கேடிஎம் ட்யூக் 125சிசி பைக் - சிறப்பு பார்வை
கேடிஎம் ட்யூக் 200 மற்றும் ட்யூக் 390 பைக்குகள் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்து, அதன் ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஆர்சி200 மற்றும் ஆர்சி390 மாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.
இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்திடமிருந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் கேடிஎம் ட்யூக் 125 மாடல். இந்த புதிய 125சிசி ட்யூக் மாடல் இந்தியாவில் வருமா, வராதா என்று இணையதளங்களில் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் அறிமுகத்தில் ஏற்பட்டிருக்கும் இழுபறிக்கான காரணங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

டிசைன்
கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கும், புதிய ட்யூக் 125 பைக்கிற்கும் டிசைனில் வித்தியாசங்கள் இல்லை. ஏற்கனவே பெரும் வரவேற்பை பெற்ற அசத்தலான பேனல்களால் போர்த்தப்படாத, திறந்த மேனியாக கவர்கிறது.

எஞ்சின்
கேடிஎம் ட்யூக் 125 பைக்கில் எஞ்சின் மட்டுமே மாற்றம் கண்டிருக்கும். இந்த பைக்கில் இருக்கும் ஒற்றை சிலிண்டர் கொண்ட 124.7சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகட்சமாக 15 பிஎச்பி பவரையும், 12 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

டாப் ஸ்பீடு
புதிய கேடிஎம் ட்யூக் 125சிசி பைக் 0 - 100 கிமீ வேகத்தை 9.2 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 120 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய திறன் பெற்றதாக இருக்கும்.

மைலேஜ்
சராசரியாக லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தரும். இந்த பைக்கில் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்
முன்புறத்தில் 4 பாட் காலிபர்கள் கொண்ட 300மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபருடன் 230மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக் சிஸ்டமும் உள்ளது. அத்துடன், பிரெம்போ மற்றும் பாஷ் நிறுவனங்களின் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட காலிபர்கள் மற்றும் 2 சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட பைக். 125சிசி செக்மென்ட்டில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் மிகவும் சிறப்பான மாடலாகவும் குறிப்பிடலாம்.

இருக்கை உயரம்
தரையிலிருந்து 800மிமீ உயரத்தில் இருக்கை அமைப்பும், 170 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்ட பைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ரைடிங் பொசிஷன்தான் இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக கூறலாம்.

டயர்கள்
முன்புறத்தில் 110மிமீ அகலமுடைய டயரும், பின்புறத்தில் 150மிமீ அகலமுடைய டயரும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு டயர்களும் மிகவும் சிறப்பான தரைப்பிடிப்பை வழங்கும் சிறப்பு வடிவமைப்பை கொண்டது.

சஸ்பென்ஷன்
முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் தலைகீழ் செயல்பாடு கொண்ட ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கேடிஎம் ட்யூக் 690 பைக்கிற்கு பயன்படுத்தப்பட்ட அதே ஃபார்முலாவில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த சஸ்பென்ஷன் அமைப்பு மிகச்சிறப்பான கையாளுமையை இந்த சஸ்பென்ஷன் அமைப்பு உறுதி செய்யும் என்று கேடிஎம் தெரிவிக்கிறது.

எதிர்பார்க்கும் விலை
ரூ.90,000 விலையில் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த பைக்கின் பாகங்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என்பதும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படுவதும், இந்த பைக்கின் விலை ரூ.1.20 லட்சம் வரை செல்லும். 125சிசி மார்க்கெட்டில் மிகவும் அதிகம் விலை கொண்ட பைக் மாடலாக இருக்கும். எனவே, விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்காது என்பதே, பஜாஜ்- கேடிஎம் கூட்டணி தயக்கம் காட்டுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

விலை வித்தியாசம்
மற்றொன்று கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கும், ட்யூக் 125 பைக்கிற்கும் இடையிலான விலை வித்தியாசம் ரூ.30,000 முதல் ரூ.40,000 மட்டுமே இருக்கும். எனவே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கேடிஎம் ட்யூக் 200 பைக்கை தேர்வு செய்ய விரும்புவர் என்பதும் இந்த பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதில் இருக்கும் சிக்கலாக கருதப்படுகிறது.

காத்திருக்கும் இளசுகள்
எது எப்படியிருந்தாலும், இந்த புதிய பைக்கை வாங்குவதற்காக பல இளைஞர்கள் காத்துக் கிடக்கின்றனர். இது அறிமுகம் செய்யும்பட்சத்தில் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும். பஜாஜ் - கேடிஎம் கூட்டணி தயக்கம் காட்டுவதில் அர்த்தமில்லை. ஒருவேளை, கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் விற்பனை குறையக்கூடும். ஆனால், இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications








