை உணர முடிந்தது.

honda qc1 electric scooter review

இருப்பினும், அகலமான மற்றும் அதிக குஷின் கொண்ட இருக்கைகள் குலுக்கல்களை சமாளிக்கின்றன. ஆனால், ரைடர் கால் வைக்கும் ஃப்ளோர்போர்டு வழக்கத்தை காட்டிலும் உயரமாக வழங்கப்பட்டுள்ளதால், வளைவுகளில் திரும்பும்போது கால் முட்டிகள் ஸ்கூட்டருடன் இடித்துக் கொள்வதை தவிர்க்க முடியவில்லை. இருக்கைக்கு அடியில் அதிக இடவசதி வழங்கப்பட்டு இருப்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறிய தூர பயணங்களுக்கு புதிய ஹோண்டா க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் ஏற்றதாக இருக்கும். நெரிசல் மிகுந்த சாலைகளில், எப்படியிருந்தாலும் குறைவான வேகத்தில்தான் செல்ல வேண்டியிருக்கும் என்றால் அத்தகைய பயணங்களுக்கு க்யூசி1 மிகவும் பொருத்தமாக இருக்கும். ரேஞ்ச் 80கிமீ வரையில் கிடைக்கும் என்பதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

More from DriveSpark

Article Published On: Monday, March 24, 2025, 14:10 [IST]
English summary
Honda qc1 electric scooter test ride review design features range all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X