புதிய ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
ஆரம்ப ரக பெர்ஃபார்மென்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால், இந்த சந்தையில் ஏராளமான மாடல்கள் வரிசை கட்டி விட்டன.
ஆரம்ப ரக பெர்ஃபார்மென்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால், இந்த சந்தையில் ஏராளமான மாடல்கள் வரிசை கட்டி விட்டன. குறிப்பாக, 160சிசி ரகத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனமானது, யூனிகார்ன் 160 மற்றும் ஹோண்டா ஹார்னெட் 160 ஆகிய மாடல்களை விற்பனை செய்து வந்தது. இந்தநிலையில், மூன்றாவது மாடலாக எக்ஸ்- பிளேடு 160 பைக்கை கடந்த மார்ச் மாதம் களமிறக்கியது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த புதிய ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக், மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா யூனிகார்ன் 160 மற்றும் ஹார்னெட் 160 பைக் மாடல்களுக்கான இடையிலான ரகத்தில் இந்த பைக் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்தபோது கிடைத்த சாதக, பாதக அம்சங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்
புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு 160 பைக்கின் முகப்பு டிசைன் ரோபோ போன்ற முகவெட்டுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் முதலாவது மாடலாக எல்இடி ஹெட்லைட்டுடன் வந்துள்ளது. அதோடு, அம்புகுறி போன்ற வடிவமைப்பு கொண்ட எல்இடி டெயில் லைட்டும் இந்த பைக்கின் வசீகரத்தையும், மதிப்பையும் உயர்த்துகின்றன.

இந்த பைக்கின் ஒவ்வொரு பாகத்தின் டிசைனும் மிக கூர்மையான தோற்றத்தை தரும் வகையில், மிரட்டலாக இருக்கின்றன. பெட்ரோல் டேங்கில் எக்ஸ் பிளேடு பேட்ஜ் கொண்ட பாடி பேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரட்டை துளை மஃப்ளர் அமைப்பும் குறிப்பிடத்தக்க விஷயம். தனித்துவமான பைக்கை தேடும் இளைஞர்களை இந்த டிசைன் கவரும் என்று சொல்லலாம்.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்
இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டிசைன் மிக சிறப்பாக இருக்கிறது. எழுத்துக்களை படிப்பதற்கு ஏதுவாக பெரிதாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. வேகம், ஓடிய தூரம், எரிபொருள் அளவு, இரண்டு டிரிப் மீட்டர்கள் உள்ளிட்டவற்றுடன் சர்வீஸ் இண்டிகேட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ஆகிய தகவல்களையும் பெறலாம்.

எஞ்சின்
ஹோண்டா யூனிகார்ன் 160 மற்றும் ஹார்னெட் 160 பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 162.7சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹார்னெட் பைக்கைவிட சற்றே குறைவான பவரை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13.9 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

செயல்திறன்
வழக்கமான ஹோண்டா எஞ்சின்களை போலேவ, இந்த பைக்கின் எஞ்சின் ஆரம்ப நிலையில் மிகச் சிறப்பான பிக்கப்பையும், மென்மையாகவும் இருப்பதால் ஓட்டுவதற்கு உற்சாகத்தை தருகிறது. நடுத்தர வேகத்திலும் அசத்துகிறது. கியர்பாக்ஸ் புதிது என்பதால் கியர் மாற்றும்போது சற்று கடினமாக தெரிகிறது. ஆனால், சிறிது காலம் கழித்து ஸ்மூத்தாக மாறிவிடும் என நம்பலாம்.

இதனால், நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு சிறப்பான மாடலாக இருக்கும். எனினும், எஞ்சின் அதிக ஆர்பிஎம் செல்லும்போது எஞ்சின் சமாளிக்க முடியாமல் திணறுவதை அதிர்வுகள் மூலமாக உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த பைக்கில் எஞ்சின் கில் சுவிட்ச் இல்லை என்பது எல்லோராலும் சுட்டிக் காட்டப்படும் குறை.

சஸ்பென்ஷன்
இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து சாலை நிலைகளையும் இந்த சஸ்பென்ஷன் எளிதாக சமாளிக்க உதவுகிறது.

கையாளுமை
இந்த பைக் 140 கிலோ எடை கொண்டிருப்பதால், இதன் சஸ்பென்ஷனை கடினமான முறையில் ஹோண்டா எஞ்சினியர்கள் அமைத்துள்ளனர். சாஸி மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு சிறப்பாக இருப்பதால், நல்ல கையாளுமையை வழங்குகிறது. இது இளைஞர்களை வெகுவாக கவரும் விஷயமாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களிலும் லாவகமாக ஓட்ட துணை நிற்கிறது. எனினும், எடை அதிகம் என்பதால், சற்று எச்சரிக்கையுடன் கையாள வேண்டி இருக்கிறது.

ரைடிங் பொசிஷன்
ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கில் இருக்கும் ஒற்றை இருக்கை அமைப்பு ஓட்டுனருக்கும், பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் சவுகரியமானதாக இருக்கிறது. பின்னால் ஒருவர் அமர்ந்திருந்தால் கூட ஓட்டுபவர் நெருக்கடி இல்லாமல் பைக்கை கையாள முடிகிறது. ஹேண்டில்பார் தாழ்வாக அமைந்திருப்பதும், இருக்கை அமைப்பு மற்றும் கால் வைப்பதற்கான ஃபுட் அமைப்பு ஆகியவை இணைந்து சிறப்பான ரைடிங் பொசிஷனை வழங்குகிறது.

ஹெட்லைட் வெளிச்சம்
இதன் எல்இடி ஹெட்லைட்டுகள் இரவு நேரத்தில் அதிக பிரகாசத்தை வழங்குகிறது. ஹாலஜன் பல்புகளைவிட இந்த எல்இடி பல்புகள் அதிக பிரகாசத்தை வழங்குவதால், இரவு நேர பயணங்களை பாதுகாப்பாக இருக்க உறுதி செய்கிறது. மேலும், நான்கு இண்டிகேட்டர்களும் ஒரே நேரத்தில் ஒளிரும் ஹசார்டு சுவிட்ச் இண்டிகேட்டரும் இருப்பது சிறப்பான விஷயம்.

பிரேக் சிஸ்டம்
புதிய ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கில் முன்புறத்தில் 276 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்ஷனலாக கூட சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றம் தரும் விஷயம். அதேநேரத்தில், இதன் டிஸ்க் பிரேக் இந்த பைக்கின் பாதுகாப்பை ஓரளவு உறுதி செய்வதற்கு துணை நிற்கிறது.

டயர்கள்
இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்களில் எம்ஆர்எஃப் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 80/110 R17 டயரும், பின் சக்கரத்தில் 130/70 R17 டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பின்புற டயர் அகலமாக இருப்பதன் காரணமாக, மிகச் சிறந்த தரைப்பிடிப்பை வழங்கும். பிரேக் சிஸ்டத்திற்கும் துணை நிற்பதால் பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது.

வண்ணத் தேர்வு
புதிய ஹோண்டா எக்ஸ்பிளேடு பைக் மேட் மார்வெல் புளூ மெட்டாலிக், மேட் ஃப்ராஸன் சில்வர் மெட்டாலிக், பியர்ல் ஸ்பார்டன் ரெட், பியர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் மேட் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு
ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கைவிட ரூ.5,000 கூடுதல் விலையிலும், ஹார்னெட் 160 பைக்கைவிட ரூ.4,000 குறைவான விலையிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை அக்கம்பக்கம் திரும்பி விடாமல் இருப்பதற்காக புதிய தேர்வாக இந்த பைக்கை அறிமுகம் செய்தது.
இதன் தனித்துவமான தோற்றம் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கிறது. சிறப்பான ரைடிங் பொசிஷன், கையாளுமை ஆகியவை இதற்கு வலு சேர்க்கின்றன. எனினும், இதன் தோற்றம் தனித்துவமான 160சிசி மாடல்களை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக அமையும். எல்லோரையும் கவராது.


Click it and Unblock the Notifications








