தினமும் பயன்படுத்தலாம்.. முற்றிலும் வித்தியாசமான லுக் கொண்ட இ-ஸ்கூட்டர்.. இன்டிகேட்டர எங்கே வச்சிருக்காங்க!!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் நியூமரஸ் மோட்டார்ஸ் (Numeros Motors). இந்த நிறுவனம் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் டிப்ளோஸ் ப்ரோ (Diplos Pro) எனும் மின்சாரத்தில் இயங்கும் டூ-வீலர் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகன மாடல் ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜில் 140 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும்.
இது ஓர் வர்த்தக பயன்பாட்டு வாகனம் என்பதால், அதிக பாரத்தைச் சுமக்கும் வசதி அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையில் முரட்டுத் தனமான தோற்றத்துடன் சேர்த்து பெரிய கால் வைக்கும் இடமும், பின் பக்கத்தில் கேரியர் அமைப்பும் டிப்ளோஸ் ப்ரோ-வில் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த இரண்டு இடங்களிலும் தாராளமாக சரக்குகளை ஏற்றிக் கொள்ள முடியும். இந்த வாகனத்தைத் தொடர்ந்தே தற்போது நியூமரஸ் மோட்டார்ஸ் டிப்ளோஸ் மாடலிலேயே மற்றுமொரு புதிய வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. டிப்ளோஸ் மேக்ஸ் (Diplos Max), எனும் வெர்ஷனையே அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
இது தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வெர்ஷன் ஆகும். இதையே சமீபத்தில் பெங்களூருவில் வைத்து ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. அப்போது வாகனம் குறித்து கிடைத்த அனுபவங்களையே இங்கே ரைடு ரிவியூ பதிவாக உங்களுக்காக இங்கே வழங்கி இருக்கின்றோம். வாங்க இதுபற்றிய விரிவான தகவலைக் காணலாம்.

டிப்ளோஸ் மேக்ஸ் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரம்: டிப்ளோஸ் ப்ரோ-விடம் இருந்து பலநிலைகளில் இந்த வெர்ஷன் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாக இந்த வெர்ஷனில் பயணிகள் சௌகர்யமாக பயணிப்பதற்கான அம்சங்களே அதிக அளவில் வழங்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், டிப்ளோஸ் ப்ரோவில் பின் பக்கத்தில் கேரியர் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கின்ற சூழலில், டிப்ளோஸ் மேக்ஸ்-இல் அதற்கு பதிலாக இருக்கை வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுவே டிப்ளோஸ் ப்ரோ மற்றும் டிப்ளோஸ் மேக்ஸ் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசம் ஆகும். மற்றபடி இரண்டும் ஒரே மாதிரியான முரட்டுத் தனமான தோற்றத்திலேயே காட்சியளிக்கின்றன. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டதே இந்த நீயூமரஸ் டிப்ளோஸ் மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

பண்டைய காலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனத்தைப் போல அது காட்சியளிக்கின்றது. இந்த தோற்றத்திற்கு வலுசேர்க்கும் விதமாக வட்ட வடிவ ஹெட்லைட் உள்ளது. அதேவேளையில், இதன் முன்பக்க மேல்பக்கம் ஷார்ப்பாகவும் ஸ்போர்ட்டி லுக்கிலும் காட்சியளிக்கின்றது. இதற்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக டூயல் டோன்களால் இந்த ஸ்கூட்டர் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
முக்கியமாக முன் பக்க மேல் பக்கத்தில் கருப்பு நிறத்தில் கண்ணாடி போன்ற ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. இங்கேயே டிப்ளோஸ் மேக்ஸ் எனும் எழுத்து அணைந்திருக்கின்றது. தொடர்ந்து, அங்கு சிறிய பகல்நேரத்திற்கான எல்இடி லைட்டும் வழங்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்தே இந்த ஸ்கூட்டருக்கு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தை வழங்குகின்றன.
தொடர்ந்து, நண்டுகளுக்கு கண் இருப்பதைப் போல இன்டிகேட்டர் லைட்டுகள் முன் பக்கத்தின் மேற்பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாதிரியான ஸ்டைலில் வேறு எந்த வாகனத்திலும் இன்டிகேட்டர் லைட்டுகளைப் பார்க்க முடியாது. இதன் கால் வைக்கும் இடம் நீளமாக உள்ளது. ரைடர் சௌகரியமாக கால்களை வைத்துக் கொண்டு பயணிக்க இதுவே போதுமானது.
இருக்கைகள் சற்றே பெரியதாக இருக்கின்றன. ஆனால், பெரிய அளவில் அதற்கு அடியில் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படவில்லை. சற்றே சிறியதாகவே உள்ளன. இதற்கு அதில் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டதே காரணமாக உள்ளது. இந்த வசதி இருப்பதனால் பேட்டரிகளை விருப்பப்பட்ட இடத்திற்கு கழட்டிச் சென்று சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்கிற நிலை உருவாகி இருக்கின்றது.
இத்துடன், இயக்கத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு சிறிய திரை, ஸ்விட்ச் கியர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்கூட்டரின் பின் பக்கமும் முன் பக்கத்தைபோலவே மாறுபட்ட தோற்றத்தில் உள்ளது. முட்டை வடிவ எல்இடி பிரேக் லைட்-தான் பின் பக்கத்திற்கான மிகப் பெரிய பிளஸ்ஸாக உள்ளது.
டிப்ளோஸ் மேக்ஸ்-இன் பேட்டரி மற்றும் பிற அம்சங்கள் பற்றிய விபரம்: இரண்டு பேட்டரி பேக்குகளே இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இரண்டையும் சேர்த்தாலே அதன் திறன் 3.7 kWh ஆக இருக்கும். இதை ஸ்கூட்டரிலேயே வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
இல்லை என்றால் வீடு அல்லது அலுவலகத்திற்கு கழட்டிச் சென்றும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். முழுமையாக சார்ஜ் 3-4 மணி நேரங்கள் வரை தேவைப்படும். இந்த பேட்டரி பேக்கை பாதுகாப்பாக அகற்றுவதற்காக 'கில் சுவிட்ச்' வழங்கப்பட்டு இருக்கின்றன. இதை கழட்ட 3-4 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.
மின்சார மோட்டாரை பொருத்த வரை இந்த ஸ்கூட்டரில் 3.58 பிஎச்பி (2.67 kW) மற்றும் 138 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட ஹப் வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் மணிக்கு 63 கிமீ வேகம் வரை இயங்க முடியும்.
இதைத்தொடர்ந்து, சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின் பக்கத்தில் அட்ஜஸ்டபிள் டூயல் ஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 220 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 180 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
வீல்களைப் பொருத்த வரை 12 அங்குல வீலில் 90/90 அளவுள்ள ட்யூப்லெஸ் டயர்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்கூட்டரின் மொத்த நீளம் 1,960 மிமீ ஆகும். இதேபோல், இதன் அகலம் 720 மிமீட்டராகவும், உயரம் 1,125 மிமீட்டராகவும், வீல் பேஸ் 1,430 மிமீட்டராகவும் உள்ளது. ஸ்கூட்டரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 மிமீ ஆகும். ஆகையால், கரடு முரடான பாதையாக இருந்தாலும் இது சமாளித்துவிடும். ஸ்கூட்டரின் மொத்த எடை 137 கிலோவாக உள்ளது. ஆகையால், ஹேண்ட்லிங் செய்வது அவ்வளவு சிரமமாக இருக்காது என தெரிகின்றது.
டிரைவிங் அனுபவம் எப்படி இருந்தது? தொடக்கத்தில் வழக்கமான ஸ்கூட்டர்களுக்கான அனுபவமே இந்த வாகனத்தில் எங்களுக்குக் கிடைத்தது. குறிப்பாக, மணிக்கு 30 கிமீ வேகத்தில் பயணிக்கும்போது வரை த்ரோட்டிலின் ரெஸ்பான்ஸானது நன்றாகவே இருந்தது. ஆனால், ஸ்கூட்டரின் உச்சபட்ச வேகத்தை எட்டும்போது இந்த அனுபவம் அடுத்தகட்டத்திற்கு சென்றுவிட்டது.
குறிப்பாக, டாப் ஸ்பீடான மணிக்கு 63 கிமீ வேகத்தை எட்டும்போது உண்மையில் உற்சாகமான அனுபவம் எங்களுக்குக் கிடைத்தது. தனி ஆளாக இருக்கும் போது இந்த ஸ்கூட்டர் 14 டிகிரி சாய்வாக இருந்த சாலையையும் சர்வ சாதாரணமாக ஏறிவிட்டது. ஆனால், வாகனத்தில் ரெண்டு பேர் இருந்தால் இந்த திறனில் சற்றே சுணக்கம் ஏற்படுகின்றது.
குறிப்பாக, இடையில் நிறுத்திவிட்டால் சூழல் மிகுந்த சிக்கலானதாக மாறிவிடும். தொடர்ந்து, இதன் மிகவும் சௌகரியமானதாக உள்ளது. ஆனால், சஸ்பென்ஷன் செட்-அப் அந்த அளவிற்கு இல்லை. அது கடினமானதாகவே இருந்தது. ஆகையால், பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலையில் அசௌகரியமான ரைடு அனுபவமே இதில் கிடைக்கும்.
அதேநேரத்தில், பிரேக்கிங் அனுபவம் மிக சிறந்ததாக உள்ளது. எனவே, பாதுகாப்பான ரைடு சற்றே உறுதியாகி உள்ளது. தொடர்ந்து, இந்த வாகனத்தில் ஸ்டோரேஜ் வசதி இல்லாதது பெரிய கவலைக்குறைய விஷயமாக உள்ளது. தினசரி பயன்பாட்டிற்காக கொண்டு வந்துவிட்டது, இதை கொடுக்க நிறுவனம் தவறிவிட்டது.
அதேவேளையில், இதன் ஃப்ளோர்போர்டு (கால் வைக்கும் இடம்) சற்றே பெரியதாக இருக்கின்றது. ஆகையால், ரைடர்களுக்கு இந்த விஷயத்தில் அசௌகரியம் ஏற்படாது. நாங்கள் இந்த வாகனத்தை ஓட்டி பார்த்தது குறிப்பிட்ட ஓர் சிக்கலைச் சந்தித்தோம். அது, வாகனம் கொஞ்சம் நேரம் சும்மா நின்றுக் கொண்டிருந்தபோது வாகனம் தானாகவே ஆஃப் ஆகிவிட்டது.
அதை ஆன் செய்தபோது உடனே ஆன் ஆகவில்லை. ஆகையால், இருக்கைக்கு அடியில் இருக்கும் கில் சுவிட்ச்சை ஒரு முறை ஆஃப்-ஆன் செய்து பயன்படுத்தினோம். அப்போது அது ஸ்டார்ட் ஆகிவிட்டது. இதற்காக 4-5 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நியூமரஸ் மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் இந்த ஸ்கூட்டர் சில நிலைகளில் சிக்கலைத் தந்தாலும், பல நிலைகளில் எங்களைக் கவரும் விதமாக இருந்தது. முற்றிலும் மாறுபட்ட லுக் கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஓர் சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு ரூ. 1 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலையே நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், சந்தையில் இது சவாலான இ-ஸ்கூட்டராக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









